உங்கள் தினசரி உணவில் தானியங்களை சேர்த்துக் கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். தானியங்கள் ஒரு சீரான உணவின் இன்றியமையாத பகுதியாகும் மற்றும் நமது ஒட்டு மொத்த நல்வாழ்வுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துக்கள் இவற்றில் ஏராளமாக உள்ளன. இந்தப் பதிவில் தினசரி தானியங்களை சாப்பிடுவதால் ஏற்படும் சில முக்கிய நன்மைகளைத் தெரிந்து கொள்வோம்.
ஊட்டச்சத்துக்கள்: தானியங்களில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிரம்பியுள்ளன. அவற்றில் தியாமின், நியாசின் மற்றும் போலேட் போன்ற பி வைட்டமின்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதிலும், உணவை ஆற்றலாக மாற்றுவதிலும், செல் செயல்பாட்டை ஆதரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு உடல் செயல்பாடுகளுக்கு தேவையான இரும்பு, மக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற தாது பொருட்களையும் தானியங்கள் வழங்குகின்றன.
செரிமான ஆரோக்கியம்: தானியங்கள் கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்தின் சிறந்த மூலமாகும். நார்ச்சத்து சீரான குடல் இயக்கங்களை ஊக்குவித்து மலச்சிக்கலைத் தடுத்து உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தவும், வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தவும் உதவுவதால் எடை மேலாண்மைக்கு பெரிதளவில் நல்லது.
இதய ஆரோக்கியம்: தினசரி முழு தானியங்களை உட்கொள்வதால் இதய ஆரோக்கியம் மேம்படுவதாக சொல்லப்படுகிறது. தானியங்களில் உள்ள நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாவரக் கலவைகள் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்கவும், கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
எடை மேலாண்மை: உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் உணவில் தானியங்களை சேர்த்துக்கொள்வது நல்லது. முழு தானியங்கள் பொதுவாகவே சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை விட வயிறு நிரம்பிய உணர்வை ஏற்படுத்துகின்றன. இது அதிக கலோரி எடுத்துக்கொள்வதை குறைக்க உதவுகிறது. அவற்றின் நாச்சத்து, செரிமானத்தை மெதுவாக்கி நீண்ட நேரத்திற்கு திருப்தியாக உணர வைக்கிறது. இதனால் அதிகமாக உணவு உட்கொள்வது தடுக்கப்படுகிறது.
அதிக ஆற்றல்: தானியங்கள் கார்போஹைட்ரேட்டுகளின் சிறந்த மூலமாகும். அவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்குகிறது. முழு தானியங்களை உட்கொள்வதால் நாள் முழுவதும் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இது உடல் மற்றும் மன செயல்திறனை அதிகரித்து நம்மை சிறப்பாக வைத்திருக்க உதவுகிறது.
எனவே இத்தகைய நன்மைகளைப் பெற உங்கள் உணவில் தினசரி பலவிதமான தானியங்களை சேர்ப்பது அவசியம். முழு கோதுமை, ஓட்ஸ், பீன்ஸ், பார்லி போன்றவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது மூலமாக, என்றும் ஆரோக்கியத்துடன் நீங்கள் இருக்கலாம்.