A flower medicine that protects the skin from the summer heat https://bouqs.com
ஆரோக்கியம்

கோடைக்கால வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும் மலர் மருத்துவம்!

மகாலெட்சுமி சுப்ரமணியன்

பூக்கள் என்றாலே அதன் வாசமும், மென்மையான அழகுதான் நினைவில் வரும். மலர்களின் வாசம், பெண்களின் கேசத்திற்கு அழகு சேர்க்கும் என்பதையும் தாண்டி பல மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. சில பூக்களும் அவற்றின் மருத்துவப் பயன்களும் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ரோஜா: பன்னீர் ரோஜா இதழ்களுடன், வேப்பிலை சேர்த்து அரைத்து சில துளிகள் சாறை முகத்தில் தடவினால் முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கி சருமம் பளிச்சென்று இருக்கும். ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து உதடுகளின் மீது தடவி வர, நாளடைவில் உதடுகள் மென்மையாக சிவந்த நிறத்துடன் அழகாகிவிடும்.

மரிக்கொழுந்து: மரிக்கொழுந்து சாறு மற்றும் சந்தனத்தூள் தலா 2 டீஸ்பூன் சேர்த்து கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து கழுவினால் சரும நிறம் மேம்படுத்துடன் மென்மையாகவும்  இருக்கும்.

சாமந்திப்பூ: ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சாமந்திப்பூவின் இதழ்களை போட்டு இரவு முழுக்க மூடி வைக்கவும். மறுநாள் காலையில் அந்த தண்ணீரால் முகம் கழுவினால் முகம் பொலிவு பெற்று இளமையான தோற்றம் கிடைக்கும்.

மல்லிகைப்பூ: ஒரு கப் மல்லிகைப்பூவுடன் நான்கு இலவங்கம் சேர்த்து அரைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் குழைத்து முகம், நெற்றி, கழுத்து, முதுகு பகுதிகளில் தடவி சற்று நேரம் கழித்து கழுவினால் வெயிலால் ஏற்பட்ட கருமை நீங்கி சீரான நிறம் கிடைக்கும்.

மகிழம்பூ: கைப்பிடி அளவு மகிழம்பூவை ஊற வைத்து அரைத்து அத்துடன் அதே அளவு பயத்தம் மாவு கலந்து கோடைக்காலம் முழுவதும் சோப்புக்கு பதில் உபயோகிக்க வெயிலால் ஏற்படும் வேர்க்குரு, வேனல் கட்டிகள் வராது.

ஆவாரம் பூ: நூறு கிராம் ஆவாரம் பூவை 50 கிராம் வெள்ளரி விதை, 50 கிராம் கசகசா சேர்த்து பொடியாக்கிக் கொண்டு இதில் தேவைப்படும் பவுடரை எடுத்து கொண்டு பால் சேர்த்து கலந்து முகம், கழுத்து கை கால்களில் பேக் போல போட்டு விரல்களால் வட்ட வடிவில் மசாஜ் செய்ய இயற்கையான சன் ஸ்கிரீனாக செயல்பட்டு மேனி எழிலை. ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

தாமரைப்பூ: தாமரை இதழ்களை சிறிது பால் விட்டு அரைத்து உடல் முழுவதும் தேய்த்து சோப் உபயோகிக்காமல் குளித்தால் சரும துவாரங்களை இறுக்கி மென்மையாக்கும்.

ஜாதிமல்லியும் முல்லையும்: இந்தப் பூக்களை தலா ஒரு கப் எடுத்து 2 டீஸ்பூன் பால் சேர்த்து அரைத்து முகம், உடல் முழுக்க தடவி சிறிது நேரம் கழித்து  கடலை மாவு, பயத்தம் மாவு கலந்து குளியல்பொடி கொண்டு கழுவி குளித்து வர வெயில் கால சரும பிரச்னைகள் வராது.

செம்பருத்திப்பூ: செம்பருத்தியை சுத்தம் செய்து, அதனுடன் ஊறிய வெந்தயத்தையோ அல்லது வெந்தய பொடி சேர்த்தோ தயிரில் கலந்து தலைக்கு பேக் ஆக போட, உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் கேசத்தை பளபளப்பாக்கி பொடுகு, அரிப்பு போன்ற பிரச்னைகளை போக்கும்.

இப்படிப் பல பூக்களும் பலவிதமான பலன்களைத் தந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT