சாக்லேட் சாப்பிடுவது நம் அனைவருக்குமே பிடித்தமான ஒன்றாகும். ஆனால், சாக்லேட்டில் கூட நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் விஷயங்கள் இருக்கின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
டார்க் சாக்லேட்டிற்கும், மில்க் சாக்லேட்டிற்கும் இருக்கும் பெரிய வித்தியாசம் அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள்தான். இரண்டு சாக்லேட்டிலும் கொக்கோ இருந்தாலும் டார்க் சாக்லேட்டில் கொக்கோ அதிகமாக உள்ளது.
டார்க் சாக்லேட்டில் 50 முதல் 90 சதவீதம் கொக்கோவும், மில்க் சாக்லேட்டில் 10 முதல் 50 சதவீதம் கொக்கோவும் உள்ளது. இதனால் இந்த சாக்லேட்களின் சுவையும் மாறுபடும். டார்க் சாக்லேட் சற்று கசப்பாகவும் மில்க் சாக்லேட் இனிப்பாகவும் இருக்கும். மில்க் சாக்லேட்டில் கண்டிப்பாக 12 சதவீதம் Milk solid இருக்க வேண்டியது அவசியமாகும்.
டார்க் சாக்லேட்டில் பால் சேர்க்கப்படுவதில்லை. அதற்கு பதில் கொக்கோ பீன்ஸில் இருந்து எடுக்கப்பட்ட கொக்கோ பட்டரை சேர்க்கிறார்கள். இரண்டு சாக்லேட்டிலும் சர்க்கரை சேர்க்கப்பட்டிருந்தாலும், மில்க் சாக்லேட்டில் அதிக சர்க்கரையும் டார்க் சாக்லேட்டில் கசப்பு சுவை தெரிய வேண்டும் என்பதற்காக குறைந்த சர்க்கரையும் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, மில்க் சாக்லேட்டுடன் ஒப்பிடுகையில் டார்க் சாக்லேட் ஆரோக்கியமானது என்று சொல்லலாம். ஏனெனில், டார்க் சாக்லேட்டில் பால் கிடையாது மற்றும் சர்க்கரை குறைவாக உள்ளது. டார்க் சாக்லேட்டில் அதிகமாக கொக்கோ உள்ளது. கொக்கோவில் Flavanols உள்ளது. Flavanols நைட்ரிக் ஆக்ஸைட் உருவாவதற்குக் காரணமாக இருக்கிறது.
இது நம்முடைய இரத்த நாளங்களை ரிலாக்ஸாக ஆக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இரத்த ஓட்டம் சீராக இருந்தாலே நோய்கள் வராது. இது நம்மை இதய நோய், ஸ்ட்ரோக் போன்றவற்றிலிருந்து பாதுகாக்கிறது. நம் மனநிலையை ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள டார்க் சாக்லேட் உதவுகிறது.
இதில் இருக்கும் Polyphenol காம்பவுண்ட் ஸ்ட்ரெஸ் ஹார்மோனான cortisolஐ குறைக்க உதவுகிறது. அதனால் ஸ்ட்ரெஸ் குறைந்து மகிழ்ச்சியான மனநிலையில் இருப்போம். எனவே, சாக்லேட் உண்ண வேண்டும் என்று நினைத்தால், மில்க் சாக்லேட்டை விட டார்க் சாக்லேட்டை தேர்வு செய்வதே சிறந்ததாகும்.