மனித உடலில் அதிக எடையுள்ள உறுப்பும், மிகப்பெரிய சுரப்பியும் கல்லீரல்தான். இது சுமார் 1.4 முதல் 1.6 கிலோ கிராம் எடை உள்ள பெரிய உள்ளுறுப்பு ஆகும். கல்லீரல் உடலியக்கத்திற்குத் தேவையான பற்பல வேதிப்பொருட்களை உருவாக்கிக் கொடுக்கின்றது. உடலிலுள்ள அனைத்து கழிவுப்பொருட்களையும் அகற்றுவது, உடலின் கொழுப்பை சீராக்க, இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மை நீக்க, நொதிகளை செயல்படுத்த, மற்றும் வளர்சிதை மாற்றத்தில் பங்கு வகிக்கிறது. அதனால்தான் கல்லீரல் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியமாகும்.
இந்திய மக்களை அச்சுறுத்தும் மரண நோய்களில் 10ல் ஒன்று கல்லீரல் நோய் என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவில் 5 பேரில் ஒருவருக்கு ஃபேட்டி லீவர் எனப்படும் கல்லீரல் கொழுப்பு பிரச்னை இருக்கிறதாம். சர்க்கரை நோயாளிகளில் 3ல் இரண்டு பேருக்கு கல்லீரல் பிரச்னை ஏற்படுகிறதாம்.
தற்போது கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கொழுப்பு கல்லீரல் நோயாளி இருக்கிறார். இது உடற்பயிற்சி இல்லாமை மற்றும் தவறான உணவு பழக்கத்தால் ஏற்படுகிறது. இது ஆரம்ப நிலையில் இருந்தால் அதை எளிய முறையில் சரி செய்யலாம் என்கிறார்கள். ஒரு நாளைக்கு ஒரு முறை துரித உணவு சாப்பிட்டாலே அது கல்லீரலை பாதிக்கும் என்கிறார்கள். ஃபேட்டி லீவர் பிரச்னையை தவிர்க்க தற்போது எடுத்துக்கொள்ளும் உணவில் 25 சதவீதத்தை குறைக்க வேண்டும். தினமும் 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
ஃபேட்டி லீவர் பிரச்னைகளை தவிர்க்க அல்லது சரிசெய்ய தினமும் தவறாது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங் இவற்றில் ஏதேனும் ஒன்றை செய்யலாம். ஒரு நாள் விட்டு ஒரு நாள் விரதம் இருப்பதன் மூலம் மூன்று மாதங்களில் இந்தப் பிரச்னையை சரி செய்யலாம் என்கிறார்கள் சிகாகோவின் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்.
ஃபேட்டி லிவர் பிரச்னையை நம் லைஃப் ஸ்டைல், தூக்கம், உணவு முறை மூலமாக ஓரளவு குறைக்க முடியும். இதுவே ஆல்கஹாலிக் வகை என்றால் கண்டிப்பாக மது பழக்கத்தை நிறுத்த வேண்டும். அதுவே வெறும் சாதாரண ஃபேட்டி லிவர் என்றால் கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைக்க வேண்டும். கொழுப்பை நேரடியாக எடுக்காவிட்டாலும் நம் சாப்பிடும் கார்போஹைட்ரேட்தான் கொழுப்பாகவும் மாறும். எனவே, கார்போஹைட்ரேட்டும் குறைவாக இருக்க வேண்டும். சர்க்கரையைக் குறைத்து அதிகமாக தண்ணீரை எடுக்க வேண்டும்.
பசலைக் கீரையில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை உள்ளன. இது கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. எனவே, கொழுப்பு கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள் பசலைக்கீரை குழம்பு, பசலைக்கீரை சூப் சாப்பிடலாம்.
பப்பாளியில் உள்ள பப்பைன் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. மேலும், இந்தப் பழம் புரதத்தை உடைக்க உதவுகிறது. எனவே, கொழுப்பு கல்லீரல் பிரச்னை இருந்தால் பப்பாளியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மஞ்சளில் குர்குமின், ஆன்டி ஆக்ஸிடன்ட் கள் உள்ளன. இவை கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, கொழுப்பு சேரவும் அனுமதிக்காது. இஞ்சியிலுள்ள ஜிஞ்சரால் நச்சுகளை நீக்குகிறது. எனவே, கொழுப்பு கல்லீரல் பிரச்னைகளுக்கு இஞ்சி மிகவும் நன்மை பயக்கும். இஞ்சி தேநீர் அல்லது மூல இஞ்சி குச்சி கொழுப்பு கல்லீரல் பிரச்னைகளுக்கு நன்மை பயக்கும். பெர்ரி பழங்கள் மற்றும் திராட்சை பழங்களை தினமும் சாப்பிட கொழும்பு கல்லீரல் பிரச்னை தீரும்.
கல்லீரல் சுத்தம் செய்யும் பணிக்கு நார்ச்சத்து நிறைந்த உணவுகள் அவசியம். இவை கல்லீரலில் தேங்கியுள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. அன்றாட உணவில் பார்லி, ஓட்ஸ் மற்றும் முழு கோதுமை போன்ற தானியங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். பீட்ரூட், ஆப்பிள், கேரட் ஆகியவை உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை அகற்ற உதவும். கிரீன் டீ கல்லீரலில் தேங்கியுள்ள கொழுப்பை அகற்ற உதவுகிறது. கல்லீரலின் இயற்கையான சுத்திகரிப்புக்கு சிட்ரஸ் பழங்களிலுள்ள வைட்டமின் சி உதவுகிறது. ஒமேகா 3 உள்ள கொட்டை வகைகள் கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது. பச்சை காய்கறிகளான காலிபிளவர், முட்டைகோஸ், புரோக்கோலி மற்றும் கீரை, பூண்டு போன்றவை கல்லீரல் செல்களை மீண்டும் உருவாக்குகிறது.
தினமும் இரவு சரியான நேரத்துக்குத் தூங்குவது, காலையில் காலைக் கடன்களை முடித்து, 7 மணி முதல் 9 மணிக்குள் காலை உணவை எடுத்துக்கொள்வது போன்றவை கல்லீரல் ஆரோக்கியத்துக்கு எளிய வழி என்கிறார்கள்.