மனிதர்களின் சுவாச செயல்பாடு சிறப்பாக இருக்க நுரையீரல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம். சிலருக்கு அடிக்கடி சளி மற்றும் இருமல் தொந்தரவுகளால் நுரையீரல் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. வீட்டில் இருக்கும் மூலிகைகளை கொண்டே நுரையீரலை ஆரோக்கியமாக செயல்பட வைக்கலாம்.
1. துளசி: பூஜைக்கு பயன்படும் துளசி மனிதர்களின் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு முக்கியப் பங்கு வகிக்கிறது. அதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்பு, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் சளி போன்ற சுவாச நிலைமைகளை சரி செய்ய உதவுகிறது. சிறிதளவு துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து தேநீராக அருந்தலாம் அல்லது புதிய துளசி இலைகளை மென்று சாப்பிடலாம். துளசி சாற்றை வெதுவெதுப்பான நீரில் தேனுடன் கலந்து பயன்படுத்தலாம்.
2. மஞ்சள்: மஞ்சளில் குர்குமின் என்கிற சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்பு உள்ளது. இது நுரையீரலின் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. நாள்பட்ட தடுப்பு, நுரையீரல் நோய் மற்றும் ஆஸ்துமா போன்ற நிலைமைகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். மஞ்சளை தேநீர் அல்லது பாலுடன் கலந்து அருந்தலாம்.
3. இஞ்சி: இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் சளியை குணப்படுத்தி நுரையீரல் சுழற்சியை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் காய்ச்சல் மற்றும் சுவாசத் தொற்று நோய்களுக்கு இஞ்சி பயனுள்ள பொருளாக இருக்கிறது. இஞ்சி தேநீர் குடிக்கலாம் அல்லது தேனுடன் கலந்து சாறாக உட்கொள்ளலாம். இஞ்சித் துண்டுகளை நறுக்கி மென்று சாப்பிடலாம் அல்லது சமையலறையில் பயன்படுத்தலாம்.
4. திப்பிலி: திப்பிலி ஒரு மூச்சுக்குழாய்க்கு நன்மை பயக்கும் பொருளாக செயல்படுகிறது. இது காற்றுப்பாதையில் உள்ள அடைப்புகளை சரி செய்யவும் சுவாசத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது ஆஸ்துமா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி போன்ற நிலைமைகளுக்கு நன்மை பயக்கும் பொருளாகும். திப்பிலியை பொடி செய்து தேன் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகலாம்.
5. ஓமம்: ஓமத்தில் ஆன்ட்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. அவை நுரையீரலில் இருந்து சளியை அகற்ற உதவுகின்றன. இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்பு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. ஓம விதைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்கலாம் அல்லது ஓமத்தை மென்று வெந்நீர் குடிக்கலாம். மேலும், ஓமம் நல்ல ஜீரண சக்தியை அளிக்கிறது.
6. புதினா: புதினாவில் மெந்தால் உள்ளது. இது இயற்கையான தேக்க நீக்கியாக செயல்படுகிறது. மேலும், சுவாசக் குழாயை சுத்தப்படுத்தி சுவாசத்தை எளிதாக்குகிறது. புதினா டீ போட்டு குடிக்கலாம் அல்லது புதினா சட்னி செய்து உண்ணலாம். புதினா இலைகளைப் போட்டு கொதிக்க வைத்த நீரை ஆவி பிடிக்கலாம்.
7. அதிமதுரம்: அதிமதுர வேரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை நுரையீரல் மற்றும் தொண்டையில் ஏற்படும் எரிச்சலை குறைக்க உதவுகின்றன. இது சளியை எளிதாக வெளியேற்றுகிறது. அதிமதுரத்தின் வேரை வாயில் போட்டு சுவைத்தால் வித்தியாசமான இனிப்பு சுவை கிடைக்கும். நா வறட்சியை அகற்றும்.