Lemon Prasadam 
ஆரோக்கியம்

கோயில்களில் தரும் எலுமிச்சை பழத்தின் மகிமை தெரியுமா?

கோவீ.ராஜேந்திரன்

சில கோயில்களில் எலுமிச்சை பழத்தை பிரசாதமாகக் கொடுப்பார்கள். அதை வாங்கி வருவோர் அதை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் வீட்டில் அப்படியே போட்டு விடுவார்கள். கடைசியில் அது யாருக்கும் உதவாமல் காய்ந்து போய்விடும். பின்னர் அதன் மகிமை தெரியாமல் அதை வெளியே எறிந்து விடுவார்கள். அப்படி செய்யாமல் அதை ஜூஸ் போட்டு குடித்தால் எண்ணற்ற பயன்கள் உண்டு என்கிறார்கள்.

எலுமிச்சை சாறு பெண்களுக்கு ஏற்படும் சூதக வலி, மலட்டுத்தன்மை, கர்ப்பப்பை பிரச்னை போன்றவற்றிற்கு மிகவும் நல்லது. இது பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உதவும். எலுமிச்சை சாறு கண் எரிச்சல், வயிற்றுவலி, குடல் புண் போன்றவற்றில் இருந்து விடுபட உதவும்.

முள் உள்ள தாவரங்கள் அனைத்தும் புற்றுநோய் செல்களை கொல்லும் ஆற்றல் கொண்டவை என்கிறது ஆயுர்வேதம். எலுமிச்சை மரமும் இலையுடன் முள் இருக்கும் தாவரம்தான். எலுமிச்சை பழம், அதன் இலை, பட்டை என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.

டான்சில் எனும் தொண்டை புண் அழற்சி விரைவில் ஆற தினமும் 10 சொட்டு எலுமிச்சை சாறு எடுத்து 100 மில்லி வெந்நீரில் கலந்து குடிக்க சரியாகும். தூங்கி எழுந்ததும் மூக்கில் நீர் கொட்டுபவர்கள் தினமும் காலை 10 சொட்டு எலுமிச்சை சாறு எடுத்து 100 மில்லி நீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு 10 நாட்கள் குடித்து வர சரியாகும். இதே முறையில் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் சாப்பிட இந்நோயின் தீவிரம் குறையும்.

எலுமிச்சை சாறு ஒரு சுவையூட்டி நாக்கு சுவை உணர்வு குன்றியவர்கள் எலுமிச்சை சாற்றை நாக்கில் தேய்த்து பின்னர் கழுவி சுத்தம் செய்து வர சுவை உணர்வு மொட்டுகள் சரியாகும். எலுமிச்சையில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, மெக்னீசியம், ஃபோலேட், கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகிய முக்கிய சத்துக்கள் உள்ளன. எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் இரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல் அணுக்களை தடுத்து புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது.

சிறுநீரகத்தில் கல் உருவாகாமல் எலுமிச்சை சாறு தடுக்கும் என்பதை அமெரிக்காவின் சிறுநீரக நல மைய ஆய்வில் கண்டறிந்துள்ளனர். இதற்கு எலுமிச்சையிலுள்ள சிட்ரஸ் காரணம் என்கிறார்கள். இதற்கு தினமும் இரண்டு முறை எலுமிச்சை சாறு குடிக்க நல்ல பலன் கிடைக்கும்.

மஞ்சளும், எலுமிச்சை சாறும் கலந்த பானம் மிகச்சிறந்த மருந்து. இது அல்சைமரை தடுக்கிறது. மனச் சோர்வு அறிகுறிகளை இது குறைக்கிறது, புற்றுநோய் அபாயத்தை தடுக்கிறது, கல்லீரலை பாதுகாக்கிறது, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது, காயங்களை விரைவில் குணப்படுத்தி, வீக்கங்களைக் குறைக்கிறது.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாறு கலந்து குடிக்கும்போது, அது உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உடலில் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. எனவே, அதிக வளர்சிதை மாற்றத்தின் மூலம் அதிக கலோரிகளைக் குறைக்க முடியும். வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து அருந்துவது செரிமான மண்டலத்தில் உள்ள நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. இது வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

எலுமிச்சை பழத்தை அரை மூடி எடுத்து உடல் முழுவதும் குறிப்பாக வியர்வை அதிகம் வரும் இடங்களில் குறிப்பாக அக்குள்களில் தேய்த்து விட்டு குளித்தால் அன்றைய நாள் முழுவதும் வியர்வை நாற்றம் வராமல் இருக்கும். குளித்து முடித்தவுடன் என்றால் ஒரு பஞ்சில் எலுமிச்சை சாறு எடுத்து வியர்வை அதிகம் வரும் இடங்களில் ஒற்றி எடுக்க உடல் வியர்வை நாற்றத்தை எளிதில் போக்கலாம்.

அரைத்த வெள்ளரிக்காய், துளசி மற்றும் புதினாவை சேர்த்து கலந்து அதனுடன் எலுமிச்சை சாறை கலந்து குடித்து வந்தால் சிறுநீரகத்தில் தேங்கிய கற்கள் கரைந்துவிடும். தொடர்ந்து ஒரு மாதத்திற்கு இந்த பானத்தை அருந்தி வந்தால் சிறுநீரகக் கற்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும்.

ரவை அப்பமும், வெஜ் அவலும்!

News 5 – (20.09.2024) உச்ச நீதிமன்றத்தின் யூடியூப் பக்கம் ஹேக்!

விரல்களில், கைகளில் தோல் உரிகிறதா? காரணம் தெரியுமா?

125 வருட மும்பை டப்பாவாலாக்களின் நெட் வொர்க் - ஒரே ஒரு முறை மட்டுமே தவறு! இப்படியும் ஒரு அதிசயம்!

மூக்குத்தி பூச்செடிக்குள் மறைந்திருக்கும் மருத்துவ மகத்துவங்கள்!

SCROLL FOR NEXT