பிறந்த சிசு அருந்தும் முதல் அமிர்தம் தாயின் பால். இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் உயிர்சத்துக்களும் நிரம்பி உள்ளன. அவை குழந்தைகளுக்கு தரும் நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
1. வைட்டமின்கள்: தாய்ப்பாலில் வைட்டமின் ஏ, சி, டி, இ மற்றும் கே நிரம்பியுள்ளது. இவை குழந்தையின் பார்வை திறனுக்கும் நோய் எதிர்ப்பு செயல்பாடுக்கும் மிகுந்த உறுதுணையாக இருக்கின்றன. மேலும், உடல் செயல்பாடுகளுக்கும் அத்தியாவசியமாக விளங்குகிறது. இதில் உள்ள கால்சியம், இரும்பு, துத்தநாகம் போன்றவை குழந்தையின் எலும்பு வளர்ச்சிக்கும் ஆக்ஸிஜன் போக்குவரத்திற்கும் நோய் எதிர்ப்புச் செயல்பாட்டிற்கும் முக்கியமாக இருக்கிறது.
2. லாக்டோஸ் மற்றும் புரதம்: தாய்ப்பாலில் உள்ள லாக்டோஸ் ஆற்றலை அளிக்கிறது. குழந்தையின் சுறுசுறுப்பிற்கு உதவுகிறது. லாக்டோஃபெரின் என்ற புரதம் இரும்பு உறிஞ்சுதலுக்கு உதவுகிறது மற்றும் இது ஆண்டிமைக்ரோபியல் பண்புகளைக் கொண்டுள்ளது.
3. ஒலிகோசாக்கரைடுகள்: இந்த சிக்கலான சர்க்கரைகள் குழந்தையின் ஆரோக்கியமான உடல் பாக்டீரியாவை ஊக்குவிக்கின்றன மற்றும் குழந்தைகளை தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.
4. இம்யூனோகுளோபுலின்ஸ்: இவை குழந்தையின் குடல் மற்றும் பிற சளி சவ்வுகளில் பூச்சிகள் கிருமிகள் போன்றவை உடலில் நுழைவதை தடுக்கின்றன. இதனால் குழந்தைகள் தொற்று நோயிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
5. என்சைம்கள்: தாய்ப்பாலில் என்சைம்கள் நிறைந்துள்ளன. இவை குழந்தையின் செரிமானத்திற்கு உதவுகின்றன. மேலும் குழந்தையின் உடலில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை எளிதாக்குகின்றன.
6. ஹார்மோன்கள்: தாய்ப்பாலில் உள்ள ஹார்மோன்கள் குழந்தையின் பசி மற்றும் வளர்சிதை மாற்றத்தை சீராக்க உதவுகின்றன. தாய்ப்பாலில் வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருள்கள் உள்ளன. இவை மலச்சிக்கல் மற்றும் பெருங்குடல் அபாயத்தை குறைக்கிறது. குழந்தைகளால் எளிதாக தாய்ப்பாலை ஜீரணிக்க முடியும்.
7. கொழுப்புகள்: தாய்ப்பாலில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிரம்பியுள்ளன. குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் பார்வைக்கு முக்கியமான ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் இதில் அடங்கும்.
8. பாசப்பிணைப்பு: தாய்ப்பால் தாய்க்கும் குழந்தைக்கு இடையே வலுவான உணர்ச்சி பிணைப்பை உருவாக்க உதவுகிறது. குழந்தைக்கு தேவையான ஆறுதலையும் பாதுகாப்பையும் வழங்குகிறது.
வளர்ச்சி நன்மைகள்: தாய்ப்பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சிறந்த மூளை வளர்ச்சியை ஆதரிக்கின்றன. குழந்தைகள் அதிக ஐ க்யூ திறனுடன் விளங்குவதற்கு தாய்ப்பால் உதவுகிறது என சில ஆய்வுகள் சொல்கின்றன. சுருக்கமாக, தாயின் பால் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், பாதுகாப்பு கூறுகள் மற்றும் வளர்ச்சியை ஆதரிக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தாய்ப்பாலருந்தும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, ஒவ்வாமை, உடல் பருமன் மற்றும் டைப் 2 நீரிழிவு நோய் ஆகியவை பிற்காலத்தில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.
தாய்ப்பாலின் அவசியம்: இத்தனை விதமான சத்துக்களும் நிரம்பிய தாய்ப்பால் குழந்தைகளுக்கு அவசியம் புகட்டப்பட வேண்டும். பிறந்தது முதல் ஒரு வயது வரை தாய்ப்பால் தருவது மிகவும் நல்லது. குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் குழந்தை வளர்ச்சியை ஆதரிக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. குழந்தையின் மனம் மற்றும் உடல் நல ஆரோக்கியத்திற்கு பாதுகாவலனாக விளங்குகிறது.