உலகில் அபாயகரமான நோய்களுள் ஒன்றாகக் கருதப்படுவது புற்றுநோய் ஆகும். வயது வரம்பின்றி அநேகம் பேர் இந்நோயின் தாக்குதலுக்குட்பட்டு மரணத்தைத் தழுவிச் செல்கின்றனர். கேன்சரில் நான்கு நிலைகள் உள்ளபோதிலும், மூன்றாம் நிலைக்கு வந்த பின்பே அதன் அறிகுறிகள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.
பெண்களை அதிகம் தாக்கக்கூடியது மார்பகப் புற்றுநோய் (Breast cancer). இதன் அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே கேன்சர்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டால் சுலபமாக இந்த நோயை குணப்படுத்தி விடலாம். அதற்கு பெண்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம்.
மிக முக்கியமான அறிகுறியாகக் கருதப்படுவது மார்பகங்கள் மற்றும் அக்குளில் (Under Arm) தோன்றும் கட்டியாகும். இது அநேக நேரங்களில் வலியின்றியும் மிருதுவாகவும் இருக்கும். மார்பகத்தின் அளவிலும் வடிவத்திலும் ஏற்படும் மாற்றம் கேன்சரின் அறிகுறியாக இருக்க வாய்ப்புண்டு. சருமத்தில் தோன்றும் சிறு பள்ளம் அல்லது மடிப்பு போன்ற தோற்றம், மார்பகத்தின் சருமம் சிவந்து காணப்படுவது ஆகியவையும் சில அறிகுறிகளாகும்.
மார்பகக் காம்பு (Nipple) உள் நோக்கி மடிந்து நுனி இரத்தச் சிவப்பாய் மாறுவதும் நிப்பிள் பகுதியில் அவ்வப்போது வலி ஏற்படுவதும் வேறு சில அறிகுறிகள்.
மாதவிடாய் காலத்தில் வருவது போல் இல்லாத தொடர் மார்பக வலி; கட்டி எதுவும் இல்லாமல் மார்பகம் முழுவதும் வீக்கமாய் தோன்றுவது; நிப்பிளை சுற்றியுள்ள சருமப் பகுதி இயற்கைக்கு மாறாக வேறுபட்டு காணப்படுவது; அக்குள் அல்லது கழுத்து எலும்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளின் நிணநீர் கணுக்களில் (Lymph Nodes) ஏற்படும் கட்டி அல்லது வீக்கம் இவை அனைத்துமே மார்பகப் புற்றுநோய்க்கான அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.
ஆகவே, பெண்கள் அனைவரும் தங்கள் மார்பகங்களை அவ்வப்போது சுய பரிசோதனை செய்து கொள்வதும், சில வருடங்களுக்கு ஒருமுறை மம்மோகிராம் எனப்படும் பரிசோதனைச்சாலை டெஸ்ட்டை எடுத்துக்கொள்வதும் வருமுன் காப்பதற்கு உதவும்.