நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவு எப்பொழுதும் ஒரே அளவில் இருப்பதில்லை. சிறந்த முறையிலான டயட்டை பின்பற்றுவது, தினசரி நடைபயிற்சி மேற்கொள்வது, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்வது, ஸ்ட்ரெஸ் இல்லாத மன நிலையுடன் இருப்பது போன்றவற்றின் மூலம் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்துப் பராமரிக்க முடியும். அத்துடன் இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ள 7 வகை பச்சை நிறமுடைய காய்கறி மற்றும் பழங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸ் அருந்துவதாலும் கூடுதல் நிவாரணம் கிடைக்கும். அவை என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
1. பசலை - வெள்ளரி ஜூஸ்: பசலைக் கீரை குறைந்த கலோரி அளவும் அதிக ஊட்டச் சத்துக்களும் நிறைந்தது. வெள்ளரிக் காய் உடலை நீரேற்றத்துடன் வைக்கவும் நச்சுக்களை உடலிலிருந்து வெளியேற்றவும் உதவும்.
2. எலுமிச்சை - காலே ஜூஸ்: காலேயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் நார்ச்சத்தும் அதிகம் உள்ளன. லெமன் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் உடல் புத்துணர்ச்சி பெறவும் உதவும்.
3. செலரி - க்ரீன் ஆப்பிள் ஜூஸ்: செலரியில் உள்ள அதிகளவு நீர்ச்சத்து உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவும். க்ரீன் ஆப்பிள் இயற்கையான இனிப்புச் சத்தும் அதிகளவு நார்ச்சத்தும் அடங்கியது. இது செரிமானம் சிறப்பாக நடைபெறவும் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்கவும் உதவி புரியும்.
4. புரோக்கோலி - இஞ்சி ஜூஸ்: புரோக்கோலி அதிகளவு ஊட்டச் சத்துக்கள் நிறைந்த ஒரு க்ரூஸிஃபெரஸ் வெஜிடபிள். இஞ்சி இன்சுலின் சென்சிட்டிவிட்டி மேன்மையடைய உதவி புரியும்.
5. புதினா - எலுமிச்சை ஜூஸ்: புதினா செரிமானம் சிறப்பாக நடைபெற உதவும். எலுமிச்சையிலுள்ள வைட்டமின் C சத்து இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவி புரியும்.
6. பார்ஸ்லே - க்ரீன் கிரேப் ஜூஸ்: பார்ஸ்லேயில் அதிகளவு வைட்டமின்கள் மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்துள்ளன. மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில், பச்சை நிற கிரேப் பழத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறைவு.
7. அவகாடோ - பசலை ஜூஸ்: இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவி புரியக்கூடிய ஆரோக்கியம் நிறைந்த கொழுப்புகள் அவகாடோ பழத்தில் அதிகம். உடலுக்குத் தேவைப்படும் முக்கியமான ஊட்டச் சத்துக்களை வழங்கவல்லது பசலைக் கீரை.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் மேற்கூறிய 7 வகை ஜூஸ்களை அடிக்கடி உட்கொண்டு உடல் ஆரோக்கியம் பெறலாம்.