பலரது வாழ்க்கை 'டீ இன்றி அமையாது உலகு' என மாறிவிட்டது. டீ குடிப்பதை தவிர்க்க முடியமால் அடிமையாகி விட்டனர். உணவு கூட வேண்டாம் என சொல்வார்கள்; டீ வேண்டாம் என கூற மாட்டார்கள். அதன் சுவை, அதை குடிப்பதால் ஏற்படும் சுறுசுறுப்பு போன்றவைதான் டீ க்கு அடிமையாவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது. அதிகமாக டீ குடிப்பதால் உடலுக்கு தீமை உண்டாகும் என தெரிந்தும், தேநீர் மீது அதீத காதல்... சிலர் அதிகமாக டீ அருந்தி உடல்நிலை பாதிக்கப்பட்டு, பின் வேறு வழி இன்றி டீ யை நிறுத்த முயற்சிப்பார்கள். அவ்வாறு செய்வது சரியா? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
டீயை தவிர்ப்பதால் கிடைக்கக்கூடிய பலன்கள்
டீ குடிக்காமல் இருப்பதால் நமது உடலில் காஃபைன் உட்கொள்ளல் குறைகிறது. இதன் காரணமாக நமது உடலிற்கு ஆழ்ந்த தூக்கம் கிடைக்கிறது. மேலும் பதற்றத்தையும் குறைக்க முடியும்.
டீயில் உள்ள டையூரிடிக் விளைவுகளால், ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டையும் தடுக்க முடியும்.
டீ குடிப்பதை கைவிடுவது டீஹைட்ரேஷன் தொடர்பான பிரச்சனைகளை குறைப்பதற்கு உதவும். அதுமட்டுமல்லாமல் டீ குடிப்பதை விடுவது நமது செல்களில் சேதத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்கிறது. இதன் காரணமாக செரிமான பிரச்சனைகள் மற்றும் ஒரு சில வகையான புற்று நோய்களை தடுக்க முடியும்.
டீயை தவிர்ப்பதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்
ஒரு சிலருக்கு டீ குடிப்பதை நிறுத்தியவுடன் மன ரீதியான பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. டீ குடிப்பதை விட்டவுடன் சிலருக்கு சோர்வு, மந்தத்தன்மை, தூக்க கலக்கம், தலைவலி, கவனிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் உண்டாகலாம்.
எனினும் இதுபோன்ற அறிகுறிகள் சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும். உடலானது தேநீர் இல்லாமல் இருப்பதற்கு தன்னை பழகிக் கொண்டவுடன் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.
டீயை முற்றிலுமாக தவிர்ப்பதற்கு, டீக்கு பதிலாக மூலிகை தேநீர், பழச்சாறு அல்லது வெந்நீர் போன்றவற்றை குடிக்கலாம். புதினா போன்ற காஃபைன் இல்லாத தனித்துவமான சுவை கொண்ட மூலிகை தேநீர்கள் நம் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் என்பதால், அதை தேர்ந்தெடுக்கலாம். அதேபோல் ஆப்பிள் போன்ற பழச்சாறுகள் இயற்கையாகவே காஃபைன் இல்லாத காரணத்தினால் நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் வெந்நீருடன் எலுமிச்சை அல்லது தேன் சேர்த்து குடிப்பது தேநீரைப் போல நமக்கு கதகதப்பையும், சௌகரியத்தையும் தர உதவியாக இருக்கும்.
உங்கள் தனிப்பட்ட ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நீங்கள் டீ குடிக்கலாமா, ஒரு நாளைக்கு எத்தனை டீ குடிக்கலாம் என்பதை தெரிந்துக் கொள்ள மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.