பம்பளிமாஸ் பழத்தை, ‘பொமேலோ பழம்’ என்றும் கூறுவர். அப்படிப்பட்ட பம்பளிமாஸ் பழத்தில் எத்தனை நன்மைகள் இருக்கின்றன தெரியுமா? பழங்களில் சிட்ரஸ் பழங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இதில் வைட்டமின் சி இருப்பதால் நிறைய சத்துக்கள் கிடைக்கின்றன.
இதயம் ஆரோக்கியமாக இருக்க, கல்லீரல் வலுப்பெற, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்படுத்த அத்தனைக்கும் பம்பளிமாஸ் பழம் உதவுகிறது. இதில் வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடென்ட் போல் செயல்பட்டு மனித செல்கள் சேதம் அடைவதைத் தடுக்கிறது.
உடலில் உள்ள வெள்ளை அணுக்களைத் தூண்டி நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. இந்த நிலையில், இதில் இருக்கும் நரிஜினின் ஆகியவை கல்லீரலுக்கு பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. கல்லீரல் செயலிழப்பிலிருந்து நம்மை காப்பாற்றிக்கொள்ள இந்த பம்பளிமாஸ் பழத்தை சாப்பிடலாம். இதில் நார்ச்சத்தும் வைட்டமின் சியும் இருப்பதால் உடல் எடை குறையும். கொலஸ்ட்ரால் அளவும் குறையும். தொடர்ந்து இந்தப் பழத்தை சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இது சாத்துக்குடி, ஆரஞ்சு பழம் இனத்தைச் சேர்ந்ததுதான்.
இந்த பழம் குறைந்த அளவு கிளைசெமிக் குறியீடு கொண்டிருப்பதால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பண்பும் இந்தப் பழத்திற்கு உள்ளது. கலோரிகள், நார்ச்சத்து, பொட்டாசியம் என உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. முக்கியமாக, இரத்த அழுத்தத்தை குறைக்கும். பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. இது செரிமானத்திற்கு உகந்தது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலைப் போக்குகிறது. கலோரிகள் குறைந்த பழம் என்பதால் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது. புற்று நோய்க்கு காரணமான செல்களை அழிக்கும். கெட்ட கொழுப்புகளையும் கரைக்கும். எல்லா உறுப்புகளுக்கும் இரத்த ஓட்டம் கிடைக்க வழிவகை செய்கிறது.
பம்பளிமாஸ் பழச்சாறு குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வயிற்றுப்போக்கினால் பாதிக்கப்பட்டவர்கள் பம்பளிமாஸ் பழத்தை சாறு எடுத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு ஏற்படுவது குறையும். இந்தப் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. கண் பார்வை கோளாறுகள் நீங்க வைட்டமின் ஏ சத்து அவசியம்.
நோய் பாதிப்பினால் உடல் இளைத்துப் போனவர்கள் மதிய நேரத்தில் பம்பளிமாஸ் பழத்தை சாப்பிடலாம். இதனால் உடல் பலம் அடையும், சோர்வு நீங்கும். மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் சாப்பிடுவது நல்லது. இரத்த சோகையைப் போக்கும் குணம் பம்பளிமாஸ் பழத்திற்கு உண்டு. இந்தப் பழத்தின் சுளைகளை மதிய உணவுக்கு பின் தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குறைபாடு நீங்கும்.