பொதுவாக, பெர்ரி பழங்கள் மற்ற பழங்களை விட ஆற்றல் மிக்கது. அதுவும் புளூ பெர்ரி பழங்கள் மற்ற பழங்களை விட மூன்று மடங்கு அதிக நோய் எதிர்ப்பு ஆற்றல் கொண்டது. இதனால் தற்போதைய, ‘சூப்பர் உணவு’ இதுதான் என்கிறார்கள் போலந்து நாட்டின் கராகாவ் விவசாய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இதிலுள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் புற்றுநோய் காரணிகளை அழித்து விடுகிறது என்கிறார்கள்.
இதனால் இதயநோய், புற்றுநோய், பக்கவாதம், நுரையீரல் நோய்கள், முடக்குவாதம் போன்ற நோய்களின் பயமில்லாமல் இருக்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ‘சூப்பர்ஃபுட்’ என்று அழைக்கப்படும் உணவுகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிரம்பியுள்ளன. இவை நினைவாற்றலுக்கும் மூளை செயல்பாட்டிற்கும் அவசியமானவை.
புளூபெர்ரி பழங்கள் சூப்பர் பழம் என்பதும் அது இருதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கும் ஆற்றல் மிக்கது என்பது தெரிந்தது தான்.தற்போது அது வயதானவர்களுக்கு வரும் ஞாபக மறதி நோயையும் வர விடாமல் தடுக்கும் என்பதை அமெரிக்காவிலுள்ள சின்சினாட்டி பல்கலைக்கழக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
மூளை ஆரோக்கியம் என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமானது என்றாலும், முதியோருக்கு அது ஒரு பிரச்னையாகவும் நோயாகவும் மாறுகிறது. வயது அதிகமாகும்போது நினைவாற்றல் குறையத் தொடங்குகிறது. அம்னீசியா டிமென்ஷியா என பல பிரச்னைகள் ஏற்படும்போது, மறதி ஒரு பிரச்னையாக மாறும். அறிவாற்றல் வீழ்ச்சியடையாமல் இருக்கவும் ஆரோக்கியமாகவும் வாழ உணவும், அதிலும் குறிப்பாக பழங்களும் குறிப்பிடத்தக்க பங்களிக்கின்றன.
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் பிரச்னைகளைத் தீர்க்கவும், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் தேவையான பழங்களில் ஒன்று ப்ளூபெர்ரி என்றழைக்கப்படும் அவுரிநெல்லி. வைட்டமின் ஏ, சி, கே, நார்ச்சத்துக்கள், ஃபோலேட் சத்து, மினரல்கள், இரும்புச்சத்து, ஜிங்க், மாங்கனீசு என பல்வேறு ஊட்டச்சத்துக்களின் சுரங்கமாக இருக்கும் ப்ளூபெர்ரி பழங்களில் உள்ள ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் மூளையின் ஆற்றலை அதிகரிக்கும் வலிமையை பெற்றுள்ளது.
இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் கலவைகள். இவை செல் சேதத்தைத் தடுக்கிறது. புளூ பெர்ரியில் ஃபிளாவனாய்டுகள் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் அது மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.
புளூ பெர்ரிகளை தொடர்ந்து உட்கொள்வது நினைவக செயல்பாட்டை மேம்படுத்தும் என்று ஆராய்ச்சி காட்டுகிறது. ஜர்னல் ஆஃப் அக்ரிகல்சுரல் அண்ட் ஃபுட் கெமிஸ்ட்ரியில் வெளியிடப்பட்ட ஆய்வில், 12 வாரங்களுக்கு தினமும் புளூபெர்ரி ஜூஸை உட்கொண்டவர்களுக்கு நினைவாற்றலில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது.
புளூ பெர்ரி அறிவாற்றல் செயல்திறனை மேம்படுத்தும் திறனைக் கொண்டது. கவனச் சிதறலைத் தடுத்து, கவனத்தை ஈர்க்கும் திறன் மற்றும் விரைவான முடிவெடுக்கும் திறன்களுக்கு வழிவகுக்கும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பெர்ரி பழங்கள் முதுமையை 2.5 ஆண்டுகள் வரை தாமதப்படுத்துகிறது என்று அன்னல்ஸ் ஆஃப் நியூராலஜி (Annals of Neurology) ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
நியூரோடிஜெனரேட்டிவ் நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு, அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பு தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க புளூ பெர்ரி உதவும் என்பதற்கு நம்பிக்கைக்குரிய சான்றுகள் உள்ளன. இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மூளையில் நச்சுப் புரதங்களின் உருவாக்கத்தை எதிர்க்கவும் பயன்படுகின்றன. எனவே, உங்கள் உணவில் அவுரிநெல்லி எனப்படும் ப்ளூபெர்ரியை சேர்த்தால் இளமையாகவும், அறிவாற்றலுடனும் இருக்கலாம்.