நம்மில் பலரும் ஏதாவதொரு சூழ்நிலையில் ஜீரண மண்டல உறுப்புகளில் உண்டான கோளாறு காரணமாக டையாரியா (Diarrhoea) எனப்படும் வயிற்றுப் போக்கு நோயால் தாக்கப்பட்டு அவதியுற நேரலாம். இந்நோய் ஆரம்ப நிலையிலிருக்கும்போதே ஆயுர்வேதம் பரிந்துரைக்கும் சில எளிய பானங்களை வீட்டிலேயே தயாரித்து அருந்தி இந்நோயை குணப்படுத்தலாம். அந்த பானங்கள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
* டையாரியா பிரச்னையை கையாள சிறந்த வழி லெமன் வாட்டர் அருந்துவதாகும். இதிலுள்ள இயற்கையான ஆசிட் தன்மையானது உணவு ஜீரணமாக உதவுவதோடு, உடலில் நீர்ச்சத்தின் அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்கவும் செய்யும்.
* இஞ்சி டீ வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தவும் உணவு நன்கு ஜீரணமாகவும் உதவக்கூடியது. ஒரு கப் இஞ்சி டீயை காலையில் அருந்தினால் வயிற்றில் ஏற்பட்டுள்ள வீக்கம் குறையும். பிடிப்புகள் இருந்தால் அவையும் சமநிலைப்படும். ஜீரணம் சீராகும்.
* வயிற்றுப் போக்கு உள்பட அனைத்து விதமான ஜீரணக் கோளாறுகளும் சீரகத் தண்ணீர் அருந்துவதால் குணமாகும். ஜீரண மண்டல அனைத்து உறுப்புகளின் இயக்கங்களையும் மீண்டும் நார்மல் நிலைக்கு கொண்டு வரவும் நோய் தீவிரமடைவதைத் தடுக்கவும் சீரகத் தண்ணீர் உதவுகிறது.
* ஒரு கிளாஸ் குளிர்ந்த பட்டர் மில்க் அருந்துவதால் அதிலுள்ள ப்ரோபயோடிக்ஸ் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அங்குள்ள, ஜீரணத்துக்கு உதவக்கூடிய நல்ல பாக்டீரியாக்களின் அளவை சமநிலைக்குக் கொண்டுவர உதவும். மேலும், மோரிலுள்ள ஊட்டச் சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியம் தரும்; உடலுக்கு நீரேற்றம் கிடைக்கவும் செய்யும்.
* தேங்காய் தண்ணீர் அருந்துவதால் வயிற்றுப் போக்கின்போது ஏற்பட்ட நீர் மற்றும் கனிமச்சத்துகளின் இழப்பு மீண்டும் இட்டு நிரப்பப்படும். ஜீரண மண்டல ஆரோக்கியமும் மேம்படும்.
* பெருஞ்ஜீரகத்தை நீரில் ஊற வைத்து அந்த நீரைக் குடிப்பதாலும், பெருஞ்ஜீரகத்தில் டீ போட்டு அருந்துவதாலும் வயிறு வீக்கம், பிடிப்புகள் வாய்வு போன்ற ஜீரண மண்டலக் கோளாறுகள் அனைத்தும் நீங்கும்.
* கெமோமைல் (Chamomile) டீ அருந்துவதும் வயிற்றுக் கோளாறுகளை நீக்கி, வயிற்றுப் போக்கை குணப்படுத்த உதவும்.
மேலே கூறிய வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றிய பிறகு நோயின் தீவிரம் அதிகமானாலோ அல்லது நோய் குணமடையும் அறிகுறி தெரியவில்லை என்றாலோ உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.