ஆரோக்கியம்

கள்ளச் சாராய உயிர்பலிக்குக் காரணமான மெத்தனால் பற்றி தெரியுமா?

பொ.பாலாஜிகணேஷ்

டந்த இரண்டு நாட்களாகவே தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது கள்ளக்குறிச்சி கருணாபுரம் கள்ளச்சாராய மரணங்கள். இறந்தவர்கள் குடித்த சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன. மெத்தனால் என்றால் என்ன? அது எதற்காகப் பயன்படுகிறது? அது எப்படி மரணத்தை ஏற்படுத்துகிறது என்ற கேள்வி நம் மனதில் தற்சமயம் ஓடிக்கொண்டிருக்கும். மெத்தனால் என்ன என்பதும், அது நமக்கு எப்படி கேடு விளைவிக்கிறது என்பதையும் எப்படி உயிரைக் குடிக்கிறது என்பதையும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மெத்தனால் என்றால் என்ன?

மெத்தில் ஆல்கஹால் என அழைக்கப்படும் மெத்தனால், எத்தனாலை விட அதிக நச்சுத்தன்மை கொண்டது. எளிதில் ஆவியாகக்கூடிய, தீப்பற்றக்கூடிய, நிறமற்ற மெத்தனால் எரிபொருளாகவும் உபயோகப்படுத்தப்படுகிறது. நீர் மற்றும் மெத்தனால் கலவை அதிக செயல்திறன் கொண்ட இயந்திரங்களில் உறைநிலையை குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது.

ஆடை தயாரிப்பு, பெயிண்ட் உற்பத்தி, பிளாஸ்டிக் உற்பத்தி உள்ளிட்ட தொழிற்சாலைகளில் முக்கிய மூலப் பொருளாக மெத்தனால் பயன்படுகிறது. மை, பிசின்கள், பசைகள் மற்றும் சாயங்களை உருவாக்க உதவும் ஒரு தொழில்துறை கரைப்பானாக மெத்தனால் பயன்படுத்தப்படுகிறது. மேலும், பெட்ரோலில் கூட துணைப் பொருளாக மெத்தனால் கலக்கப்பட்டுள்ளது.

மெத்தனால் பயன்பாட்டிற்கு கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. உரிமம் பெற்ற தொழில் நிறுவனங்கள் மட்டுமே இவற்றைப் பயன்படுத்த முடியும். மேலும், மெத்தனாலை வாங்குவது, பயன்படுத்துவது என அனைத்தையும் கண்காணிக்க தனி அமைப்புகள் உள்ளன.

தொழிற் காரணங்களைத் தவிர்த்து பிற வகையான பயன்பாட்டிற்கு மெத்தனாலை பயன்படுத்துவது இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், கள்ளச்சாராயத்தில் அதிக போதைக்காக இந்த மெத்தனால் கலக்கப்படுகிறது. போதைக்காக மெத்தனால் கலக்கப்படும்போது கள்ளச்சாராயம், விஷ சாராயமாக மாறி விடுகிறது. எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால்தான் மது வகைகளில் இருக்கக்கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய கொடிய விஷமாக மாறிவிடுகிறது.

முதலில் ஆறறிவு உள்ள மனிதன், தான் எதை சாப்பிட வேண்டும்? எதை சாப்பிடக் கூடாது, எதை சாப்பிட்டால் நமக்கு நல்லது, எதை சாப்பிட்டால் நமக்கு தீங்கு என்பதை தெரிந்து கொண்டு வாழ்ந்தால் மட்டுமே இவ்வுலகில் வாழ முடியும். வாழ்க்கையில் ஒரு புரிதலும் இல்லாமல் அற்ப சந்தோஷத்திற்காக விலைமதிப்பில்லாத தங்கள் உயிர்களை பல சமயங்களில் இழந்து விடுகிறார்கள். இனியாவது, கள்ளக்குறிச்சி சம்பவமே கடைசியாக இருக்கட்டும் என இறைவனிடம் பிரார்த்திப்போம்.

தாவரங்கள் இரவில் ஆக்ஸிஜனை வெளியிடும் என்பது உண்மையா? 

ஒருவர் தவறு செய்தால் இந்த வழிகளில் அவற்றை சுட்டிக்காட்டுங்கள்!

உடல் எடை குறைக்க விரும்புவோர் பின்பற்ற வேண்டிய லோ கிளைசெமிக் டயட்!

தொழிலதிபர் ஜாக் மாவின் 10 ஊக்கமளிக்கும் பொன்மொழிகள்!

இவர்களைத் தெரியும்; இந்தத் தகவல்கள் தெரியுமா?

SCROLL FOR NEXT