இன்றைய நவீன வாழ்க்கை முறையில், வேலை பளு, நேரக் கட்டுப்பாடுகள் காரணமாக, பலர் வீட்டில் சமைத்து சாப்பிடுவதை விட வெளியே சாப்பிடுவதையே அதிகம் விரும்புகின்றனர். குறிப்பாக, ஹோட்டல்களில் கிடைக்கும் பல்வேறு வகையான உணவுகள், அதன் சுவையால் மக்களை வெகுவாகக் கவர்ந்திழுக்கின்றன. ஆனால், தினசரி ஹோட்டலில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
தினசரி ஹோட்டலில் சாப்பிடுவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள்:
ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவுகள் பெரும்பாலும் சுவைக்காகவே தயாரிக்கப்படுகின்றன. இதில், கொழுப்பு, சர்க்கரை, சோடியம் அதிகமாகவும், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் குறைவாகவும் இருக்கும். இதனால், தினமும் ஹோட்டலில் சாப்பிடுபவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. இது ரத்தசோகை, எலும்பு பலவீனம், நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
பெரும்பாலான ஹோட்டல்களில் வழங்கப்படும் உணவுகள் அதிக அளவில் இருக்கும். இதனால், நாம் தேவையானதை விட அதிகமாக சாப்பிட நேரிடும். இது உடலில் தேவையற்ற கொழுப்பை சேர்த்து, எடை அதிகரிப்பை ஏற்படுத்தும். உடல் எடை கூடினால், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் செரிமானத்தை பாதிக்கலாம். இதனால், வயிற்றுப்போக்கு மலச்சிக்கல், அஜீரணம் போன்ற செரிமானக் கோளாறுகள் ஏற்படும். மேலும் சிலர், உணவு ஒவ்வாமைக்கு ஆளாகி சரும அரிப்பு, வீக்கம் போன்ற அறிகுறிகளை அனுபவிக்க நேரிடும்.
ஹோட்டல் உணவுகளில் சோடியம் அதிகமாக இருக்கும். நீண்ட காலத்திற்கு இந்த உணவுகளை உட்கொள்வதால், ரத்த அழுத்தம் அதிகரித்து இதய நோய், பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்கள் ஏற்படலாம். சில அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் கல்லீரலை பாதித்து, கல்லீரல் சார்ந்த நோய்களுக்கு வழிவகுக்கும். இந்த நிலை நீண்ட காலம் தொடர்ந்தால், கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக மாறலாம்.
எனவே, தினசரி ஹோட்டலில் சாப்பிடும் பழக்கத்தை நிறுத்திக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ விரும்புபவர்கள் முடிந்தவரை வீட்டிலேயே சமைத்து சாப்பிடுவது நல்லது. ஹோட்டலுக்கு செல்லும்போது கொழுப்பு, சர்க்கரை, சோடியம் குறைவாக இருக்கும் உணவுகளை சாப்பிடுங்கள். நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள உணவுகளை தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும், சரியான அளவில் உணவை உட்கொண்டு, தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் நம்மை பல நோய்களிலிருந்து பாதுகாத்து நீண்ட ஆயுளைத் தரும்.