Foods that affect the kidneys 
ஆரோக்கியம்

சிறுநீரகத்துக்கு தீங்கு விளைவிக்கும் 7 வகையான உணவுகள் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

சிறுநீரகங்கள் மனித உடலில் மிக முக்கியமான செயல்பாடுகளைக் கொண்ட உறுப்புகள். அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றியும் சிறுநீரக ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவு வகைகளைப் பற்றியும் இந்தப் பதிவில் பார்ப்போம்.

சிறுநீரகங்களின் செயல்பாடுகள்:

1. சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து கழிவுப் பொருட்கள் நச்சுகள், நீர், உப்பு மற்றும் தாதுக்கள் போன்றவற்றை பிரித்தெடுக்கின்றன.

2. இவை இரத்தத்தின் அளவை சரி செய்கின்றன. இரத்தத்தில் உள்ள சோடியம் பொட்டாசியம், கால்சியம் மற்றும் பாஸ்பேட் போன்ற எலக்ட்ரோலைட்டுகளின் சமநிலையை பராமரிக்கின்றன.

3. இவை இரத்த ஓட்டத்திலிருந்து வளர்சிதை மாற்றக் கழிவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளை வடிகட்டி அகற்றுவதன் மூலம் உடலின் நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது.

4. சிறுநீரின் அளவை சரி செய்வதன் மூலம் உடலின் திரவ சமநிலையை நிர்வகிக்கிறது.

5. இவை வைட்டமின் டியை அதன் செயல்வடிவமாக மாற்றுகிறது. உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சிறுநீரகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

சிறுநீரக ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்  உணவு வகைகள்:

1. அதிக சோடியம் உள்ள உணவுகள்: பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள் மற்றும் பிராசஸ்டு செய்யப்பட்ட சூப்புகளில் அதிக அளவு சோடியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தை அதிகரித்து சிறுநீரகங்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். சீஸ், ஊறுகாய், புளித்த உணவுகள், ரொட்டி, சிப்ஸ், கீரை, கேரட் போன்றவற்றில் சோடியம் அதிகம் உள்ளது. பதப்படுத்தி வைக்கப்பட்ட இறைச்சிகளில் பெரும்பாலும் அதிக அளவு சோடியம் மற்றும் பிரிசர்வேட்டிவ்கள் உள்ளன. இவை சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

2. பாஸ்பரஸ் அதிகம் உள்ள உணவு வகைகள்: கடல் உணவுகள், முழு தானியங்கள், ஓட்ஸ் மற்றும் பழுப்பு அரிசி, பீன்ஸ், பருப்பு, சோயா பீன்ஸ், பட்டாணி, முட்டை, உருளைக்கிழங்கு, ஆட்டுப்பால், கோழி , பால் பொருட்கள், நட்ஸ், விதைகள் மற்றும் சில வகை மீன்களில் அதிக அளவு பாஸ்பரஸ் உள்ளது. சிறுநீரகங்கள் சரியாக செயல்படவில்லை என்றால் இரத்தத்தில் கலந்து விடும்.

3. பொட்டாசியம் அதிகம் உள்ள உணவுகள்: வாழைப்பழங்கள், ஆரஞ்சு, உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. அதிகப்படியான பொட்டாசியம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில், சிறுநீரகங்களால் பொட்டாசியத்தை அதிக திறம்பட வடிகட்ட முடியாது. எனவே, இவற்றை அளவாக எடுத்துக்கொள்வது முக்கியம்.

4. சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்கள்: சோடா, மிட்டாய், பிற சர்க்கரை உணவுகள், பாட்டிலில் அடைக்கப்பட்ட செயற்கை குளிர்பானங்கள் உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். மேலும், இவை சிறுநீரக நோய்க்கான ஆபத்து காரணிகளாக அமையும்.

5. மது: அதிகப்படியான மது அருந்துதல் சிறுநீரகத்தை சேதப்படுத்தும் மற்றும் சிறுநீரக நோய் அபாயத்தை அதிகரிக்கும். எனவே, இந்தப் பழக்கத்தை அறவே விட்டு விட வேண்டும்.

6. அதிக காஃபின்: அதிக காஃபின்  உட்கொள்வது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். அது சிறுநீரகங்களுக்குக் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். காபியை அளவோடு குடிப்பது நல்லது. மேலும், சாக்லேட்டுகள், க்ரீன் டீ, தேநீர், சோடா போன்றவற்றில் அதிக அளவு காஃபின் உள்ளது. இவற்றை குறைவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

7. சிவப்பு இறைச்சி: அதிக அளவு சிவப்பு இறைச்சி உட்கொள்வது சிறுநீரக நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஏனென்றால், அதில் உள்ள அதிக புரத உள்ளடக்கம் மற்றும் கொழுப்பு  வளர்சிதை மாற்றத்தில் இருந்து கழிவு பொருட்களை வடிகட்ட சிறுநீரகங்கள் மீது அழுத்தம் கொடுக்கிறது.

எனவே, மேற்கூறிய உணவுகளை மிகவும் அளவோடு எடுத்துக்கொள்வது நல்லது. சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இந்த சின்னஞ்சிறு காயில் ஒளிந்திருக்கும் சூப்பர் நன்மைகள் தெரியுமா?

குழந்தைகளுக்கு வளர்ச்சி மொழிக் கோளாறு ஏற்படுத்தும் சிக்கல்கள்!

முகத்துக்கு நீராவி பிடிங்க… கரும்புள்ளிகள் எல்லாம் காணாமல் போகும்! 

பார்ப்பதற்கும் கவனிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்திய துரோணாச்சாரியார்!

வயதாகும் வேகத்தைக் குறைக்க விபரீத முடிவெடுத்த தொழிலதிபர்!

SCROLL FOR NEXT