குளிர்கால நேரங்களில் குடலுக்கு குதூகலமும் உடலுக்கு ஆரோக்கியமும் தந்து, உடல் உஷ்ணத்தை குறையாமல் பாதுகாக்க உதவும் எட்டு வகை சுவையான உணவுகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
சிறு தானியங்களிலேயே சிறந்ததாகக் கருதப்படும் கம்புவால் (Pearl Millet) செய்யப்படும் கிச்சடியில் பாஸ்பரஸ், மக்னீசியம், நார்ச்சத்து போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளன. இதில் சேர்க்கப்படும் பச்சைப் பட்டாணி, காரட், பீன்ஸ், இஞ்சி, கறிவேப்பிலை போன்றவற்றிலிருந்து புரதம், வைட்டமின்கள் என பல சத்துக்கள் கிடைக்கின்றன. வீட்டில் தயாரித்து சுடச் சுட தேங்காய் சட்னியுடன் உண்ணும்போது அதன் சுவையே தனி.
பாசிப்பருப்பை பாலில் வேக வைத்து சர்க்கரை, நெய், முந்திரி சேர்த்து தயாரிக்கப்படுவது மூங் டால் அல்வா (Moong Dal Halva). நாக்கில் வைத்தவுடன் கரையும் இதன் சுவைக்கு மயங்காதவர் எவரும் இருக்க மாட்டார்கள்.
சர்சன் கா சாக் (Sarson ka Saag) எனப்படும் இந்த டிஷ் கடுகுக் கீரையுடன் மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு வகை கூட்டு. அதிக சத்துக்கள் நிறைந்தது. உடலுக்கு ஊட்டச்சத்துக்களையும் உஷ்ணமும் தரக்கூடியது. பஞ்சாபில் சோள ரொட்டிக்கு தொட்டுக்கொண்டு உண்ணும் பிரதான உணவு இது.
துருவிய காரட்டை பாலில் வேக வைத்து சர்க்கரை, நெய், முந்திரி சேர்த்து தயாரிக்கப்படும் காரட் அல்வாவில் சுவையும் சத்துக்களும் மிகவும் அதிகம். பீட்டா கரோடீன் மற்றும் வைட்டமின் A வும் நிறைந்தது. சாப்பாட்டுக்குப் பிறகு டெசெர்ட்டாக உண்ணப்படுவது. குளிரை குறைத்து உடலுக்கு வெது வெதுப்பைத் தரக்கூடியது.
தென்னிந்தியர்களின் முக்கிய உணவான ரசத்தை, சூடாக உண்ணும்போது அதன் சூடு உடல் முழுக்கப் பரவி புத்துணர்ச்சி தரும். சளி இருமலையும் குறைக்கக் கூடியது.
கோந்து லட்டு என்பது, மரப்பட்டைகளிலிருந்து சேகரிக்கப்படும் ஒரு வகை உண்ணத் தகுந்த கோந்திலிருந்து தயாரிக்கப்படும் இனிப்பு லட்டு. இதன் முக்கிய குணம் குளிர் காலத்தில் உடலிலிருந்து குளிர்ச்சியை வெளியேற்றுவது.
பாலோடு கிரீம் சேர்த்து நுரைத்து வரும் வரை கடைந்து, பின் அதை நட்ஸ் போன்ற சத்துக்கள் நிறைந்த டாப்பிங்ஸ் கொண்டு அலங்கரிக்க, 'மலாய் மக்கன்' என்ற அருமையான பானம் கிடைக்கும். இதை காலை உணவுடன் சேர்த்து அருந்த பிரேக்ஃபாஸ்ட் முழுமையடையும்.
ஆட்டிறைச்சி கொண்டு தயாரிக்கப்படும், 'நிஹரி' என்றொரு சூப்பானது உடலுக்கு அதிகளவு புரோட்டீனும் கொழுப்புச் சத்தும் கொடுத்து உடல் உஷ்ணத்தை தக்க வைக்க உதவுகிறது.
ஆரோக்கியம் தரும் உணவுகளை உண்போம்; குளிரை வெல்வோம்.