தற்போது நகரங்களில், தெருவுக்குத் தெரு ஏராளமான பிரியாணிக் கடைகள் உள்ளன. மக்களும் சளைக்காமல் பிரியாணி ஆர்டர் செய்து உண்டு வருகின்றனர். நிறைய இளைஞர்கள் இரவு நேரத்தில் பிரியாணி ஆர்டர் செய்து உண்கின்றனர். பெங்களூரூ போன்ற நகரங்களில் மிட் நைட் பிரியாணி மற்றும் அதிகாலை பிரியாணி போன்றவை மிகவும் பிரபலம். ஆனால், இரவு நேரங்களில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய கேடுகளைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பதையே இது உணர்த்துகிறது.
இரவில் பிரியாணி சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்:
1. அஜீரணம்: பிரியாணியில் கலந்திருக்கும் கனமான மசாலா பொருட்கள், டால்டா, அதிகளவு எண்ணெய், நெய் மற்றும் இறைச்சி வகைகள் போன்றவை செரிமானத்திற்கு சிக்கலை ஏற்படுத்தும். குறிப்பாக, உடல் செயல்பாடுகள் அற்ற இரவு நேரத்தில் வாயு, அஜீரணம் போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தும்.
2. உடல் எடை அதிகரிப்பு: அதிகக் கலோரிகள் கொண்ட பிரியாணியை அடிக்கடி பகலில் உட்கொண்டாலே விரைவில் உடல் பருமன் ஏற்படுவது உறுதி. அதிலும் இரவில் உட்கொள்ளும்போது அதிகப்படியான கலோரி உட்கொள்ளலுக்கு வழிவகுக்கும். விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.
3. நெஞ்செரிச்சல்: மசாலா மற்றும் காரமான கொழுப்பு நிறைந்த பிரியாணியை உண்ணும்போது அது அமில வீக்கத்தை ஏற்படுத்தும். இரவில் உணவு உண்டவுடன் பலரும் படுக்கைக்கு செல்வார்கள். அதனால் நெஞ்செரிச்சல் அதிகமாகும்.
4. தூக்கம் சீர்குலைதல்: இரவில் கனமான உணவு உண்ணுவதால் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை அதிகரிப்பதன் மூலம் தூக்கத்தின் தரத்தில் குறுக்கீடுகள் உண்டாகும். தூக்கம் வருவது சிரமமாகும்.
5. உணவு மூலம் பரவும் நோய்கள்: நிறைய ஹோட்டல்களில் பழைய இறைச்சி வகைகளை ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்து அதில் பிரியாணி செய்து தருகிறார்கள். அவற்றை உண்ணும்போது சால்மோனெல்லா அல்லது ஈகோலி போன்ற பாக்டீரியாக்கள் உருவாகி குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்றுப் பிடிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கும்.
6. ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வு: அதிக கலோரிகள் கொண்ட பிரியாணியை இரவில் உண்ணும்போது அது ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கும். இரவு நேரத்தில் பெரும்பாலும் இலகுவான உணவை உண்ணுவதுதான் சிறந்தது. அதுதான் ஜீரணத்திற்கும் உடல் ஊட்டச்சத்தை உறிஞ்சுவதற்கும் ஏற்றது. மேலும், பிரியாணியில் வைட்டமின்களோ தாதுக்களோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
7. அதிகரிக்கும் சர்க்கரை அளவுகள்: பிரியாணியில் உள்ள அதிக கார்போஹைட்ரேட் உள்ளடக்கம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும். குறிப்பாக, நீரிழிவு மற்றும் இன்சுலின் உணர் திறன் கொண்ட நபர்களுக்கு மிகுந்த கெடுதலை உண்டாக்கும். மேலும், இரவில் பிரியாணி உண்பது வளர்சிதை மாற்ற கோளாறுகளுடன் தொடர்புடையது. காலப்போக்கில் இது உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதயநோய் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு இட்டுச் செல்லும்.
8. மனநல விளைவுகள்: இரவு நேர பிரியாணி உண்ணும் பழக்கம் மோசமான தூக்கத்திற்கு வழி வகுப்பதால் அது சோர்வு, எரிச்சல் மற்றும் அறிவாற்றல் செயல்பாடு குறைவதற்கும் வழிவகுக்கும். இதனால் ஒட்டுமொத்த மன ஆரோக்கியமும் பாதிக்கும்.
பிரியாணி சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் எது?
பிரியாணியை இரவில் சாப்பிட்டேயாக வேண்டும் என்கிற கட்டாயம் வரும்போது மாலை 6 முதல் 8 மணிக்குள் உண்பது நன்று. ஆனாலும், பிரியாணியை பகலில் எடுத்துக்கொள்வதே சிறந்தது. ஒரு பிளேட் பிரியாணி எடுத்துக் கொண்டால் குறைந்தது மூன்று கிலோ மீட்டர்கள் மாலையில் நடக்க வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறையே போதுமானது. இன்றைய இளைஞர்கள் பிரியாணியை அடிக்கடி உண்பதால் ஏற்படும் விளைவுகளை சிந்தித்துப் பார்த்த பின் உண்பது அவர்களது உடல் நலத்திற்கு நல்லது.