அஜினோமோட்டோவை உணவில் பயன்படுத்தலாமா? கூடாதா? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. கடந்த சில வருடங்களாகவே இது உடலுக்கு கேடு விளைவிக்கும் என சொல்லப்பட்டாலும், இன்றளவும் பல இந்திய உணவுகளில் அஜினோமோட்டோ பயன்படுத்தப்படுகிறது.
பார்ப்பதற்கு கண்ணாடி துகள் போல இருக்கும் உப்பு சுவை கொண்ட அஜினோமோட்டோவை, சீனர்கள் சாதாரணமாகவே அவர்களின் உணவுகளில் சுவைக்காக சேர்க்கின்றனர். இது க்ளூட்டமிக் அமிலம் மற்றும் சோடியத்திலிருந்து தயாரிக்கப்படும் கலவையாகும். மேலும் சோளம், கரும்பு, சர்க்கரைவள்ளி போன்றவற்றில் இருந்தும் தயாரிக்கப்படுகிறது. சீனர்கள் தங்களின் நூடுல்ஸ், பிரைடு ரைஸ், சூப் போன்ற உணவுகளில் அதிகமாக இதைப் பயன்படுத்துவார்கள். ஊட்டச்சத்து நிபுணர்களின் கூற்றுப்படி இதில் புரதங்கள், விட்டமின்கள் கொழுப்புகள் என எதுவுமே இல்லை. இருப்பினும், இதை ஏன் உடலுக்குக் கெடுதல் எனச் சொல்கிறார்கள்?
அஜினோமோட்டோவை நாம் குறைவாக பயன்படுத்தினால் எந்த பாதிப்புகளும் இல்லை. இதுவே அதிகப்படியாக உணவில் சேர்க்கப்படும்போது உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். இதில் உள்ள க்ளூட்டமிக் அமிலம் நமது மூளை நரம்புகளில் கடத்தியாக செயல்படுகிறது. எனவே இதை அதிகமாக எடுத்துக்கொண்டால் மூளை நரம்புகள் பாதித்து செல்களை அழிக்கும் எனச் சொல்லப்பட்டாலும், இது உண்மை என எவ்வித ஆய்வுகளும் நிரூபிக்கவில்லை. இருப்பினும் அதிகமாக அஜினோமோட்டோ பயன்படுத்தினால் புற்றுநோய், தலைவலி போன்றவை ஏற்படும் என சொல்லப்படுகிறது.
உண்மையிலேயே உணவின் சுவையை அஜினோமோட்டோ மேம்படுத்திக் கொடுக்கிறது என்பதுதான் உண்மை. மேலும் உணவில் சேர்க்கப்படும் எல்லா பொருட்களின் சுவையையும் சீராக மாற்ற உதவுகிறது. எனவே குறைந்த அளவில் அஜினோமோட்டோ உணவில் பயன்படுத்தலாம். ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரைப்படி 0.5 கிராம் அளவிலான அஜினமோட்டோவை உணவில் சேர்த்துக் கொள்வது பாதுகாப்பானது. இதை எந்த வகையான உணவாக இருந்தாலும் சேர்க்கலாம். ஆனால் குழந்தைகள், கர்ப்பிணிகள், பெரியவர்கள் அஜினோமோட்டோவை தவிர்ப்பது நல்லது.
கிட்டத்தட்ட இதுவும் ஒரு உப்பு போல தான். எனவே அதிகப்படியாக உணவில் சேர்த்துக் கொள்ளாமல், குறைந்த அளவில் பயன்படுத்தினால் அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காத்துக்கொண்டு, ஆரோக்கியமாக இருக்க முடியும்.