துளசியை மூலிகைகளின் ராணி என்று அழைக்கின்றனர். துளசியின் இலைகள் மட்டுமல்ல, அதனுடைய விதைகளும் மிகுந்த நன்மை அளிப்பவை. துளசி விதைகளில் கால்சியம், மெக்னீசியம், இரும்பு போன்ற தாதுக்களின் சத்துக்கள் உள்ளன. இவை நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் தசை செயல்பாட்டிற்கும் அவசியமான ஒன்றாகும். உடலுக்குத் தேவையான இரத்த சிவப்பணு உற்பத்திக்கு துளசி விதைகள் உதவுகின்றன. இறைச்சி அல்லது பால் பொருட்களை உண்ணாதவர்களுக்கு துளசி விதைகள் ஒரு வரப்பிரசாதம்.
துளசி விதைகளை எப்படி உட்கொள்ள வேண்டும் தெரியுமா?
இரவு, இரண்டு டீஸ்பூன் துளசி விதைகளை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் காலையில் பல் துலக்கி விட்டு வெறும் வயிற்றில் அந்தத் தண்ணீரை குடித்துவிட்டு விதைகளை உண்ண வேண்டும்.
துளசி விதைத் தண்ணீரை பருகுவதால் உண்டாகும் நன்மைகள்:
1. குளிர்காலத்தில் ஜீரண சக்தி குறைவாகவே இருக்கும். இதனால் செரிமானப் பிரச்னைகள் தலைதூக்கும். துளசி விதைத் தண்ணீரை பருகுவதால் சீரான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது. இதனால் செரிமானம் நான்கு நடைபெற்று, மலச்சிக்கலை தடுக்கிறது. இரைப்பை குடல் அசௌகரியத்தைத் தணிக்கிறது. உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கிறது.
2. துளசி விதைகளில் ஒரு வகை ஒமேகா-3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு நல்ல கொலஸ்ட்ராலை அளித்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
3. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு துளசி விதைகள் நன்கு கைகொடுக்கிறது. இவற்றில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே, பசியைக் குறைத்து, அதிகப்படியாக உண்பதைத் தவிர்க்கிறது.
4. இவற்றில் உள்ள ஜெல் போன்ற ஒரு பொருளால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கிறது. உடலை போதுமான நீரேற்றத்துடன் வைத்திருக்கின்றன.
5. இதில் பல்வேறு ஆக்சிஜனேற்றிகள் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்திருக்கின்றன. இவை உடல் செல்களை பாதுகாக்கின்றன. உடலை புத்துணர்ச்சியுடன் வைக்கிறது.