மஞ்சள் காமாலை என்பது கல்லீரல் தொடர்பான ஒரு நோய். இந்நோயின் ஒரு முக்கிய அறிகுறிதான் கண்கள் மற்றும் தோல் மஞ்சள் நிறமாக மாறுவது. ஆனால், கண்கள் மஞ்சள் நிறமாக மாறினால் அது மஞ்சள் காமாலையாக மட்டுமே இருக்கும் என அவசியமில்லை. வேறு சில காரணங்களாலும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறலாம். இந்த பதிவில் மஞ்சள் காமாலைத் தவிர வேறு எந்த காரணங்களால் கண்கள் மஞ்சள் நிறமாக மாறலாம் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
உடலில் பிலிரூபின்: மஞ்சள் நிறம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ரத்தத்தில் ‘பிலிரூபின்’ என்ற நிறமியின் அளவு அதிகரிப்பதே. இது ரத்த சிவப்பணுக்கள் சிதைந்த பிறகு உருவாகும் ஒரு பொருள். இது கல்லீரலில் செயலாக்கப்பட்டு, பித்த நீரின் மூலம் வெளியேற்றப்படும். ஆனால், கல்லீரல் செயலிழப்பு அல்லது பித்தநாள அடைப்பு போன்ற காரணங்களால் பிலிரூபின் ரத்தத்தில் தேங்கி நிற்கும்போதுதான் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது.
மஞ்சள் நிற கண்களுக்கான மற்ற காரணங்கள்:
சில மருந்துகளை எடுத்துக் கொள்ளும்போது அதன் பக்கவிளைவாக பிலிரூபின் அளவு அதிகரித்து கண்கள் மஞ்சள் நிறமாக மாறச் செய்யலாம்.
கண்புரை, காரினியா நோய்கள் போன்ற சில கண் நோய்களும் கண்களின் நிறத்தை மாற்றி மஞ்சள் நிறமாகக் காட்டும்.
கேரட், பப்பாளி போன்ற சில உணவுகள் அதிக அளவில் சாப்பிடுவதால் தற்காலிகமாக கண்கள் மஞ்சள் நிறமாக மாறும். சில மரபணு நோய்கள் காரணமாக பிலிரூபின் அளவு அதிகரித்து கண்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறும்.
சில தீவிரமான நோய்த் தொற்றுகள் கல்லீரலை பாதித்து பிலிரூபின் அளவை அதிகரிக்கச் செய்யலாம்.
கண்கள் மஞ்சள் நிறமாக இருப்பதற்கு காரணத்தைக் கண்டறிய மருத்துவர் ரத்த பரிசோதனை, கல்லீரல் செயல்பாட்டு பரிசோதனை, கண் பரிசோதனை போன்ற பரிசோதனைகளை செய்வார்கள். கண்கள் மஞ்சள் நிறமாக இருப்பதுடன் காய்ச்சல், வயிற்று வலி, வாந்தி, சிறுநீர் நிறத்தில் மாற்றம் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
எனவே, கண்கள் மஞ்சள் நிறமாக இருந்தால் அது மஞ்சள் காமாலையாக இருக்கும் என நீங்களே நினைத்துக் கொள்ளாதீர்கள். மேலே, குறிப்பிட்டபடி அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். கண்கள் மஞ்சள் நிறமாக இருப்பதை அலட்சியமாகக் கருதாமல் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை பெறுவது அவசியம்.