கோடைக் கால பழங்களில் அதிக ஊட்டச்சத்துகள் இருக்கும். அதில் முதலிடம் மாம்பழத்திற்குதான். அமெரிக்க வேளாண்மைத்துறையின் ஆய்வின்படி 100 கிராம் மாம்பழத்தில் 60 கலோரி உள்ளது. குறைந்த கலோரி உணவுகளை சாப்பிட விரும்புகிறவர்கள் மாம்பழம் சாப்பிடலாம்.பொதுவாக கோடைக்காலங்களில் அனைவரின் வீடுகளிலும் இருக்கக் கூடிய பழங்களில் ஒன்றுதான் மாம்பழம். இதனை தனியாக அப்படியே சாப்பிடுவது மட்டுமே நல்ல பலனைத் தரும்.
கோடைக்காலத்தில் இதனை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள உடலில் கொலஸ்டிரால் குறையும், புற்றுநோயை தவிர்க்கும், சரும அழுக்குகளை அகற்றும், செரிமானத்தை துரிதப்படுத்தும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கும். மாம்பழம் அதிகமாக இருக்கின்றன என்பதால் அதனை அளவிற்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
பழங்கள் என்றாலே நோய் எதிர்ப்புக்கு பஞ்சமே இருக்காது. அதிலும் மாம்பழங்களில் வைட்டமின் A மற்றும் C இருக்கின்றது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். மாம்பழம் மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய்களை தடுக்கிறது. காரணம், அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் இரத்த புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாகக் கண்டறிந்துள்ளனர்.
மாம்பழங்களில் அமிலேஸ், புரோட்டீஸ் மற்றும் லிபேஸ் போன்ற செரிமான நொதிகள் இருக்கின்றன. இது கெட்ட கொழுப்பை கரைத்து வயிற்றில் உள்ள உப்புசம், வாய்வு போன்ற பிரச்னைகளைத் தடுக்கிறது. கெட்ட கொலஸ்ட்ராலை கரைத்து செரிமானத்திற்கு தேவையான நொதியங்களை சீர்ப்படுத்துகிறது. டயட் பிளானில் இருப்பவர்கள் மாம்பழங்களை தாராளமாக சாப்பிடலாம்.
உயர் இரத்த அழுத்தம் அதிகமாக ஏற்படுபவர்களுக்கு மாம்பழம் சிறந்த மருந்தாக இருக்கும். இந்த பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வேலையைப் பார்க்கின்றது. கர்ப்பிணிப் பெண்கள் மாம்பழங்களை விரும்பி சாப்பிடுவார்கள். இதிலிருக்கும் புளிப்பு மற்றும் இனிப்பு கலந்த சுவை அவர்களின் வாய்க்கு இனிமையாக இருக்கும். கர்ப்பிணிகளின் இரும்புச்சத்து குறைபாட்டிற்கு மாம்பழம் நல்லது.
முகப்பருவை மறையச் செய்ய மாம்பழம் உதவுகிறது. அது சருமங்களின் அடைபட்ட துவாரங்களை திறந்து முருப்பருக்களை மறைய வைக்கும். இதற்கு மாம்பழ கூழை முகத்தில் 10 நிமிடங்கள் பேஸ்ட் போல பூசி காய வைத்து பின்னர் கழுவி விட வேண்டும். பெண்களின் ஹார்மோன் செயல்பாடுகள் சமநிலையில் இருக்க மாம்பழம் உதவுகிறது. பெண்களின் மாதவிடாய் சுழற்சி பிரச்னைகளை சீராக்கி, கருப்பை கழிவுகளை நீக்கவும் உதவுகிறது. மாதவிடாய் நேரங்களில் வெறும் வயிற்றில் மாம்பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில் மாம்பழங்களில் இருக்கும் சில பொருட்கள் உதிரப்போக்கை அதிகப்படுத்தும்.
மாம்பழத்தில் உள்ள அதிகப்படியான வைட்டமின் ஏ மற்றும் சி சருமத்தில் கொலாஜன் புரதத்தை உடலில் சுரக்கச் செய்து வயதான தோற்றம் ஏற்படும் நிலையை தள்ளி வைக்கும். சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து சருமச் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். மாம்பழத்தை தோலுடன் சாப்பிட, அது உங்கள் எடையை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளும் என்கிறது ஆஸ்திரேலிய பல்கலைக்கழக ஆய்வு.
பெண்களுக்கு வயதான காலத்தில் ஏற்படும் முகச் சுருக்கம், சருமம் உரிதல் போன்ற பிரச்னைகளை மாம்பழம் தடுக்கிறது என்பதை அமெரிக்க ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வாரத்தில் 4 நாட்களுக்கு அரை கப் மாம்பழம் சாப்பிட்ட பெண்களுக்கு முகத்தில் ஏற்பட்ட சுருக்கங்கள் மறைந்தது ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதற்குக் காரணம் மாம்பழத்தில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள்தான் என்கிறார்கள். மாம்பழத்தை வாயில் கடித்து மென்றால் பற்களில் இருக்கும் ஈறுகள் வலுவடையும் என கூறப்படுகின்றது.
மாம்பழத்தை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவும். பகல் 12 முதல் 4 மணி வரை மாம்பழம் சாப்பிடுவதற்கு உகந்த நேரம் என்கின்றனர் மருத்துவர்கள். மாம்பழத்தில் ஃபைபர் சத்துகள் அதிகமாக உள்ளன. இதனால், இவற்றை கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
மாம்பழத்தில் வைட்டமின் டி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளன. இது சிறுநீரகத்தில் கல் உருவாகும் ஆபத்தை தடுக்கிறது. மாம்பழத்தில் உள்ள மாலிக் அமிலம் மூட்டு வலி நிவாரணி மற்றும் நரம்பு தளர்ச்சியை தடுக்க உதவுகிறது. மாம்பழம் சாப்பிட்டவுடன் நமக்கு ஒருவித மகிழ்ச்சி ஏற்படும். அதற்குக் காரணம் அதிலுள்ள வைட்டமின் ஈ சத்து. மாம்பழத்திற்கு நறுமண வாசனை தரும் ‘லின்லூல்’ அமிலம் மன இறுக்கத்தைப் போக்குகிறது.
மாம்பழத்தை சாப்பிடுவதற்கு முன்பு குறைந்தது அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். இதற்குக் காரணம். மாம்பழத்தில் பைடிக் அமிலம் உற்பத்தியாகிறது. மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைக்கும் போது கூடுதல் பைடிக் அமிலம் அகற்றப்படும். மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைக்காமல் சாப்பிட்டால், பைடிக் அமிலமும் உடலில் சேரும். அவை கூடுதல் வெப்பத்தை உருவாக்குகின்றன. பழத்தை தண்ணீரில் ஊறவைத்தால், அதில் உள்ள வெப்பம் குறையும். இப்படி ஊறவைத்து எத்தனை மாம்பழங்கள் சாப்பிட்டாலும் உடல் சூடு ஏற்படாது.