நாம் சுகாதாரமற்ற உணவுகளை உண்ணும்போதோ அல்லது சுகாதாரமற்ற நீரைக் குடிக்கும்போதோ, நோயை உண்டாக்கக்கூடிய ஒட்டுண்ணிகள் (Parasites) நம் உடலுக்குள் சுலபமாகச் சென்று நம் ஜீரண மண்டல உறுப்புகளுக்குள்ளிருக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை ஒட்டி வாழ ஆரம்பிக்கும். அப்போது அவை நம் உடலுக்கு சேர வேண்டிய ஊட்டச்சத்துக்களை பங்கு போட்டுக் கொள்வது மட்டுமின்றி, பலவித நோய்களை உண்டுபண்ணவும் காரணிகளாகின்றன. இந்த ஒட்டுண்ணிகளை இயற்கை முறையில் ஒழிக்க நாம் உண்ண வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
* பூண்டில் உள்ள அல்லிசின் என்ற கூட்டுப்பொருளானது ஆன்டி மைக்ரோபியல் குணம் கொண்டது. இது பாராசைட்களை ஜீரண மண்டலப் பாதையிலிருந்து வெளியேற்ற உதவுகிறது.
* பூசணி விதைகளில் குகர்பிட்டாசின் (Cucurbitacin) என்றொரு அமினோ அமிலம் உள்ளது. இது ஆன்டி பாராஸைடிக் குணம் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது. பூசணி விதைகளை பச்சையாக உண்பதாலும், பூசணி விதை எண்ணெய்யை சமையலில் சேர்த்து சாப்பிடுவதாலும் இந்த பாராசைட்களை உடலிலிருந்து வெளியேற்ற முடியும்.
* பப்பாளி விதைகளில் பபைன் (Papain) என்றொரு என்சைம் உள்ளது. இது ஆன்டி பாராஸைடிக் குணம் கொண்டது. இவ்விதைகளை உண்பதாலும், அவற்றை உபயோகித்து டீ போட்டு குடிப்பதாலும், ஜீரண உறுப்புகளில் வளரும் பாராசைட்களை அழிக்க முடியும்.
* இஞ்சி ஆன்டி மைக்ரோபியல் குணம் கொண்டது. இது ஜீரண மண்டல உறுப்புகளைப் பலப்படுத்தவும், செரிமானம் சீராக நடைபெறவும் உதவி புரிகிறது. ஜீரண மண்டலப் பாதையில் பாராசைட்கள் வளர்வதை ஒருபோதும் அனுமதிக்காத குணம் கொண்டது இஞ்சி.
*மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற கூட்டுப்பொருள் ஆன்டி மைக்ரோபியல் மற்றும் ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணங்கள் கொண்டது. இவை ஜீரண மண்டலப் பாதையில் உண்டாகும் வீக்கங்களைக் குணப்படுத்தி பாராசைட்களை அழிக்கவும் உதவுகின்றன.
* பாராசைட்களுக்கு எதிராக செயல்படக்கூடிய பாரம்பரிய மருந்துகளின் தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படுவது ஓம்வுட் (Worm wood) என்றொரு மூலிகைத் தாவரம். இத்தாவரத்தின் இலைகளால் டீ தயாரித்தும் குடிக்கலாம்.
* இலவங்கத்தில் யூகெனால் (Eugenol) என்றொரு ஆன்டி மைக்ரோபியல் குணம் கொண்ட கூட்டுப்பொருள் உள்ளது. இலவங்க எண்ணெய் அல்லது இலவங்கத்தை நசுக்கி உபயோகிக்கும்போது பாராசைட்கள் கொல்லப்படுகின்றன; ஜீரணம் சிறப்புற நடைபெறுகிறது.
மேலே கூறிய உணவு முறைகளைப் பின்பற்றியும், சுற்றுப்புற மற்றும் உடல் சுகாதாரத்தைப் பேணியும் வாழப் பழகிக்கொண்டால் எந்த பாராசைட்களும் உடலுக்குள் புக முடியாத ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.