Oil massage for joint pain https://news.lankasri.com
ஆரோக்கியம்

முழங்கால் மூட்டு வலிக்கு காரணமும் உடனடி எளிய தீர்வும்!

கே.எஸ்.கிருஷ்ணவேனி

ம் உடல் ஒரு சிறந்த மெஷின். அதன் எல்லா பகுதிகளுக்கும் வேலை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் எந்தப் பகுதியில் அதிகம் வேலை கொடுக்கவில்லையோ அந்தப் பகுதி பழுதாகிவிடும்.

மூட்டு வலி என்பது மிகவும் பொதுவானது. உலக அளவில் 95 சதவிகித மக்கள் மூட்டு வலி மற்றும் கீல்வாத வலியால் அவதிப்படுகிறார்கள். மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் விறைப்பை போக்கவும், வலியின்றி இயல்பான வாழ்க்கை வாழவும் உடற்பயிற்சி, உணவில் மாற்றங்கள், எண்ணெய் மசாஜ் செய்வது போன்றவை நல்ல பலனைத் தரும்.

முன்பெல்லாம் மூட்டு வலி என்பது வயதானவர்களுக்கு மட்டுமே உண்டான வலியாக இருந்தது. ஆனால், இப்போதைய வாழ்க்கை முறை காரணமாக 35 முதல் 40 வயதிலேயே மூட்டு வலி வருவதை பார்க்க முடிகிறது. இதற்கு உடல் எடை கூடுவது ஒரு காரணம் என்றால் போதிய அளவு உடற்பயிற்சியோ, உணவில் கட்டுப்பாடோ இல்லாததும் ஒரு காரணமாகும்.

கை, கால் மூட்டுகளில் குறிப்பாக மூட்டைச் சுற்றி வீக்கமும் வலியும் ஏற்பட்டு தரையில் சம்மணம் போட்டு உட்கார முடியாமலும், கைகளை இயல்பாக அசைக்கவோ, சுழற்றவோ முடியாமல் வலி ஏற்படும். இப்பொழுது யாராலும் தரையில் அமர்ந்து சாப்பிடவோ, உட்கார்ந்து பேசவோ முடிவதில்லை. காரணம் இந்த மூட்டு வலிதான். எப்படி மெஷினை எண்ணெய் விட்டு லூப்ரிகேட் பண்ணி ஓட விடுகிறோமோ, அதேபோல் நம் முட்டிகளுக்கும் தினமும் சிறிதளவு ஆயில் மசாஜ் செய்வது நல்லது. இனி, எந்தெந்த எண்ணெயில் மசாஜ் செய்ய வலி நிவாரணம் பெறலாம் என்பதைப் பார்ப்போம்.

1. கடுகு எண்ணெய்: மூட்டு வலிக்கு அரை கப் கடுகு எண்ணெயுடன் ஏழு, எட்டு பூண்டுகளை தட்டிப் போட்டு சூடு பண்ணி ஆறியதும் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு தினம் சிறிதளவு முட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தடவி மசாஜ் செய்வது சிறந்த பலனை கொடுக்கும்.

2. பாதாம் எண்ணெய்: வைட்டமின் ஈ, ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த பாதாம் எண்ணெயை சிறிதளவு எடுத்து வலி உள்ள மூட்டுகளில் தடவி மசாஜ் செய்ய எலும்புகள் வலுவடைந்து மூட்டு வலி குறையும்.

3. ஆலிவ் எண்ணெய்: இது ஒரு சிறந்த எண்ணெயாகும். இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், தசை பிடிப்பையும் போக்கக்கூடியது. இரவில் நன்கு உறக்கம் வர உள்ளங்கால்களில் இரண்டு சொட்டு ஆலிவ் எண்ணையை விட்டு பரபரவென்று தேய்க்க, இரண்டே நிமிடத்தில் கண்களை சுழற்றிக் கொண்டு தூக்கம் வரும். இந்த ஆலிவ் எண்ணெயை கை, கால் மூட்டுகளில் சிறிதளவு தடவி மசாஜ் செய்ய மூட்டு வலி பறந்தோடி விடும்.

4. நல்லெண்ணெய்: இதில் தாமிர சத்து, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளதால் இதனை தினம் ஒரு ஸ்பூன் அளவில் எடுத்து இரும்பு கரண்டியில் விட்டு சூடு செய்து பொறுக்கும் சூட்டில் வலி உள்ள மூட்டுகளில் தடவி மசாஜ் செய்ய சிறந்த வலி நிவாரணியாக செயல்படும்.

5. விளக்கெண்ணெய்: ஒரு இரும்பு வாணலியில் விளக்கெண்ணெய் விட்டு இரண்டு ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சூடானதும் அடுப்பை அணைத்து விடவும். பொறுக்கும் சூட்டில் இதனை கை, கால் மூட்டுகளில் எங்கு வலி உள்ளதோ அப்பகுதியில் தடவி நன்கு தேய்த்து ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வலி பறந்து விடும்.

இத்துடன் கால்சியம் நிறைந்த உணவுகளான பால், தயிர், கீரை போன்றவற்றை உண்பதும், சைக்கிளிங், நடைப்பயிற்சி, நீச்சல், யோகா ஆகியவற்றை செய்வதும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற உதவும்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT