பச்சைப்பயறு என்பது கிட்டத்தட்ட அனைவரது வீடுகளிலும் இருக்கும் அத்தியாவசிய உணவுப் பொருளாகும். இது இந்திய உணவுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பருப்பு. இதில் புரதம், நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இதை வாரம் ஒரு முறை எடுத்துக்கொள்வதால் உடலில் பல அதிசயங்கள் நடைபெறும்.
இந்தப் பருப்பை பயன்படுத்தி நாம் பலவிதமான உணவுகளை சமைக்க முடியும். மேலும், இது குளிர்காலம் என்பதால் நமது உணவில் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். ஏனெனில், குளிர் காலத்தில் இது நம்மை சூடாக வைத்திருக்க உதவும். வாரம் ஒரு முறை பச்சைப்பயிறு சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்தும்: பச்சைப்பயிறில் இயற்கையாகவே குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் இருப்பதால் அது நம் இரத்தத்தின் சர்க்கரை அளவை விரைவாக அதிகரிக்க வைக்காது. எனவே, நீரிழிவு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த உணவுத் தேர்வாக அமைகிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் சர்க்கரை உறிஞ்சப்படுவது மெதுவாகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்: பச்சைப்பயிறில் இரும்பு மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளதால் இது நமது நோய் எதிர்ப்பு அமைப்பை ஆரோக்கியமாக மாற்றும். துத்தநாகத்திற்கு வெள்ளை இரத்த அணுக்களை உருவாக்கும் ஆற்றல் இருப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். இதனால் தொற்று நோய்களை எதிர்த்துப் போராடும் ஆற்றல் நமக்குக் கிடைக்கிறது. மேலும், உடல் பாகங்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்ல இரும்புச்சத்து உதவுகிறது. எனவே, இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டுக்கு முக்கியமான ஒன்றாகும்.
எடைக்குறைப்புக்கு உதவும்: பச்சைப்பயிறில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது ஒருவரின் எடை இழப்புக்கு உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்தாகும். புரோட்டின் நமது தசையை பலப்படுத்தி நன்றாக உருவாக உதவுகிறது. அதேசமயம் இவற்றை சாப்பிடும்போது நாம் நிறைவாக உணர்வதால், தேவையில்லாமல் வேறு உணவுகளை அதிகம் சாப்பிட்டு உடலில் அதிகக் கலோரிகள் சேர்வதற்கு வாய்ப்புகள் இல்லை. எனவே, உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு இது நல்ல தேர்வாக அமைகிறது.
செரிமானத்தை சிறப்பாக்கும்: பச்சைப்பயிறு நார்ச்சத்துக்களின் சிறந்த மூலமாக உள்ளது. நார்ச்சத்துக்கள் தான் ஒருவரின் செரிமானத்திற்கு அவசியம். இது நம் செரிமான அமைப்பை சிறப்பாக இயக்கி, மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை தடுக்கிறது. மேலும், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் செழித்து வளர்வதற்கும் நார்ச்சத்து முக்கியம் என்பதால், அது அதிகம் நிறைந்துள்ள பச்சைப்பயிறை கட்டாயம் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.