நம் உடல் நலம் பேண, நாம் அனைவரும் ஆரோக்கியம் நிறைந்த வெவ்வேறு உணவுகளை உட்கொண்டு வருகிறோம். அப்படி உண்ணும்போது சிலவகை உணவுகளில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் ஸ்பைசி மசாலாக்கள், ருசிக்காகவும் வாசனைக்காகவும் சேர்க்கப்பட்டிருக்கும். அநேக நேரங்களில் அவை உடலுக்கு ஆரோக்கியக் குறைபாட்டையே தரக்கூடும். அதைத் தவிர்த்து அதற்குப் பதில் வேறு எந்த மாதிரியான உணவுகளை உண்ணலாம் என்பதை இங்கு பார்ப்போம்.
காலை உணவாக, பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு வரும், இனிப்பு சுவையோடு கூடிய செரியல் (Cereal) மற்றும் கார்ன் ஃபிளேக்ஸ் சாப்பிடுவதற்குப் பதில் ஓவர் நைட் ஓட் மீல் மீது தேன் அல்லது பேரீச்சை சிரப் ஊற்றி புதிதாய் நறுக்கிய சில வகை பழத் துண்டுகள் சேர்த்து சாப்பிட ஆரோக்கியம் கூடும்.
எண்ணையில் பொரித்து, அதிகக் கொழுப்பு அடங்கிய ஃபிரெஞ்ச் ஃபிரை சாப்பிடுவதற்கு பதில், பேக் (bake) பண்ணிய காய்கறிகள் அல்லது கேரட், ஸ்வீட் பொட்டட்டோ, புரோக்கோலி போன்ற காய்கறிகளை ஏர் ஃபிரை (air fry) செய்து சாப்பிடுவது அதிக நன்மை தரும்.
கூல் ட்ரிங்க்ஸ்ஸுக்கு பதிலா வீட்டிலேயே தயாரித்த லெமனேட் சாப்பிடுவது அதிக ஆரோக்கியம் தரும். சர்க்கரை அளவை குறைத்துக்கொள்ளலாம் அல்லது சர்க்கரை சேர்க்காமலே கூட குடிக்கலாம்.
சாதாரண சாக்லேட்டுக்கு பதிலாக, அதிகளவு ஊட்டச் சத்துக்கள் நிறைந்த டார்க் சாக்லேட்டை அளவோடு சாப்பிடலாம். மில்க் சாக்லேட் மற்றும் ஒயிட் சாக்லேட் போல் டார்க் சாக்லேட் அதிகமாகப் பதப்படுத்தப்படுவதில்லை.
சிப்ஸ் சாப்பிடுவதற்குப் பதில் பாப்கார்ன் சாப்பிடுவது நற்பயன் தரும். பாப்கார்ன் குறைந்த அளவு கலோரி கொண்டது. நார்ச்சத்து அதிகமுடையது. அதில் உப்பு மற்றும் வெண்ணெய் சேர்க்காமல் சாப்பிடுவதே ஆரோக்கியமானது.
செயற்கை முறையில் இனிப்பூட்டி, பாக்கெட்டுகளில் விற்கப்படும் கார்பனேட்டட் (carbonated) ஜூஸ்களுக்குப் பதில் வீட்டிலேயே ஃபிரஷ் பழங்களிலிருந்து தயாரிக்கப்படும் பழச்சாறுகள் சுவையும் சத்துக்களும் அதிகம் நிறைந்தவை.
ஆப்பிள் பை (Pie) எனப்படும் பேக் (bake) செய்த ஆப்பிளுக்கு பதில், ஆப்பிளின் உள்பக்க சதைப் பகுதியைப் பிரித்தெடுத்து அதில் சிறிது பட்டர், பட்டைப் பவுடர், நட்ஸ், சர்க்கரை சேர்த்து ஏர் ஃபிரை செய்து சாப்பிட, ஆப்பிள் பை சாப்பிட்ட உணர்வு கிடைக்கும்.
இப்படி, நாம் தவிர்க்க வேண்டியவற்றை தவிர்த்து, சேர்க்க வேண்டியவற்றை சேர்த்து உடல் நலத்தின் ஆரோக்கியம் காப்போம்.