Saccharin https://www.jmcfinechem.com
ஆரோக்கியம்

சர்க்கரை நோயாளிகள் சாக்கரின் பயன்படுத்தலாமா?

எஸ்.விஜயலட்சுமி

சாக்கரின் என்பது மிகவும் மலிவான குறைந்த கலோரிகளைக் கொண்ட இனிப்புகளில் ஒன்றாகும். சர்க்கரை நோயாளிகளும் அதிக உடல் எடை கொண்டவர்களும் கிளைசெமிக் கட்டுப்பாடு மற்றும் எடை இழப்புக்காக சாக்கரின் பயன்படுத்துகின்றார்கள். சர்க்கரைக்கு பதிலாக காபி, டீ போன்றவற்றில் சாக்கரின் கலந்து பருகுகிறார்கள் மற்றும் சாக்கரின் கலந்த இனிப்புகளை உண்கிறார்கள். இது உடலுக்கு நன்மை செய்யுமா? இதன் பயன்கள் மற்றும் பக்க விளைவுகளை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

குளிர்பானங்கள், வேகவைத்த உணவுகள், ஜாம்கள், மிட்டாய்கள், இனிப்புகள், சூயிங்கம் போன்றவற்றில் சாக்கரின் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளைச் சர்க்கரை மற்றும் நாட்டுச் சர்க்கரைக்கு பதிலாக காபி, டீ போன்ற பானங்களிலும் சாக்கரின் கலந்த இனிப்புகள், பானங்களை எடுத்துக்கொள்வதால் குறைந்த அளவு கலோரிகள் உட்கொள்ளப்படுகிறது.

சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் உணவுகள் பற்களுக்கு சேதத்தை ஏற்படுத்தும். ஆனால், சாக்கரின் வாய்வழி சுகாதாரத்தை தருகிறது. பற்களை துவாரங்களில் இருந்து பாதுகாக்கிறது.

பக்க விளைவுகள்:

1. இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் என்று நம்பி நீரிழிவு நோயாளிகள் இதை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், இதன் உண்மையான விளைவுகள் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் இதுவரை வெளியிடப்படவில்லை.

2. சாக்கரின் தொடர்ந்து பயன்படுத்தினால் அது மனிதக் குடலின் பாக்டீரியாக்களின் சம நிலைத்தன்மையை குறைக்கிறது. குடலில் ஏற்படும் நுண்ணுயிர் மாற்றங்கள் டைப் 2 நீரிழிவு, உடல் பருமன் மற்றும் சில அரிதான சந்தர்ப்பங்களில் புற்று நோய்க்கு வழிவகுக்கும்.

3. இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவீதம் பேர் சாக்கரின் கலந்த ஊட்டச்சத்து இல்லாத இனிப்புகளை உண்கிறார்கள். அவர்களுக்கு ஒருவித ஒவ்வாமையை இது உருவாக்குகிறது.

4. குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் போல இல்லாமல், சாக்கரினால் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இது மெதுவாக மற்றும் முழுமை அடையாமல் குடலில் இருந்து உறிஞ்சப்படுகிறது. ஆனால், சிறுநீரில் விரைவாக வெளியேற்றப்படுகிறது. இதனால் பிளாஸ்மாவுக்குள் அதன் சரிவு குறைவதற்கு வழிவகுக்கிறது. இது வழக்கமான சர்க்கரையை விட இனிப்பாக இருக்கும். ஆனால், கலோரிகள் எதுவும் இல்லை. எனவே, உணவிலும் உடலிலும் கூடுதல் ஆற்றல் கிடைக்காது.

5. அதிக அளவில் சாக்கரின் பயன்படுத்தும்போது உணவு மற்றும் பானங்களின் சுவையை குறைக்கும். ஒவ்வாமை உண்டாகும். சிலருக்கு உடலில் அரிப்பு, வீக்கம் அல்லது சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளை தரும். இந்த அறிகுறிகள் இருந்தால் சாக்கரின் பயன்பாட்டை நிறுத்திவிட்டு மருத்துவரை அணுகவும்.

6. கலோரிகள் இல்லை என்றாலும் சில ஆய்வுகள் சாக்கரின் போன்ற செயற்கை இனிப்புகள் உண்மையில் பசியை தூண்டும் என்றும் சிலருக்கு எடை அதிகரிக்க வழிவகுக்கும் என்றும் கூறுகின்றன.

7. சிலருக்கு குடல் சம்பந்தமான அசௌகரியங்களைத் தரலாம். வீக்கம், வாயு அல்லது வயிற்றுப்போக்கு போன்றவற்றுக்கு சாக்கரின் வழிவகுக்கும்.

எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் சர்க்கரையோ அல்லது சாக்கரினையோ மிகக் குறைந்த அளவு அல்லது தவிர்ப்பது நலம்.

சேதமடைந்த மரப்பொருட்கள்... குப்பைகளாக உங்கள் வீட்டில் உள்ளதா? அச்சச்சோ தவறாச்சே...!

குரு நானக் அருளிய அற்புதமான நல் உரைகள்!

சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள் ஒருகாலத்தில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களாம்!

கம்பவுன்டர்களை காணவே முடிவதில்லையே; யார் இவர்கள்? எங்கே போனார்கள்?

ஐயப்பன் தரிசனம் கார்த்திகை மாதத்தில் மட்டும்தானா?

SCROLL FOR NEXT