ஒருவருக்கு தொடர்ந்து இருமல் வந்தால் அது அவருக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தும். சில சமயங்களில் தொடர்ந்து இருமிக்கொண்டிருந்தால் தொண்டை பயங்கரமாக வலிக்கும். பல காரணங்களால் இந்த இருமல் ஒருவருக்கு ஏற்படுகிறது. மூக்கு மற்றும் சுவாசப் பாதையில் ஏற்படும் பிரச்னைகளால் இருமல் வருகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் சிலருக்கு இருமல் அதிகமாக வருவதைப் பார்த்திருப்போம். அதற்கான காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?
இருமலின் முக்கியத்துவமே, தொண்டை மற்றும் மூச்சுக் குழாயில் இருந்து சளியை வெளியேற்றுவதற்கான செயல்முறைதான். நம்மைச் சுற்றியுள்ள காற்று மாசுபட்டிருந்தால் அதன் காரணமாகவே சிலருக்கு இரவு நேரத்தில் அதிகமாக இருமல் ஏற்படும் வாய்ப்புள்ளது. சிலருக்கு அதிக ஈரப்பதம், கொசுவத்தி புகை போன்றவற்றால் தொண்டையில் பூஞ்சை தொற்று ஏற்பட்டு இருமல் வரும்.
இத்தகைய இரவு நேர இருமலை சரி செய்வதற்கு, முதலில் நீங்கள் உறங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே உணவு எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏனென்றால், சிலருக்கு உணவுக் குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் பாதிப்பு இருக்கும். இப்படிப்பட்டவர்கள் சாப்பிட்டவுடன் உறங்கச் செல்லும்போது அதிகப்படியான இருமல் வருவதற்கு வாய்ப்புள்ளது.
இந்த பாதிப்பிலிருந்து விடுபட, மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில் மூக்கு சொட்டு மருந்துகள் பயன்படுத்தலாம். சிலருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தாலும் இரவு நேரத்தில் அதிகப்படியான இருமல் இருக்கும். அத்தகைவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இரவில் உங்களுக்கு அதிகமாக இருமல் வருகிறது என்றால் சாப்பிட்டவுடன் படுப்பதை நிறுத்துங்கள்.
சிலருக்கு வீட்டில் உள்ள கரப்பான் பூச்சிகளின் கழிவு, உமிழ்நீர் போன்றவை கூட இருமலை உண்டாக்கும். எனவே, வீட்டில் அதிகப்படியான கரப்பான் பூச்சிகள் இருந்தால் அதை முதலில் ஒழியுங்கள்.
தூங்குவதற்கு முன்பு தேன் உட்கொள்வதும் இரவு நேர இருமலுக்கு நல்ல தீர்வாக இருக்கும். இது உங்கள் தொண்டையில் உள்ள அதிகப்படியான சளியை தளர்த்த உதவும். அல்லது தேனீரில் கூட தேன் கலந்து குடிக்கலாம்.
அடுத்ததாக, எலுமிச்சைச் சாற்றில் அழற்சியை எதிர்த்து போராடும் பண்புகள் உள்ளதால், இருமல் நேரங்களில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு, தேன், இஞ்சி சாறு கலந்து குடிக்கலாம். அது உங்கள் தொண்டைக்கு இதமான உணர்வைக் கொடுத்து இருமலை கட்டுப்படுத்த உதவும்.