Diet Myths and Facts in India 
ஆரோக்கியம்

டயட் இருப்பது பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்!

கிரி கணபதி

நீங்கள் டயட் இருக்க விரும்புகிறீர்கள் ஆனால் எதை சாப்பிட வேண்டும்? எதைத் தவிர்க்க வேண்டும்? என்பது பற்றிய தெளிவு உங்களிடம் இல்லையா. கவலை வேண்டாம் இந்த குழப்பம் உங்களுக்கு மட்டும் இல்லை, டயட் இருக்க விரும்பும் பெரும்பாலானவர்களுக்கு இதே சந்தேகம்தான். ஆனால், இந்தியாவில் டயட் இருப்பது சார்ந்த பல கட்டுக்கதைகள் வலம் வருகின்றன. அதன் பின்னால் உள்ள உண்மையை இந்த பதிவின் வாயிலாகத் தெரிந்துகொண்டு, சரியான முறையில் டயட்டை பின்பற்றி ஆரோக்கியமாக இருப்பது எப்படி என புரிந்து கொள்ளுங்கள். 

கட்டுக்கதை 1: “நெய் சாப்பிடுவது ஆரோக்கியமற்றது.”

உண்மை: நெய் பல நூற்றாண்டுகளாக இந்திய உணவுகளில் பிரதானமாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். மேலும் இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. நெய்யில் ஆரோக்கிய கொழுப்புகள் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் உள்ளன. அவை செரிமானத்திற்கு உதவி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.‌ நெய் சாப்பிடுவது ஆரோக்கியமானது என்றாலும் அதை மிதமாக சாப்பிட வேண்டும். அதிகமாக சாப்பிடுவது உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். 

கட்டுக்கதை 2: “சைவ உணவுகளில் போதுமான புரதம் இல்லை.” 

உண்மை: தாவர அடிப்படையிலான உணவுகளில், இறைச்சியில் இருப்பதை விட அதிக புரதம் இல்லை என்றாலும், இறைச்சி உட்கொள்ளாமல் புரதத் தேவையை தாவர உணவுகள் மூலமாக பூர்த்தி செய்ய முடியும். பருப்புகள், நட்ஸ், டோஃபு, பால் பொருட்கள் போன்றவற்றின் மூலமாக, உடலுக்கு தேவையான புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்களை வழங்க முடியும். 

கட்டுக்கதை 3: “சாப்பிடாமல் இருந்தால் உடல் எடையை குறைக்கலாம்.” 

உண்மை: சாப்பிடாமல் இருந்தால் உடல் எடையைக் குறைக்கலாம் என்கிற யோசனை சரியான உடல் எடை இழப்பு யுக்தி அல்ல. நீங்கள் உணவைத் தவிர்க்கும்போது உங்கள் உடலில் வளர்ச்சிதை மாற்றம் குறைகிறது. இதனால் உடலில் உள்ள கலோரிகளை எரிப்பது கடினமாகிறது. மேலும் உணவை தவிர்ப்பதால், நீங்கள் பசியை கட்டுப்படுத்த முடியாமல் அதிகமாக சாப்பிடுவதற்கு வழிவகுக்கும். இதற்கு மாறாக பகுதிக் கட்டுப்பாட்டை பின்பற்றி, சரிவிகித உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்துவது உடல் எடை குறைவுக்கு வழிவகுக்கும். 

கட்டுக்கதை 4: “சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது செரிமானத்தை பாதிக்கும்.”

உண்மை: சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது செரிமானத்தை பாதிக்கும் என்ற கூற்றுக்கு இதுவரை எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. உண்மையில் உங்களுடைய உடல் நன்கு செயல்பட நீரேற்றமாக இருப்பது அவசியம். இருப்பினும் சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடிப்பது சில அசௌகரியங்களை ஏற்படுத்தலாம். எனவே மிதமாக தண்ணீர் குடிப்பது நல்லது. 

கட்டுக்கதை 5: “கார்போஹைட்ரேட்டுகள் உடலுக்கு மோசமானவை.”

உண்மை: உண்மையில் கார்போஹைட்ரேட்டுகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. அவை உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. இருப்பினும் நீங்கள் எதுபோன்ற கார்போஹைட்ரேட் உணவை உட்கொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். மைதா உணவுகள், பேக்கரி உணவுகள் மற்றும் சர்க்கரை அதிகம் சேர்த்த சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், குறைந்த ஊட்டச்சத்துக்களை வழங்குவதால் அவற்றைத் தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக முழு தானியங்கள் பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படும் கார்போஹைட்ரேட்டுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது. 

இதுபோன்ற கட்டுக்கதைகளை நீங்கள் தெரிந்து கொள்வது மூலமாக, சரியான முறையில் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொண்டு, உங்களது உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக மாற்ற முடியும். இத்துடன் வழக்கமான உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியமானது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். 

மிட் நைட் பிரியாணி ரசிகரா நீங்கள்? அப்போ, அவ்வளவுதான்! 

'கை தந்த பிரான்' என்று அழைக்கப்படும் சிவஸ்தலம் எங்குள்ளது தெரியுமா?

மாதவிடாய் நேரத்தில் முடி கொட்டுகிறதா? அப்ப இதுதான் காரணம்!

கண் பார்வை மேம்பாட்டிற்கு உதவும் 5 பயிற்சிகள்!

ஹனுமனை வெறுக்கும் துரோனகிரி கிராம மக்கள்… ஏன் தெரியுமா?

SCROLL FOR NEXT