Do you know the health benefits of gouda cheese? https://www.healthifyme.com
ஆரோக்கியம்

கவுடா சீஸில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் தெரியுமா?

ஜெயகாந்தி மகாதேவன்

சீஸ் என்பது பாலை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகை சுவையான உணவு என்பது அனைவரும் அறிந்ததே! உலகின் பல்வேறு பகுதிகளிலும் பலர் சீஸ் தயாரிப்பில் ஈடுபட்டு பல வகையான சுவையிலும் அமைப்பிலும் பல நூறு வகை  சீஸ்களை விற்பனை செய்து வருகின்றனர். தூய பசும்பாலை மூலப்பொருளாகக் கொண்டு முதன்முதலாக நெதர்லாண்டில் தயாரிக்கப்பட்டு, பின் அதன் சுவைக்காகவும் கிரீமி டெக்சருக் (texture)காகவும் உலகம் முழுக்க பிரபலமானது கவுடா (Gouda) சீஸ். இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

நம் உடலின் திசுக்கள், தசைகள் மற்றும் எலும்புகள் ஆகியவற்றின் கட்டமைப்புக்கும், அவற்றில் உண்டாகும்  சேதாரங்களை சீரமைப்பதற்கும் அத்தியாவசியமான உயர்தர புரதச் சத்தானது கவுடா சீஸில் அதிகம் உண்டு. எலும்புகள் மற்றும் பற்களை வலுவாகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்துப் பராமரிக்கத் தேவைப்படும் கால்சியம் சத்து கவுடா சீஸில் மிக அதிகளவில் நிறைந்துள்ளது. இது ஆஸ்டியோபொரோசிஸ் எனப்படும் எலும்பு நோய் வருவதைத் தடுக்கவும் உதவுகிறது. கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின் K2 சத்தானது இயற்கையாகவே கவுடா சீஸில் அடங்கியுள்ளது. வைட்டமின் K2 எலும்புகளின் ஆரோக்கியம் மற்றும் இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களின் ஆரோக்கியம் காப்பதில் பெரும் பங்கு அளிக்க வல்லது.

கவுடா சீஸில் நம் உடலுக்குத் தேவையான வைட்டமின் A, வைட்டமின் B12, பாஸ்பரஸ், துத்தநாகம் ஆகிய வெவ்வேறு வகையான ஊட்டச் சத்துக்களும் அடங்கியுள்ளன. இவை, பார்வைத் திறனை மேம்படுத்தவும், நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், மெட்டபாலிசம் சிறப்பாக நடைபெற்று வெளிக்கொணரும் சக்தியின் அளவு அதிகரிக்கவும், நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சிறப்பாக்கவும் உதவி புரிகின்றன.

இதில் கலோரி மற்றும் கொழுப்பின் அளவு அதிகமாக இருந்தபோதும், இதை சரிவிகித உணவுடன் சிறிதளவு சேர்த்து உண்ணும்போது, எடை அதிகரிக்காமல் சம நிலையில் பராமரிக்க முடியும். நொதிக்கச் செய்த மற்ற உணவுகளில் இருப்பது போல கவுடா சீஸிலும் லாக்டோபஸில்லி போன்ற நன்மை தரக்கூடிய நுண்ணுயிரிகள் உள்ளன. இவை ஜீரண மண்டல ஆரோக்கியத்திற்கும் சிறப்பான செரிமானத்துக்கும் உதவி புரிகின்றன.

இதிலுள்ள வைட்டமின் D, கால்சியம் மற்றும் லாக்டிக் அமிலம் போன்றவை இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் பராமரிக்கவும், இதய செயலிழப்பைத் தடுக்கவும், பெருங்குடல், சிறுநீர்ப்பை ஆகியவற்றில் புற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுக்கவும் உதவி புரிகின்றன.

இத்தனை ஊட்டச் சத்துக்கள் நிறைந்த கவுடா சீஸை சாலட், பாஸ்தா, சாண்ட்விச் போன்ற உணவு வகைகளில் குறைந்த அளவில் சேர்த்து உட்கொண்டு நிறைந்த ஆரோக்கியம் பெறுவோம்.

பூச்சிகளின் கூட்டுக்கண்கள் பற்றி தெரியுமா? 

செம்பட்டை முடி கருகருன்னு மாறணுமா? வறண்ட கூந்தல் வளம் பெறணுமா? இதை ட்ரை பண்ணுங்க..!

சிறுகதை: என்னவள்... terms and conditions!

சென்னை அரசு மருத்துவமனையில் ஆன்மீகவாதியின் படம் வந்தக் கதை தெரியுமா?

பச்சை நிற ஏரி, யானைப் பாறை, வெந்நீர் ஊற்று - மிரள வைக்கும் அழகைக் கொண்ட 3 இடங்கள்!

SCROLL FOR NEXT