Anger, Mood Swing, Sadness 
ஆரோக்கியம்

உங்கள் மனநிலையில் திடீர் மாற்றம் ஏற்படுகிறதா? சோகமும் கோபமும் வாட்டுகிறதா? புறக்கணிக்காதீர்கள்!

A.N.ராகுல்

இன்றைய காலகட்டத்தில் வயது வித்தியாசமின்றி சிறிய வயதிலிருந்தே சோகம், வெறுப்பு என்ற பெயரில் நம் மனநிலை பெரிதும் பாதிப்பு அடைகிறது. சிலர் யோகா, தியானம் போன்றவற்றைக் கையாண்டு இதிலிருந்து விடுபடுகிறார்கள். ஆனால், இதையெல்லாம் எல்லோரும் கடைப்பிடிக்கிறார்களா என்றால் அதுதான் இல்லை. நம்மிடம் சிரித்து பேசுவதுபோல் இருந்தாலும் சிலரின் செயல்பாடுகள் வைத்தே அவர்களின் நிலையற்ற மனநிலையைக் கணித்துவிடலாம். அப்படிப்பட்டவர்களை எப்படி மீட்டெடுக்கலாம் என்று தெரிந்துகொள்வோமா...?

பாதிக்கப்பட்டவர்களை எப்படி அடையாளம் காணலாம்?

ஒருவருக்கு மனநல ஆலோசனை தேவை என்பதைக் கண்டறிவது, அவரின் மனதில் புதைத்து வைத்திருக்கும் கவலைகளைத் தீர்ப்பதன் முக்கியமான முதல் படியாகும். தொடர்ச்சியான சோகம், பதற்றம் அல்லது கோபம் போன்ற அறிகுறிகளின் மூலம் அவர்களின் மனநிலையை நாம் கணிக்கலாம். உணவு உண்ணும் அல்லது உறங்கும் பழக்கவழக்கங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள், சமூகத் தொடர்புகளிலிருந்து விலகுதல் மற்றும் எதிலும் நம்பிக்கையின்மையின் வெளிப்பாடுகள் ஆகியவை இந்த பிரச்னைக்கான வலுவான சான்றுகளாகும். அந்நேரத்தில் அவர்களுக்குத் தேவையான பிரச்னைகளைச் சமாளிக்கும் உத்திகளை வழங்கக்கூடிய ஒரு சிகிச்சையாளரிடம் உரையாட வைப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளித்து, அவர்களது மனநிலையை மேம்படுத்தலாம்.

பிறருக்கு எப்படி அறிவுறுத்தலாம்:

பாதிக்கப்பட்டவர்களுக்கு சில நேரங்களில் நீங்கள் இந்தச் சிகிச்சை பற்றிய அறிவுரை வழங்கும்போது ஒரு வித எரிச்சல் கலந்த கோபத்தை அவர்கள் வெளிப்படுத்தலாம். அந்நேரங்களில் இந்த உரையாடல்களை ஒரு வித சாதுரியத்துடன் அணுகுவது மிகவும் அவசியம். அதற்குச் சில மறைமுக வழிகள் பயனுள்ளதாக இருக்கும். எடுத்துக்காட்டாக, இந்தச் சிகிச்சை சம்மந்தமான, உங்கள் சொந்த நேர்மறையான அனுபவங்களை அவர்களிடம் பகிரலாம். இதன்மூலம் வரும் நன்மைகள் பற்றி நீங்கள் சமீபத்தில் படித்த ஒரு நுண்ணறிவுக் கட்டுரையைக் குறிப்பிடலாம். நீங்கள் இந்த அணுகுமுறையைக் கையாண்டு ஒருவருக்குப் பரிந்துரைக்கும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு அது ஒருவித நட்பு ஆலோசனைபோல அமையும். இல்லை, நீங்கள் நேரடியாக இதைப் பற்றி அவர்களிடம் விவரிக்க விரும்பினால் உங்கள் அணுகுமுறை சற்று உணர்திறன்(Sensitive) வாய்ந்ததாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் அவர்களின் நல்வாழ்வு மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையை அவர்கள் உணர்வார்கள். மேலும், இந்த நேரங்களில் நீங்கள் அவர்களுக்கான ஆதரவைக் கண்டிப்பாகத் தருவீர்கள் என்பதை முன்னிலை படுத்துங்கள்.

நம்மையும் நாமே சற்று கணித்துக்கொள்ளலாம்...

என்னதான் பொதுநலம் உங்களின் சுயநலமாக இருந்தாலும், உங்களைப் பற்றிய சுய மதிப்பீடும் மிகவும் முக்கியமானது. முதலில், உங்கள் மன நிலை மற்றும் உடல் நலனில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் தொடர்ந்து அதிக நேரம் சோகமாக அல்லது கவலையாக உணர்கிறீர்களா? அன்றாடப் பணிகளை நிர்வகிப்பது கடினமாகி வருகிறதா? அதன் மூலம் தலைவலி அல்லது வயிற்றுப் பிரச்னைகள் போன்ற விவரிக்கப்படாத உடல் அறிகுறிகள் உள்ளதா என சிந்தித்துப் பாருங்கள். அப்படி இருந்தால் இது உங்களின் மன அழுத்தம் அல்லது உணர்ச்சி போராட்டங்களைக் குறிக்கலாம். எனவே, இந்த அறிகுறிகளை முன்கூட்டியே நீங்களே அங்கீகரிப்பது உங்களுக்குத் தேவையான உதவியை முன்கூட்டியே தேடுவதற்கான ஒரு சக்திவாய்ந்த முன்னெச்சரிக்கையாகும். ஆலோசனை(Counselling) என்பது மன ஆரோக்கியத்தைப் பேணுவதற்கான ஒரு நடவடிக்கையாகும். அதை பயன்படுத்திக்கொள்வது நம் வலிமையை மேலும் அதிகரிப்பதின் அடையாளமே தவிர, அது நம் பலவீனத்தைக் குறிப்பது அல்ல.

இறுதியில், உங்களிடமோ அல்லது மற்றவர்களிடமோ ஆலோசனையின் தேவையை முன்கூட்டியே கண்டறிந்தால், அந்தச் சூழ்நிலையைச் சற்று இரக்கத்துடனும், திறந்த மனதுடனும் அணுகிக்கொள்ளுங்கள். காரணம் மன ஆரோக்கியம் ஒட்டுமொத்த நல்வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகும். மேலும், நிபுணர்களின் வழிகாட்டுதல்(professional guidance) குறிப்பிடத்தக்க நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பது ஆரோக்கியமான, சீரான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது. எனவே, உதவி தேவைப்படும்போது அதை அடையாளம் கண்டு அதற்கேற்ப செயல்படுவது அவசியமாகும். அப்போதுதான் நாமும் நம்மைச் சுற்றியுள்ளவர்களும் தங்களுக்காக படைக்கப்பட்ட இந்த வாழ்க்கையைச் சந்தோஷமாக கழிக்க முடியும்.

மகாலட்சுமியை மகிழ்விக்கும் 6 விஷயங்கள்!

குமுட்டி கீரை கடையலும், உருளைக்கிழங்கு பச்சை பட்டாணி பொரியலும்!

உருவத்தைக் கண்டு யாரையும் எடைபோட வேண்டாம்!

லடாக் பயண தொடர் 6 - உப்புநீர் ஏரியும், செங்கல் நிற இமயமும்!

உங்களுக்கு வாழ்க்கையில் புற்றுநோயே வரக்கூடாதுன்னா இந்த 10 விஷயங்களைக் கடைப்பிடிங்க!

SCROLL FOR NEXT