உலகம் முழுக்க காற்று மாசுபாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. மாசுபட்ட காற்றை உள்ளிழுக்கும் போது மனிதர்களின் நுரையீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. மாசுபாடு மிக்க காற்று சுவாச மண்டலத்தில் நுழைந்து பல்வேறு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக மனிதர்களுக்கு ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற பாதிப்புகளை உண்டாக்குகிறது.
நுரையீரலில் இருக்கும் நச்சினை போக்கி அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் 9 பானங்கள்
சிறிய மஞ்சள் கிழங்கு துண்டை பொடியாக நசுக்கி , அதனுடன் ஒரு தேக்கரண்டி மிளகு, ஒரு கிராம்பு ஆகியவற்றையும் பொடித்து , பாலைக் காய்ச்சி அதனுடன் மிளகு, கிராம்பு கலந்த மஞ்சள் பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். பால் காய்ந்து பொன்னிறமாக மாறிய உடன் இறக்கி வெது வெதுப்பாக குடிக்க வேண்டும். இது நுரையீரலில் உள்ள சளியை போக்குகிறது. மஞ்சள் நுரையீரலில் உள்ள தொற்றுக்களை நீக்குகிறது.
அரை தேக்கரண்டி அதிமதுரத்தை தேயிலை தூளோடு சேர்ந்து தேநீராக காய்ச்சி குணமாகும் வரை தினசரி குடித்து வரலாம். அதிமதுரம் ஆயுர்வேதத்தில் நுரையீரலை மேம்படுத்தும் மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இது நுரையீரலில் இருந்து சளியை அகற்றி சுவாசத்தை மேம்படுத்துகிறது.
துளசி , இஞ்சி, கிராம்பு மூன்றையும் சம அளவில் ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து, அதை நன்கு இடித்து சுடு தண்ணீரில் இட்டு காய்ச்சி அதை தினசரி அருந்தி வரலாம். இந்த துளசி பானம் நுரையீரலில் உள்ள நச்சுத்தன்மையைக் வெளியேற்றும். இந்த மூலிகை பானம் குளிர்காலத்தில் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
தேங்காய் பால் நுரையீரல் அழற்சியை குணமாக்க உதவி செய்வதோடு குடலில் உள்ள அழற்சியையும் மேம்படுத்த உதவுகிறது. சுவாசம் இயல்பாக இருக்க தேங்காய் பால் பலனளிக்கிறது.
கிரீன் டீ ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. இது நுரையீரலில் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது. தினசரி கிரீன் டீ அருந்துபவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி உருவாகி சுவாச மண்டலத்தை பாதுகாக்கிறது.
வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு தேக்கரண்டி அளவு எலுமிச்சை சாறோடு , கால் தேக்கரண்டி இஞ்சி சாற்றையும் தேனோடு சேர்த்து கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், எலுமிச்சை இஞ்சி சாறு சுவாச மண்டலத்தை சுத்தப்படுத்தவும், நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது
கேரட் சாறில் நிறைய வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ளன. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி சுவாசக் கோளறுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
சுக்கையும் மிளகையும் சம அளவில் இடித்து ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து வெந்நீரில் கரைத்து , அதனுடன் பனங் கற்கண்டையும் சேர்த்து குடித்து வந்தால் இருமல் தொல்லை நீங்கி இயல்பான சுவாசம் கிடைக்கும்.
கைப்பிடி அளவு ஆடுதொடா இலையை வெந்நீரில் இட்டு கஷாயமாகக் காய்ச்சி வடித்துக் கொள்ளவும் , 50 மிலி கஷாயத்தில் ஒரு தேக்கரண்டி பனை வெல்லம் சேர்த்து காலை மாலை இருவேளையும் பருகினால் நுரையீரல் விரைவாக மேம்படும். சளி, இருமல் தொல்லைகள் அனைத்தும் போய்விடும் .
மேற்கூறிய மூலிகை பானங்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடல் நலம் சார்ந்தது. ஒரு சிலருக்கும், உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். அதனால் மருத்துவரிடம் கலந்தாலோசித்து பயன்படுத்தவும்.