நமது ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு அன்றாட உணவில் பழங்களை சேர்ப்பது முக்கியமானது. குறிப்பாக கொய்யா பழத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். கொய்யாப்பழம் அதன் தனித்துவமான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகளுக்கு பிரபலமானது. இவற்றை மதிய உணவுக்குப் பின்பு சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக சொல்லப்படுகிறது. இந்த பதிவில் அதன் உண்மைகளைத் தெரிந்து கொள்வோம்.
ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது: கொய்யாப்பழம் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு பழமாகும். இது மதிய உணவுக்குப் பிந்தைய உணவிற்கான சிறந்த தேர்வாகும். இதில் விட்டமின் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை நிறைந்துள்ளதால், ஆரோக்கியமான தோல், நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் பார்வைக்கு கொய்யா பழம் சாப்பிடுவது நல்லதாகும்.
செரிமானத்தை அதிகரிக்கிறது: மதிய நேரத்தில் வயிறுமுட்ட சாப்பிட்ட பிறகு சிலர் அசௌகரித்தை உணர்வார்கள். இதிலிருந்து நீங்கள் விடுபட கொய்யாப்பழம் உங்களுக்கு உதவலாம். கொய்யாவில் நிறைந்திருக்கும் அதிக நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவி, மலச்சிக்கலை தடுக்கிறது. மேலும் இது சீரான குடல் இயக்கத்தை ஊக்குவித்து குடல் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்கிறது.
ரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்தும்: ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு கொய்யாப்பழம் சிறந்த தேர்வாக இருக்கும். இதில் இனிப்பு சுவை இருந்தாலும் கொய்யா குறைந்த கிளைசமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. அதாவது இது சர்க்கரையை ரத்த ஓட்டத்தில் மெதுவாகவே கலக்கச் செய்கிறது. இதன் மூலமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பது தடுக்கப்படுகிறது.
எடைப் பராமரிப்பு: ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது நம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் அவசியம். கொய்யாவில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால், எடை மேலாண்மைக்கு சிறந்த பழமாகும். கொய்யாவில் நிறைந்துள்ள அதிக நார்ச்சத்து, வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கிறது. இதனால் நாம் அதிகமாக உணவு உட்கொள்வது தடுக்கப்படுகிறது.
சரும ஆரோக்கியம்: பொலிவான மற்றும் இளமையான தோற்றம் உங்களுக்கு வேண்டுமென்றால் கொய்யாப்பழம் அவ்வப்போது சாப்பிடுங்கள். கொய்யாவில் உள்ள விட்டமின் சி உள்ளடக்கம் தோல் நெகிழ்ச்சிக்கு உதவி, சுருக்கங்களை நீக்கி வயதான தோற்றத்தைத் தடுக்கிறது. கொய்யாவின் ஆக்சிஜனேற்ற பண்புகள் ஃபிரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. இதனால் உங்கள் சருமம் எப்போதும் துடிப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.