Benefits of making cradle using mother's saree Image Credits: blog.fitwin.co
ஆரோக்கியம்

குழந்தைகளுக்கு தாயின் சேலையில் தொட்டில் கட்டுவதன் காரணம் தெரியுமா?

நான்சி மலர்

ற்போதைய காலக்கட்டத்தில், குழந்தைகளைத் தூங்க வைக்க தொட்டில் கட்டும் பழக்கம் மறைந்து வருகிறது. ஆனால், நாம் குழந்தையாக இருக்கும்போது தாயின் சேலையில் தொட்டில் கட்டி தூங்க வைத்ததன் காரணம் தெரியுமா? அதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

தாயின் சேலையில் தொட்டில் கட்டி தரைப்படாமல் ஆட்டி உறங்க வைத்தார்களே, அந்தப் புடைவை தொட்டிலின் அறிவியல் உங்களுக்குத் தெரியுமா? பனிக்குடத்தில் உள்ள நீரில் நீந்தி பழகிய குழந்தை தாய் நடக்கும்போதும், உடல் அசைவின்போதும் ஊஞ்சல் ஆட்டத்தை கருவறையிலேயே உணரும். அந்த இருட்டும், கதகதப்பும் குழந்தைக்குப் பாதுகாப்பு உணர்வைத் தரும்.

தொட்டில் அசையும்போது குழந்தை, தாயின் அசைவுகளை அதில் உணர்ந்து ஆழ்ந்த உறக்கம் கொள்ளும். இடையில் தூக்கத்திலிருந்து குழந்தை விழித்துக் கொண்டாலும் தொல்லையின்றி  தூக்கத்தைத் தொடர பாரம்பரிய தொட்டிலே சிறந்தது என்று பிசியோதெரபி மருத்துவர்கள் சொல்கிறார்கள். ஆனால், இதை அன்றே நம் முன்னோர்கள் பயன்படுத்தி விட்டனர்.

தொட்டிலில் குழந்தையை இட்டு ஆட்டும்போது குழந்தைக்கு ஜீரணக் கோளாறு, வயிற்று வலி சரியாகி விடும் எனவும், குழந்தைகளுக்குக் கழுத்து வலி வராமல் முதுகுத்தண்டை பாதுகாக்கும் எனவும் சொல்கிறார்கள். குழந்தைகளை தொட்டிலில் இடும் பழக்கம் என்றிலிருந்து வந்தது தெரியுமா?

அந்தக் காலத்துப் பெண்கள் பிரசவித்த சிறிது காலத்திலேயே வீட்டு வேலையை செய்யத் தொடங்கிவிடுவார்கள். அன்றைய காலத்தில் வீடும், விவசாய நிலமும் சேர்ந்தே இருக்கும். வரப்பில் இருக்கும் மரத்தில் குழந்தையை தொட்டில் கட்டி தூங்க வைத்தார்கள். புதிதாகப் பிறந்த குழந்தைக்குத் தாயின் வாசமும், கதகதப்புமே அடையாளம். தாயின் புடைவையில் தொட்டில் கட்டும்போது தாய் தன்னோடு இருப்பது போன்ற உணர்வை குழந்தைக்கு ஏற்படுத்தும்.

வேப்பமரத்தடியில் தூங்கும் குழந்தைக்கு காற்று நன்றாக கிடைக்கும். இதனால் குழந்தையும் நன்றாக உறங்கும். பாரம்பரியமான பருத்தி தொட்டில் குழந்தைக்கு தேவையான அரவணைப்பையும், மென்மையையும் தருகிறது. மேலும், இது குழந்தைகளை சுறுசுறுப்பாக வைக்கிறது. குழந்தையை நவீனத் தொட்டிலில் ஆட்டி தூங்க வைப்பதை விட, பாரம்பரிய தொட்டிலே பாதுகாப்பானது.

இந்தப் புடைவை தொட்டிலை கட்ட சோம்பேறித்தனப்பட்டுக் கொண்டு தற்போது நவீன தொட்டில்களை வாங்கி குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறார்கள். குழந்தை தொட்டிலின் மகத்துவத்தை உணர்ந்த வெளிநாட்டினர் தற்போது அதனை ஆன்லைன்னில் விற்பனை செய்கின்றனர். அதை காசுக் கொடுத்தும் வாங்குகிறார்கள் நவீன பெற்றோர்கள். அப்படி செய்வதை விடுத்து, வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் சொல்லி நம்முடைய பாரம்பரிய தொட்டிலைக் கட்டி குழந்தையை அதில் தூங்க வைப்பது குழந்தையின் உடல் ஆரோக்கியத்திற்கும், பாதுகாப்பிற்கும் மிகவும் நல்லது.

ஆந்தைகள் இரவில் பார்ப்பது எப்படித் தெரியுமா?

வளர்சிறார்கள் வளர்சிதை மாற்றம் சிறப்புடன் நடைபெற உட்கொள்ள வேண்டிய உணவுகள்!

ஐந்தாம் நாள் - மகோன்னத வாழ்வருள்வாள் மஹாலக்ஷ்மி!

Scientists Best Quotes: அறிவியலாளர்களின் தலைசிறந்த15 மேற்கோள்கள்! 

ஒரே நாளில் மூன்று விதமான கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்!

SCROLL FOR NEXT