இள வயது முடக்குவாதம் 
ஆரோக்கியம்

இளம் வயதில் ஏற்படும் முடக்குவாத நோய்க்கான காரணங்கள் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

ருமடாய்டு ஆர்த்ரைட்டிஸ் (RA) எனப்படும் முடக்குவாத நோய் ஒரு நாள்பட்ட தன்னுடல் தாக்க நோயாகும். இதில் நோய் எதிர்ப்பு அமைப்பு உடலின் சொந்த திசுக்களை, குறிப்பாக மூட்டுகளை தவறாகத் தாக்குகிறது. இந்த நோய் வயதானவர்களுக்கு மட்டுமல்ல, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களைக் கூட தாக்கலாம். அதற்கான காரணங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

மரபணு காரணிகள்: இளம் வயதினருக்கு ஏற்படும் முடக்குவாதம் பெரும்பாலும் சில மரபணு காரணிகளுடன் தொடர்புடையது. HLA -DRB1 போன்ற குறிப்பிட்ட மரபணுக்கள், உடலின் சொந்த திசுக்களைத் தாக்கி, நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அதிகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதன் மூலம் RA ஐ உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம்.

சுற்றுச்சூழல் தூண்டுதல்கள்: சில வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகள் மரபணு ரீதியாக எளிதில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இவை உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதித்து முடக்குவாத நோயை வரவழைக்கும்.

புகைப்பிடித்தல்: முடக்குவாத நோய்க்கு ஒரு முக்கியமான காரணி புகைப்பிடித்தல். குறிப்பாக, மரபணு முன்கணிப்பு கொண்ட நபர்களுக்கு இந்தப் பழக்கம் நோயின் தீவிரத்தை அதிகரிக்கும். சிகிச்சையின் செயல் திறனைக் கூட குறைக்கும்.

தொழில்சார் மாசு வெளிப்பாடுகள்: சில மாசுகள் அல்லது சிலிக்கா தூசி போன்ற ரசாயனங்கள் வெளிப்படும் இடங்களில், தொழிற்சாலைகளில் வேலை செய்யும் நபர்களுக்கு விரைவில் முடக்குவாதம் வரலாம்.

ஹார்மோன் காரணிகள்: ஆண்களை விட பெண்களுக்கு ஹார்மோன் மாறுபாடுகளால் முடக்குவாதம் ஏற்படலாம். கர்ப்பகாலம் அல்லது மாதவிடாய் போன்ற குறிப்பிடத்தக்க ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும் காலகட்டங்களில் இந்த நோய் உருவாகிறது. வாய்வழி கருத்தடை மாத்திரைகளின் பயன்பாடும் முடக்குவாதத்தை ஏற்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு அமைப்பு மூட்டுகளை சுற்றியுள்ள சவ்வுகளை சேதப்படுத்துகிறது. இது மூட்டு வீக்கம், மூட்டு சேதம் போன்றவற்றை அளிக்கிறது.

வாழ்க்கை முறை காரணிகள்: அதிக உடல் பருமன் கொண்டவர்களுக்கு இளம் வயதிலேயே முடக்குவாதம் ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே, உடல் எடையை எப்போதும் கட்டுக்குள் வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம்.

உணவு முறை: மோசமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பது, பழங்கள், காய்கறிகளை குறைவாக உண்பது போன்றவை இந்த பாதிப்பை ஏற்படுத்தும். சிவப்பு இறைச்சி அதிகமாக உண்ணக்கூடாது.

மன அழுத்தம்: நாள்பட்ட மன அழுத்தம் முடக்குவாத நோய் உள்ளிட்ட தன்னுடல் தாக்க நோய்களுக்கான சாத்தியமான தூண்டுதலாக அமையக்கூடும். இது நோய் எதிர்ப்பு அமைப்பு செயல்பாட்டை பாதிக்கிறது மற்றும் மூட்டு வீக்கத்தை அதிகரிக்கிறது.

குடல் நுண்ணுயிரிகள்: குடல் நுண்ணுயிரியின் ஏற்றத்தாழ்வு நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதித்து மூட்டு வீக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் முடக்குவாதத்திற்கு வழி வகுக்கக்கூடும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வைட்டமின் டி குறைபாடு: குறைந்த அளவு வைட்டமின் டி சத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கிறது. அது தன்னுடல் தாக்க நோய்களின் ஆபத்தை அதிகரிக்கிறது.

எனவே, சிறு வயதில் இருந்து ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்டு உடலுக்கு நல்ல உடற்பயிற்சிகள் செய்து வந்தால் இந்த நோயை தள்ளிப் போடலாம்.

5 நிமிட பாடலுக்கு கோடிகளில் செலவு தேவையா? இந்திய சினிமாவின் மாயாஜாலம்! 

உடல் சூட்டையும் வலியையும் தணிக்கும் 6 வகை எண்ணெய்கள்!

திருமண வாழ்வில் முதல் ஆறு மாதங்கள் ஏன் முக்கியமானது தெரியுமா?

ஆந்திரா ஸ்பெஷல் தக்காளி பருப்பு கடையல்! 

அருவியின் மேல் கட்டப்பட்ட அழகு கட்டிடம்! ஃபாலிங்வாட்டர் வீடு!

SCROLL FOR NEXT