Chickenpox Vs Smallpox 
ஆரோக்கியம்

Chickenpox Vs Smallpox: சின்னம்மை, பெரியம்மை என்ன வித்தியாசம்?

கிரி கணபதி

தொற்று நோய்கள் என்று வரும்போது சின்னம்மை மற்றும் பெரியம்மை என இரண்டுமே நாம் பொதுவாகக் கேள்விப்படும் சொற்கள். இவை இரண்டும் தோல்களில் ஏற்படும் வைரஸ் தொற்றுகள் என்றாலும் வெவ்வேறு வைரஸ்களால் ஏற்படுகின்றன. மேலும் இவை தீவிரத்தன்மை, பரவும் விதம் மற்றும் வரலாறு போன்றவற்றின் அடிப்படையில் கணிசமாக வேறுபடுகின்றன. 

Chickenpox Vs Smallpox

  1. நோய்க் காரணிகள்: சிக்கன் பாக்ஸ் வெரிசெல்லா என்றும் அழைக்கப்படுகிறது. இது ஹெர்பஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வெரிசல்லா ஜோஸ்டர் வைரசால் (VZV) ஏற்படுகிறது. இதுவே பெரியம்மை வேரியோலா வைரஸால் ஏற்படுகிறது. இதில் வேரியோலா மேஜர், வேரியோலா மைனர் என இருவகையான வைரஸ்கள் உள்ளன.

  2. பரவும் தன்மை: சின்னம்மை எளிதாக பரவக்கூடியது. சுவாசம் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபரின் கொப்புளங்களில் உள்ள திரவத்துடன் தொடர்பு கொள்வது மூலமாகவோ எளிதில் பரவிவிடும். இது பொதுவாக குழந்தைகளுக்கு அதிகமாகக் காணப்பட்டாலும் எல்லா வயதினரையும் பாதிக்கலாம். பெரியம்மையும் சுவாசம் மற்றும் நேரடித் தொடர்புகள் வாயிலாகப் பரவுகிறது. ஆனால் சின்னம்மை போல பெரியம்மை வேகமாகப் பரவாது. இது பரவுவதற்கு நெருக்கமான தொடர்பு தேவைப்படுகிறது. 

  3. அறிகுறிகள்: சின்னம்மை பொதுவாக காய்ச்சல், தலைவலி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளுடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து உடலில் சிறு சிறு புள்ளிகள் ஏற்பட்டு திரவம் நிறைந்த கொப்புளங்களாக மாறும். பெரியம்மையின் அறிகுறிகளும் தொடக்கத்தில் சின்னம்மை போலவே இருந்தாலும், அவை உடலில் பெரிய கொப்புளங்களை ஏற்படுத்தி சீழ் நிறைந்த புண்களாக மாறுகின்றன. இந்த புண்கள் இறுதியில் ஆறினாலும், நிரந்தர வடுக்கலாக உடலில் அப்படியே இருக்கும். 

  4. தீவிரத்தன்மை: சின்னமையின் தீவிரத்தன்மை லேசாகவே இருக்கும். இது அந்த அளவுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. இருப்பினும் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பிறந்த குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு பலகீனமாக இருப்பவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம். மறுபுறம், பெரியம்மை ஒரு தீவிரமான கொடிய நோயாகும். வரலாற்றில், இது சுமார் 30 சதவீதம் இறப்பு விகிதத்தை கொண்டிருந்தது. இதனால் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்தவர்கள் உடலில் ஏற்பட்ட வடுவால், நீண்டகால இன்னல்களைச் சந்தித்தனர். 

  5. தடுப்பூசி மற்றும் ஒழிப்பு: இப்போது சிக்கன் பாக்ஸ் மக்களுக்கு அதிகமாக வந்தாலும், தடுப்பூசி மூலமாக அது வராமல் பார்த்துக் கொள்ளலாம். மேலும் வழக்கமான நோய் எதிர்ப்பு திட்டங்களைப் பின்பற்றி இந்த நோய் வராமல் பாதுகாப்பாக இருக்க முடியும். மறுபுறம் பெரியம்மை உலக சுகாதார அமைப்பின் உலகளாவிய தடுப்பூசி பிரச்சாரத்தின் காரணமாக, இந்த உலகில் இருந்து முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. 1977 ஆம் ஆண்டில் பெரியம்மையின் கடைசி பாதிப்பு ஏற்பட்டது. மனிதர்களின் முயற்சியால் முழுவதும் அழிக்கப்பட்ட நோயாக பெரியம்மை அறிவிக்கப்பட்டது.  

அன்றிலிருந்து இன்று வரை இந்த நோயால் உலகில் யாரும் பாதிக்கப்படவில்லை. 

உளவியல் விஞ்ஞானிகளுக்கு ஆன்மிகத்தின் அதிசயத்தை உணர்த்திய ஸ்ரீ சத்ய சாயி பாபா!

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

SCROLL FOR NEXT