மழையில் நனைந்த படி வருவது உற்சாகமூட்டும் அனுபவம்தான் என்றாலும் அது தன்னுடன் ஒரு வினையையும் இணைத்துக் கொண்டிருக்கிறது. பல்வேறு நோய்களை உருவாக்குகிறது. அந்த வகையில், மழைக்கால நோய்களில் சிலவற்றையும், நோயிலிருந்து பாதுகாக்கும் வழிகளையும் பார்ப்போம்.
டெங்கு:
மழைக்காலம் டெங்குகொசுக்களின் இனபெருக்கத்திற்கு வழி வகுக்கும். டெங்குகொசுக் கடிப்பதன் மூலம் இந்த நோய் பரவுகிறது. அது கவனிக்கப்படாமல் விட்டால் மரணமாகி விடும். எனவே அதிக காய்ச்சல், வாந்தி, எலும்புவலி கண்களுக்கு பின்னால் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் அவற்றை தடுப்பதற்கு உடன் மருத்துவ உதவியை நாட வேண்டும்.
மலேரியா:
மழைக்காலத்தில் 'அனோபீலஸ்' என்ற பெண்கொசுவால் பரவக்கூடியது. இந்த கொசு ஒருவரை கடித்து விட்டு மற்றொருவரை கடிக்கும் போது அதன் எச்சில் வழியாக கிருமிகள் பரவி மலேரியா காய்ச்சல் ஏற்படுகிறது.
சிக்கன்குன்யா:
இது Aedes aegypti மற்றும் Aedes albopictus கொசுக்கள் கடித்த 3 - 7 நாட்களுக்குள் தொடங்கி கடுமையான மூட்டு வலி, காய்ச்சல், சோம்பல், பலவீனம், மற்றும் குளிரை ஏற்படுத்தும். அறிகுறிகள் கடுமையானதாகவும், நீண்டகாலம் தொடர்வதாகவும் இருக்கலாம்.
டைபாய்டு:
இது அசுத்தமான தண்ணீரால் உருவாகும் 'சால்மோனெல்லா டைஃபி' என்ற பாக்டீரியாவால் ஏற்படும். பலவீனம், வயிற்றுவலி, வயிற்றுபோக்கு, இருமல், பசியின்மை போன்ற பிரச்சனைகளை உண்டுபண்ணும்.
காலரா:
அசுத்தமான தண்ணீர் மற்றும் உணவு மூலம் பரவும். உணவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சுவாச நோய் தொற்றுகள்:
மழைக்காலத்தில் ஈரப்பதம் அதிகரிப்பதால் சளி, காய்ச்சல், மற்றும் நிமோனியா உள்ளிட்ட சுவாசம் தொடர்பான பல நோய்களால் மூச்சு விட கஷ்டமாக இருக்கும். குளிர்ந்த காற்றை சுவாசிக்கும் போது நுரையீரல் மற்றும் தொண்டை பகுதிகளில் எரிச்சல் படும், நெஞ்சு சளி கட்டி கொள்ளும்.
லெப்டோஸ்பிரோசிஸ்:
இது ஒரு பாக்டீரியா தொற்று. அசுத்தமான நீரினாலும், விலங்குகளின் சிறுநீரினா லும் பரவக்கூடியது.
வைரஸ் காய்ச்சல்:
வானிலையில் ஏற்படும் மாற்றத்தால் இது ஏற்படுகிறது. ஜலதோஷம், வயிற்று பிரச்சனைகள், காய்ச்சல், மற்றும் இருமல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. நோயாளி, தும்மும் போதும், இருமும் போதும், இந்த கிருமி சளியோடு வெளியேறி அடுத்தவர்களுக்கும் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உடல்வலி, கை, கால்வலி, தும்மல், மூக்கு ஒழுகுதல், சளி, இருமல், தொண்டை வலி போன்றவை இதன் அறிகுறிகள்.
பூஞ்சை தொற்று:
பருவ மழையின் ஈரப்பதம் பூஞ்சை தொற்றுகள் வளர காரணமாகிறது. சரும நோய்களை உண்டு பண்ணுகிறது.
கண்வலி நோய்கள்:
'மெட்ராஸ் ஐ' என அழைக்கப்படும் கண்நோய் மழை சீசனில் அதிகமாக பரவும். கண்ணுக்குள் இருக்கும் 'கஞ்சக்டைவா' என்னும் பகுதியை அடினோ வைரஸ் தாக்குவதால் கண் சிவந்து கண்ணீர் கசிந்து கொண்டு இருக்கும்.
நோயிலிருந்து பாதுகாக்கும் வழி:
சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்க விடகூடாது. பிளாஸ்டிக் பைகள், தேங்காய் ஓடுகள், டயர்கள் போன்றவற்றை வீட்டின் அருகில் இருந்து அகற்ற வேண்டும்.
வாகனங்களில் பயணிக்கும் போது, மாஸ்க், கையுறைகளை அணிய வேண்டும்.
குளிர் பானங்கள், ஐஸ்கிரீம் தவிர்ப்பது நல்லது.
தண்ணீரை கொதிக்க வைத்து மிதமான சூட்டில் அருந்த வேண்டும்.
நார்ச்சத்து, புரதச்சத்து, மாவு சத்து, வைட்டமின்கள், தாது உப்பு, கொழுப்புச்சத்து, என அனைத்தும் நிறைந்த சரி விகித உணவை சாப்பிடவும்.
காய்கறி, பழங்களை அதிக அளவில் சாப்பிடலாம்.
காபி, தேநீர் அருந்துவதற்கு பதில் மூலிகை சூப், பழரசம், கிரீன் டீ ஆகியவற்றை அருந்தலாம்.
வெளியில் இருந்து வந்ததும் செருப்பை வெளியில் கழற்றி விட்டு கை, கால்களை சுத்த படுத்த வேண்டும்.
முடிந்த வரை மாலை நான்கு மணிக்கெல்லாம் ஜன்னல்களைப் பூட்டி கொசுக்களை வீட்டுக்குள் வரவிடாமல் தடுப்பதே சிறந்த வழி.