Do you know the glory of olive oil?
Do you know the glory of olive oil? https://tamil.webdunia.com/
ஆரோக்கியம்

’நீர்த்த தங்கம்’ எனும் ஆலிவ் ஆயிலின் மகிமை தெரியுமா?

கோவீ.ராஜேந்திரன்

லகெங்கிலும் நடந்த பலதரப்பட்ட ஆய்வுகளின்படி உலகின் சிறந்த உணவுமுறை என்றால் அது மத்திய தரைக்கடல் பகுதி உணவு முறைதான் என்பார்கள். அதில் இடம்பெறும் முக்கியமான உணவு ஆலிவ் எண்ணெய். மேல்நாட்டில் அதன் தாக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், தற்போது இங்கேயும் அதன் பயன்பாடுகள் அதிகரிக்கத் தொடங்கி உள்ளன. காரணம் அதன் மருத்துவக் குணங்கள்.

ஆலிவ் ஆயிலை, ‘நீர்த்த தங்கம்’ என்று அழைத்தார் வரலாற்று ஆசிரியர் ஹோமர். கிரேக்க மற்றும் ரோம் நாட்டில் ஆலிவ் மரம் சமாதானம் மற்றும் வளமான வாழ்வைக் குறிக்கும் சின்னமாக கருதப்பட்டது.

பயனும் பயன்பாடும்: எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள்தான் ஆலிவ் ஆயிலை முதன்முதலாக அலங்காரப் பொருட்களில் பயன்படுத்தியவர்கள். காரணம், முதுமையைத் தள்ளிப்போடும் பொருட்கள் அதில் இருந்ததுதான்.

ஆலிவ் ஆயில் சமையலுக்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்கிறார்கள். மற்ற சமையல் எண்ணெய்களைக் காட்டிலும் இதில் ஐந்து மடங்கு அதிகமாக வெப்பத்தைத் தாங்கும் சக்தி உடையது. இதனால் இதிலுள்ள சத்துக்கள் பலமுறை சூடுபடுத்தினாலும் குறைவதில்லை என்கிறார்கள். சோயா எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய்யைவிட இது மிக நல்லது என்கிறார்கள்.

தயாரிப்பு: ஆலிவ் ஆயில் பச்சை மரத்திலிருந்தே தயாரிக்கப்படுகிறது. ஆலிவ் ஆயிலின் நிறம், மனம், குணம் எல்லாம் ஆலிவ் பழங்களின் தன்மையை மற்றும் அதனை பக்குவப்படுத்துவதிலும்தான் உள்ளது. ஆலிவ் பழங்களிலிருந்து முதன்முதலாக பிழிந்து எடுக்கப்படும் எண்ணெய்யை ‘எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆயில்’ என்கிறார்கள். இதில் ஒரு சதவீதத்திற்கும் குறைந்த அளவே அசிடிட்டி உள்ளது, புளிப்புத் தன்மை அதிகரிக்க அதிகரிக்க அதன் தரமும் குறையும். அதை வெர்ஜின் ஆயில் என்கிறார்கள். ஆலிவ் ஆயிலை சுத்திகரிக்க சுத்திகரிக்க அதிலுள்ள மருத்துவக் குணங்கள் குறையும் என்கிறார்கள்.

மருத்துவக் குணங்கள்: ஆலிவ் ஆயில் சமையலில், அழகு சாதனப் பொருட்களில், மருத்துவத்தில் ஆரம்பத்தில் இருந்தே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆலிவ் ஆயிலில் அதிகளவில் வைட்டமின் ‘ஈ’ உள்ளது. இதில் இருதய சம்பந்தமான நோய்களை விரட்டும் சக்தி உள்ளது. அதோடு புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும், எலும்புகளுக்கு பாதுகாப்பையும் அளிக்கிறது. எலும்பு மெலிவு நோயான ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கும்.

வர்ஜின் ஆலிவ் எண்ணெய் ஆரோக்கியமான ஒன்று. இது ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிறைந்துள்ளது. இது ஃப்ரி ரேடிக்கல்களின் சமநிலையின்மையால் உண்டாகும் அழற்சி மற்றும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தை குறைக்க உதவுகிறது. அதிக உடல் எடையைக் குறைக்க உதவுகிறது, சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

ஆலிவ் எண்ணெய் 73 சதவிகிதம் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள் கொண்டுள்ளன. இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் சரும வயதை குறைக்கச் செய்யும் என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன. ஆலிவ் எண்ணெயில் டோகோபெரோல்கள் மற்றும் பீட்டா கரோடின் போன்ற ஆன்டி ஆக்ஸிடண்ட்களும், அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட பீனாலிக் சேர்மங்களும் கொண்டுள்ளன. இது புற்றுநோய் ஆபத்துகளைத் தவிர்க்க உதவுகிறது.

நாள் ஒன்றுக்கு 4 முதல் 5 டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யை உபயோகிக்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வருவதில்லை. ஆலிவ் ஆயிலை பயன்படுத்தும் அமெரிக்க பெண்களில் 50 சதவீதம் பேருக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதை ஆய்வுபூர்வமாக நிரூபித்துள்ளனர். காரணம், ஆலிவ் எண்ணெய் கொலஸ்டிராலை உடலில் சேரவிடாமல் தடுத்துவிடுவதுடன், உணவின் நச்சுத் தன்மையை உடலின் உள்ளே நுழையாதபடியும் செய்கிறதாம்.

2012ம் ஆண்டு ஆய்வு ஒன்று ஆலிவ் எண்ணெய் எடுத்துக்கொள்பவர்களுக்கு கடுமையான சருமம் வறட்சி காரணமாக வயதான காலத்தில் ஏற்படும் ஆபத்து குறைவாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 

வலி நிவாரணிகளில் ’ஒலியோகேந்தல்’ எனும் வேதிப்பொருள் உள்ளது. இதுதான் நமது வலிகளைக் குறைக்கும் வேலையை செய்துவருகிறது. தற்போது இந்த ‘ஒலியோகேந்தல்’ ஆலிவ் ஆயிலில் அதிகம் இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.

நெடுங்காலமாக ஆலிவ் எண்ணெயை உணவில் அதிகம் சேர்த்து வருபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் என்றும் அவர்களுக்கு வலியை தாங்கும் சக்தியும் அதிகமாக இருக்கும் என்றும் ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஆலிவ் எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவது நமது வாழ்நாளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என அமெரிக்க ஹார்வர்டு மெடிக்கல் ஸ்கூல் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். காரணம், அது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து விடுதலையளிக்கிறது.

ஹைப்பர் டென்ஷனை கட்டுப்படுத்தும் 11 மூலிகைகள்!

ஆழ்வார்திருநகரியும் ஒன்பது கருட சேவையும் பற்றி தெரியுமா?

கோடைக்கால உடல் பிரச்னைகளை குணமாக்கும் பழம்பாசி சஞ்சீவி மூலிகை!

துரோகம் செய்யும் உறவுகளை சமாளிப்பது எப்படி?

இருமுனைக் கோளாறு நோயின் அறிகுறிகளைக் கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT