Myrobalan Img Credit: Pinterest
ஆரோக்கியம்

கடுக்காயில் இருக்கும் அற்புதமான மருத்துவப் பயன்கள்!

ராதா ரமேஷ்

"கடுக்காயும் தாயினும் கருதில்

கடுக்காய் தாயினும் மேலாம்"

இன்று சித்த மருத்துவத்தில் ஒரு பழமொழி உண்டு. அதாவது கடுக்காய் தாயை விட சிறந்தது என்பது இதன் பொருள். அறுசுவையும் ஒருங்கே இணைந்தது கடுக்காய். ஒரு தாயானவள் அறுசுவை உணவையும் சமைத்து தனது குழந்தைக்கு ஊட்டினாலும் கூட, சில சமயம் அன்பு மிகுதியிலால் அதிகமாக ஊட்டப்பட்டால் அது குழந்தையின் உடல் நலத்தில் ஏதாவது ஒரு இடையூறை ஏற்படுத்தி விடும். ஆனால் கடுக்காய் சாப்பிடும் போது எந்தவித சிக்கலும் ஏற்படாமல் உடலில் உள்ள நோய்கள் குணமாகும் என்பதன் மேன்மை கருதியே சித்த மருத்துவத்தில் இந்தச் சொல்லாடல் வந்தது. எனவே அத்தகைய சிறப்பு வாய்ந்த கடுக்காயில் இருக்கக்கூடிய மருத்துவப் பயன்களை பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

எப்பொழுதும் கடுக்காயை பயன்படுத்தும் போது உள்ளே உள்ள விதையை பயன்படுத்தக் கூடாது. விதையை நீக்கிவிட்டு மேல் தோலோடு சேர்த்து நன்கு பொடித்து, பவுடர் போன்று பயன்படுத்த வேண்டும். கடுக்காயில் அதிகப்படியான துவர்ப்பு சுவை உள்ளதால் சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. வயிற்று உபாதைகளுக்கு மூல காரணமாக இருக்ககூடிய மலச்சிக்கல் பிரச்சினையை தீர்ப்பதில் கடுக்காய் முக்கிய பங்காற்றுகிறது. எனவே 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கடுக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

கடுக்காய் பொடியை தினமும் வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவு தூங்குவதற்கு முன் 48 நாட்கள் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்சினை தீரும். மேலும் அதிகமாக பசியின்மையை உணர்பவர்கள், வயிற்றுப் பொருமல், அடிக்கடி புளித்த ஏப்பம் வருபவர்கள், வாயு தொந்தரவு அதிகமாக உள்ளவர்கள் கடுக்காயை தாராளமாக தொடர்ந்து பயன்படுத்தி வரலாம். மேலும் கடுக்காய் வாதம், பித்தம், கபம் இவை மூன்றால் வரக்கூடிய ஏராளமான நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.

அடிக்கடி நா வறண்டு போவதாக உணர்வர்கள் கடுக்காயை அவ்வப்போது நீரில் கலந்து குடித்து வரலாம். வாய், தொண்டை, இரைப்பை மற்றும் குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதில் கடுக்காய் முக்கிய பங்காற்றுகிறது. ரத்த காயங்களை ஆற்றுவதிலும், காயங்கள் ஏற்படும் போது அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்துவதிலும் கடுக்காய் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் இன்றைய காலகட்டங்களில் முதியவர்களை அதிகமாக பாதிக்கக்கூடிய அல்சைமர் எனும் ஞாபக மறதி நோயை குணப்படுத்துவதிலும், கட்டுப்படுத்துவதிலும் கடுக்காய் பயன்படுகிறது. அல்சைமர் நோயாளிகள் தினமும் 3 கிராம் கடுக்காயை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

கடுக்காயில் கேலின் மற்றும் கேலோனின் எனும் வேதிப்பொருட்கள் உள்ளன. இந்த வேதிப்பொருட்கள் கொழுப்பு சார்ந்த நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. எனவே கொழுப்பு சார்ந்த நோய் உள்ளவர்கள் தினமும் 3 கிராம் கடுக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது. கடுக்காயில் சபோனின் எனும் ஆல்கலாய்டுகள் உள்ளது. இந்த ஆல்கலாய்டுகள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து உடலின் எடை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. பெருங்குடல் பகுதியில் சுரக்கும் அதிகப்படியான அமிலத்தன்மையை கட்டுப்படுத்தும் மூலக்கூறுகள் கடுக்காயில் இருப்பதால் பெருங்குடல் சம்பந்தப்பட்ட அலர்ஜி நோய் இருப்பவர்கள் கடுக்காய் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிக்கலாம்.

சிறுநீர் தொற்றுகளை சரி செய்வதில் கடுக்காய் முக்கிய பங்காற்றுகிறது. சிறுநீர் எரிச்சல், சிறுநீர் கடுப்பு போன்ற பிரச்சினைகளை சரி செய்து சிறுநீர்ப்பையில் உள்ள கழிவுகளை முழுமையாக வெளியேற்ற கடுக்காயை பயன்படுத்தலாம். இது சிறந்த சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது. கடுக்காயில் டானிக் ஆசிட் என்ற மூலக்கூறுகள் உள்ளதால் வாய்ப்புண், வாய் சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள் கடுக்காய் தூளை மவுத் வாஷாக பயன்படுத்தலாம். ஏதேனும் சிறிதளவில் ரத்த காயங்கள் ஏற்படும் போது அதனை வெளிப்புறமாக கழுவி சுத்தப்படுத்துவதற்கு கடுக்காய் தூளை பயன்படுத்தலாம், ஏனெனில் காயங்களை விரைவில் ஆற்றுவதோடு ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கடுக்காய் தூளுக்கு உண்டு.

கடுக்காய் ஒரு சிறந்த காய கல்ப மருந்து ஆகும். பொதுவாகவே பித்தம் சார்ந்த உடல் அமைப்பு கொண்டவர்கள், வாதம் சார்ந்த உடல் அமைப்பு கொண்டவர்களின் திசு வளர்ச்சி விகிதம் சீரற்ற முறையில் இருக்கும். எனவே இவர்கள் தினசரி வாழ்வில் கடுக்காயை சேர்த்துக் கொள்ளும்போது வளர்ச்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் கடுக்காய் பல்வேறு இதய நோய்களை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. இதனை 3g வீதம் 3 மாத காலத்திற்கு எடுத்துக் கொள்ளும் போது நேரடியாக நோய் குறையாவிட்டாலும் கூட, நோய் வருவதற்கான காரணிகள் நாளடைவில் மட்டுப்படுத்தப்படுகிறது. எனவே மேற்கண்ட சிக்கல் உள்ளவர்கள் கடுக்காயை தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

மழைக்காலத்தில் மட்டும் வைரஸ் காய்ச்சல் ஏன் அதிகமாக வருகிறது தெரியுமா? 

நிர்வாகத் தலைவருக்கு அவசியம் இருக்க வேண்டிய 10 குணங்கள்!

குமாஸ்தன்: தவற விடக்கூடாத படமல்ல; பொழுது போகவில்லை என்றால் பார்த்து வைக்கலாம்!

Mutual Fund vs. Stocks: எதில் முதலீடு செய்வது சிறந்தது?

"நாங்கள் பிள்ளை பெறும் இயந்திரமா?" மகளிரிடையே பலத்த எதிர்ப்பு! எங்கே?

SCROLL FOR NEXT