ஸ்குவாட்ஸ் என்பது அனைவரும் கட்டாயம் செய்ய வேண்டிய ஒரு அடிப்படையான உடற்பயிற்சி ஆகும். இது ஒரு சிறந்த Compound Exercise. கால்கள், இடுப்பு மற்றும் முதுகில் உள்ள தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இது உங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கவும், உங்கள் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் சிறந்த உடற்பயிற்சியாகும். இந்தப் பதிவில் தினசரி ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.
தசைகளை வலுப்படுத்தும்: தினசரி ஸ்குவார்ட்ஸ் உடற்பயிற்சி செய்வதால் கால்கள், இடுப்பு மற்றும் முதுகுப்பகுதிகளில் உள்ள தசைகள் வலுவாகும். குறிப்பாக Quadriceps, Hamstring, Glutes மற்றும் Calves போன்ற தசைகளை வலுப்படுத்த இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வலுவான தசைகள் உங்களது அன்றாட நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட உதவும்.
எலும்புகளை வலுப்படுத்தும்: ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சி எலும்புகளுக்கு எடையைத் தாங்கும் அழுத்தத்தை வழங்குவதால், எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற வயது தொடர்பான எலும்பு நோய்களைத் தடுக்க உதவும்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: ஸ்குவாட்ஸ் உடற்பயிற்சியானது இதயத்துடிப்பை அதிகப்படுத்தி ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் இதய நோய்களின் அபாயம் குறைகிறது.
எடை இழப்புக்கு உதவும்: இந்த உடற்பயிற்சி செய்யும்போது உடலில் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகிறது. எனவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், தினசரி ஸ்குவார்ட்ஸ் செய்வதால் நல்ல பலன் கிடைக்கும்.
மனநிலையை மேம்படுத்தும்: இந்த உடற்பயிற்சியின் போது எண்டோர்பின் என்ற ஹார்மோன்கள் வெளியாகின்றன. இவை மனதை மேம்படுத்தவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.
செயல்திறனை மேம்படுத்துகிறது: விளையாட்டு வீரர்கள் மற்றும் தடகள வீரர்களின் செயல் திறனை மேம்படுத்த ஸ்குவார்ட்ஸ் உடற்பயிற்சி உதவுகிறது. இதன் காரணமாகவே பல விளையாட்டு வீரர்கள் இதை செய்வதை நீங்கள் பார்க்க முடியும். இது வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் வேகத்தை அதிகரிக்க உதவும்.
இப்படி ஸ்குவார்ட்ஸ் உடற்பயிற்சியை தினசரி செய்வதால் பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. இதனால், உங்கள் ஒட்டுமொத்த உடல் செயல்பாடும் மேம்படுவதால், இந்த ஒரு உடற்பயிற்சி செய்தால் போதும், உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஸ்குவார்ட்ஸ் உடற்பயிற்சி செய்யும்போது சரியான வழிமுறைகளைப் பின்பற்றுவது முக்கியம். நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு எடையை முறையின்றி தூக்கினால், முதுகு வலி மற்றும் காயங்கள் ஏற்பட வழிவகுக்கும். எனவே இதை செய்யும்போது கவனத்துடன் இருக்க வேண்டியது முக்கியம்.