பனை மரத்தை, ‘கற்பக விருட்சம்’ என்பர். அந்த வகையில் பனையின் அத்தனை அம்சங்களும் பல்வேறு மருத்துவ குணம் மிக்கவையாகத் திகழ்கின்றன. பனை மரத்தின் மூலம் கிடைக்கும் பனங்கிழங்கு திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் அதிக அளவில் உற்பத்தி ஆகின்றன. பனம் விதைகள் முளைக்கும்போது, நிலத்துள் செல்லும் வேரில் மாவுப்பொருள் சேமிக்கப்பட்டுக் கிழங்காக உருவாகின்றது.
சாதாரணமாக கூம்பு வடிவில் உள்ள பனங்கிழங்கை நேரடியாக இட்லிப் பாத்திரத்தில் நீரிலிட்டு ஆவியில் வேக வைத்து அதன் மேல் தோல் மற்றும் நாரினை நீக்கி விட்டு சாப்பிடுவதே வழக்கம். அதே நேரத்தில் தீயில் வாட்டி சுட்டும் சாப்பிடுவது உண்டு. மேலும் பனங்கிழங்கில் புட்டு, வடை, பாயாசம், தோசை, உப்புமா போன்றவற்றையும் செய்வதுண்டு.
மலிவு விலையில் கிடைக்கும் பனங்கிழங்கில் விலை உயர்ந்த பாதாம் பருப்புக்கு இணையான சத்துக்கள் உள்ளதாகக் கூறுகிறார்கள். வைட்டமின் பி மற்றும் சி இந்த கிழங்கில் அதிகம் உள்ள சத்துக்கள் ஆகிறது. உடல் எடை கூட வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு பனங்கிழங்கு பெரிதும் உதவும்.
பனங்கிழங்கில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த விருத்தி தருவதால் இரத்த சோகை தீரும். இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளதால், மலச்சிக்கல் பிரச்னைக்கு சிறந்த மருந்தாகிறது. இந்தக் கிழங்கு குளிர்ச்சி தன்மை கொண்டது. மேலும், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க பனங்கிழங்கு உதவுகிறது. அடிக்கடி நோய்த் தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் பனங்கிழங்கை அடிக்கடி சாப்பிட உடல் பலவீனம் அகன்று நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
பனங்கிழங்கை காய வைத்து பொடி செய்து அந்த மாவை எடுத்து, காலை நேரத்தில் கூழ் அல்லது கஞ்சி செய்து குடித்து வந்தால் உடல் வலிமை பெறும். நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்கிறார்கள். இந்த மாவுடன் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு தேவையான பலன் அதிகம் கிடைக்கும்.
பொதுவாக, மண்ணுக்கடியில் விளையும் கிழங்கு வகைகளில் வாய்வு பிரச்னை இருக்கும் என்பதால் அதை நிறைய பேர் தவிர்ப்பதுண்டு. குறிப்பாக, இந்தக் கிழங்கை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடவே கூடாது என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், இது தவறு நீரிழிவு நோயாளிகளும் எடுத்துக் கொள்ளலாம். காரணம், அதிலுள்ள அதிக அளவிலான நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது.
அதேபோல, பனங்கிழங்கில் உள்ள சில நுண்ணூட்டச் சத்துக்கள் கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது. ஆகவே, அளவுடன் இந்தக் கிழங்கை அனைவரும் பயன்படுத்தலாம். இந்தக் கிழங்கில் சற்று பித்தம் அதிகம் இருக்கும் என்பதால் பனங்கிழங்கை சமைக்கும்போது, அதில் மிளகு சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் உடலில் பித்தம் சேராது. அதேபோல, பனங்கிழங்கு சாப்பிட்டால் சிலருக்கு வாயுத்தொல்லை வரலாம். அப்படியிருந்தால், பூண்டு சேர்த்துக் கொள்வது நல்லது. மலச்சிக்கல் முதல் மூட்டுப் பிரச்னை வரை பல்வேறு உடல்நலப் பாதிப்புகளுக்கு நிவாரணம் தரும் பனங்கிழங்கை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எவ்வித அச்சமும் இன்றி அளவுடன் உண்டு பயன் பெறலாம்.