Benefits of drinking hot water daily! 
ஆரோக்கியம்

தினசரி வெந்நீர் குடித்து வந்தால் என்ன ஆகும் தெரியுமா? 

கிரி கணபதி

நாம் அனைவரும் தினமும் போதிய அளவு நீர் குடிப்பது உடலுக்கு மிகவும் அவசியமானது. ஆனால், அந்த நீர் வெதுவெதுப்பாக இருந்தால் அதன் நன்மைகள் பன்மடங்காகும் என்பது பலருக்குத் தெரியாது. வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது பண்டைய காலங்களில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் ஒரு வழக்கம். இதற்கு பல ஆரோக்கிய நன்மைகள் உண்டு. இந்தப் பதிவில் அவை என்னென்ன என்பது பற்றி விரிவாகக் காண்போம்.‌ 

செரிமானம் மேம்படும்: வெதுவெதுப்பான நீர் குடிப்பது செரிமான மண்டலத்தைத் தூண்டி குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. இது மலத்தை மென்மையாக்கி அவை எளிதாக வெளியேற உதவுகிறது. மேலும், மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுப்பதில் வெந்நீர் நன்கு செயல்படுகிறது. வெந்நீர் குடிப்பது செரிமான நொதிகளின் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்து உணவு எளிதாக ஜீரணிக்க உதவும். 

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு: வெந்நீர் குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இது உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி நோய்த் தொற்று ஏற்படுவதைத் தடுக்கிறது. வெந்நீர் குடிப்பது தொண்டை வலி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கும். 

உடல் எடையைக் குறைக்க உதவுகிறது: வெந்நீர் குடிப்பது உடல் எடையைக் குறைக்க உதவும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து கலோரி வேகமாக எரிக்க உதவுகிறது. மேலும், வெந்நீர் குடிப்பதால் பசி குறைந்து அதிகமாக உணவு உண்பது தடுக்கப்படுகிறது. 

மன அழுத்தம் குறையும்: வெந்நீர் குடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது உடலில் உள்ள கார்ட்டிசோல் என்ற மன அழுத்த ஹார்மோனின் அளவைக் குறைத்து, தூக்கத்தை மேம்படுத்தி, மனதை அமைதியாக வைக்கிறது. 

சரும பிரச்சனைகள் குறையும்: சருமப் பிரச்சனைகள் இருப்பவர்கள் தொடர்ச்சியாக வெந்நீர் குடிப்பதால் அவை குறைய நேரிடும். இது தோலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி தோலை சுத்தமாக வைக்கிறது. மேலும், வெந்நீர் குடிப்பது முகப்பரு, சரும அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. 

வலி நிவாரணி: வெந்நீர் குடிப்பது வலி நிவாரணியாக செயல்பட்டு தசை வலி, மூட்டு வலி போன்ற வலிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. மேலும் இதனால் கடுமையான மாதவிடாய் வலியும் குறையும் என சொல்லப்படுகிறது. 

இப்படி தினசரி காலையில் வெந்நீர் குடிப்பது பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. எனவே, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தினசரி வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT