‘இரண்டு நாட்களாக அஜீரணம், சோடா குடிச்சேன், இன்னும் சரியாகவில்லை‘ என்பார்கள் சிலர். இன்னும் சிலர் தானாக சரியாகிவிடும் என அலட்சியமாக இருந்து விடுவார்கள். உண்மையில் அவர்களுக்கு வந்தது மைல்ட் ஹார்ட் அட்டாக்காக இருக்கும். பெரும் ஆபத்தில் கொண்டுபோய் விடக்கூடிய சில அறிகுறிகளை நாம் அலட்சியப்படுத்தாமல் இருப்பது நல்லது. பல நேரங்களில் மருத்துவர்களாலேயே வேறுபடுத்திப் பார்க்க முடியாது. எனவே, சுய வைத்தியம் செய்து கொள்ளாமல் ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் தகுந்த மருத்துவரைக் கண்டு ஆலோசிப்பது நல்லது.
ஹார்ட் அட்டாக் அறிகுறிகள்: மன அழுத்தம், பதற்றம், அதீதமான சோர்வு, கழுத்து, முகுது, கை பகுதிகளில் பரவலான வலி, மூச்சுத் திணறல், அதிக வியர்வை, மார்பு பகுதியில் அசௌகரியம் ஆகியவை உண்டாகும். திடீரென மார்பு பகுதியில் வலி, படபடப்பு, ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஆகியவை ஏற்படும். தமனிகளில் ஏற்படும் அடைப்பு காரணமாகத்தான் மாரடைப்பு வருவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.
வயிறு, நெஞ்சுப் பகுதிகளில் அசாதாரண அறிகுறிகள் இருந்தால் கேஸ் ட்ரபுள்தான் என அலட்சியப்படுத்தாமல் தகுந்த மருத்துவரைப் பார்த்து அவர் கூறும் சில பரிசோதனைகளை (இசிஜி, இரத்த பரிசோதனைகள்) செய்து கொள்வது நல்லது. மாரடைப்பு என்பது வயதானவர்களுக்கு மட்டுமே வரும் என நினைத்த காலம் போய் இளம் வயதினர்களுக்கும் வருகிறது.
யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம்:
1. உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை மாரடைப்புக்கு முக்கிய காரணமாகிறது.
2. உடல் உழைப்பு, உடல் இயக்கம் அதிகம் இல்லாமல் இருப்பது.
3. புகையிலை, சிகரெட் குடிப்பழக்கம் காரணமாக இதய நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம்.
4. நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரை இரத்த நாளங்களை நிரந்தரமாக சேதப்படுத்தும். எனவே, நீரிழிவு நோயை கட்டுக்குள் வைக்க வேண்டும். இது சிலருக்கு பரம்பரையாக வருவதற்கும் வாய்ப்புகள் அதிகம்.
மாரடைப்பு வராமல் இருக்க என்ன செய்யலாம்?:
1. தினமும் நடைப்பயிற்சி அவசியம். உடல் உழைப்பு முக்கியம்.
2. எண்ணெயில் வறுத்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.
3. கீரை வகைகள், முட்டைகோஸ், பூண்டு, ஒமேகா 3 நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.
4. முழு தானியங்கள், வால்நட், அக்ரூட் பருப்புகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்வது நல்லது.
5. சுறுசுறுப்பாக இருப்பதுடன், மன அழுத்தம் இன்றியும் வாழப் பழக வேண்டும்.
6. குடி, சிகரெட், புகையிலைக்கு நோ சொல்வது.
7. உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய் ஆகியவற்றை கட்டுக்குள் வைத்துக் கொள்வது.
8. குறிப்பிட்ட கால இடைவெளியில் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
9. அசாதாரண அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாமல் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது மிகவும் முக்கியம்.