கோவைக்காய் போல கண்மாய்க் கரைகள், வேலியோரங்கள் போன்றவற்றில் வளரும் கொடி வகை அதலைக்காய். பாகற்காய் குடும்பத்தைச் சேர்ந்த இக்காய், கார்த்திகை மற்றும் மார்கழி மாதப் பருவத்தில் மட்டும் விளையும் என்பதால், இதை வற்றல் போட்டு வைத்தும் பயன்படுத்துகிறார்கள். உலகத்தில் எந்த நாட்டிலும் விளையாத ஒரு காய் இது. ஆனால், இந்தியாவில் மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர், தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் அதிகமாகக் கிடைக்கும். அதலைக்காய் மூலிகை செடி கொடிகளில் ஒன்றாகும்.
1. அதலைக்காயில் துத்தநாகம், வைட்டமின் சி, பாஸ்பரஸ், நீர்ச்சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, சோடியம், புரதம் மற்றும் தாது உப்புக்கள் மிகுந்த அளவில் உள்ளன. இந்தத் தாது உப்புகள் மற்றும் வைட்டமின்களின் அளவு பாகற்காயுடன் ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகமாகும்.
2. நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
3. இதில் இருக்கும் சத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து.
4. அதலைக்காயில் இருக்கும் லெய்ச்சின் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் செல்கள் உருவாகாமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மையை கொண்டுள்ளது. இதில் இருக்கும் சத்துக்கள் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
5. அதலைக்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால் மஞ்சள் காமாலை நோய் வராமல் தடுக்கும்.
6. ஆரோக்கியமான எலும்பு மற்றும் பல் வளர்ச்சி, இதயத்துடிப்பு, நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் மற்றும் இரத்தம் உறைதல் ஆகியவற்றிற்கும் கல்லீரல் பாதிப்பை தடுக்கவும் இது பெரிதும் உதவுகிறது.
7. குடற்புழு, வயிற்றுப் பிரச்னை உள்ளவர்களுக்கு இந்தக் காய் ஒரு சிறந்த மருந்தாகும். இது வயிற்றில் காணப்படும் கிருமிகளை அழிப்பதோடு, குடற்புழு பிரச்னைகளையும் சரி செய்கிறது.