டிமென்ஷியா அறிகுறிகள் https://www.pennmedicine.org
ஆரோக்கியம்

டிமென்ஷியாவின் உளவியல் அறிவாற்றல் மற்றும் உடல் சார்ந்த அறிகுறிகள் தெரியுமா?

எஸ்.விஜயலட்சுமி

டிமென்ஷியா என்பது ஒரு குறிப்பிட்ட நோய் அல்ல. அறிவாற்றல் நடத்தை மற்றும் உடல் ரீதியான குறைபாடுகளை ஏற்படுத்தும் ஒரு நோய்க்குறியாகும். இது பொதுவாக வயதானவர்களுக்கு ஏற்படும் ஒரு ஆபத்து காரணி. ஆனால், மூளையில் ஏற்படும் பாதிப்பு அல்லது காயம் காரணமாக இது எந்த வயதினரையும் பாதிக்கலாம்.

டிமென்ஷியாவின் அறிவாற்றல் அறிகுறிகள்:

நினைவாற்றல் இழப்பு: இது டிமென்ஷியாவின் முக்கியமான அறிகுறிகளில் ஒன்றாகும். பாதிக்கப்பட்ட நபர்கள் சமீபத்திய நிகழ்வுகள், நெருங்கிய உறவினர்கள், குடும்பத்தினரின் பெயர்களையும் முக்கிய நிகழ்வுகளையும் மறந்து விடக்கூடும்.

தொடர்பு கொள்வதில் சிரமம்: பேசும்போது வார்த்தைகளைக் கண்டுபிடிக்க சிரமப்படுதல், திரும்பத் திரும்ப ஒரே வார்த்தையை சொல்லுவது, மற்றவர்கள் பேசுவதை புரிந்துகொள்வது போன்றவற்றில் சிரமத்தை எதிர்கொள்வார்கள்.

ஆபத்து காரணிகள்: தேதிகள், வீட்டு முகவரி, பாதைகள், காலநிலை மாற்றங்கள் பற்றிய உணர்வு, அடிக்கடி தொலைந்து போதல் போன்ற ஆபத்து காரணிகள் இருக்கலாம்.

தடுமாற்றம்: முடிவுகளை எடுப்பதில் சிரமம் அல்லது சிக்கல்களை தீர்ப்பதில் தடுமாற்றல்,  நிதி மேலாண்மையை கையாள்வது, அன்றாட சமையல்  வேலைகள் மற்றும் வழிமுறைகளை பின்பற்றுவதில் சிக்கல், திட்டமிடுதலில் சிரமம் போன்றவை டிமென்ஷியாவின் ஆரம்ப நிலை அறிகுறிகள்.

உடல் சார்ந்த அறிகுறிகள்: தூக்கக் கோளாறுகளும், தூங்குவதில் சிரமத்தை எதிர்கொள்வது, இரவில் அடிக்கடி கண் விழிப்பது, பகலில் தூங்குவது போன்ற தூக்க நிலை மாறுபாடுகள் ஏற்படும். நோக்கம் இல்லாமல் ஆங்காங்கே சுற்றித் திரியும் போக்கும் இருக்கும். பிறர் துணை இன்றி வீட்டை விட்டு வெளியேறக்கூடும். அது ஆபத்தில் கொண்டு விடும். சிறுநீர்ப்பை அல்லது குடல் செயல்பாடுகளின் மீதான கட்டுப்பாட்டை இழந்து விடுவார்கள்.

நடத்தை அறிகுறிகள்: செயல்களில், பேச்சில் அமைதியின்மை, வேகம், காரணமே இன்றி வருத்தப்படுதல், சமூக தொடர்புகளில் ஆர்வத்தை இழப்பது, தனிமையில் இருப்பது, ஒரே மாதிரியான செயல்களில் ஈடுபடுவது, கேட்ட கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பது போன்ற நடத்தை அறிகுறிகள் டிமென்ஷியா பாதிக்கப்பட்டவர்களில் இருக்கும்.

உளவியல் அறிகுறிகள்:

ஆளுமை மாற்றங்கள்: டிமென்ஷியா பாதிப்பிற்கு உள்ளானவர்கள் அடிக்கடி கவலைப்படுவது, சந்தேகத்திற்கு உரியவர்கள் போல செயல்படுவது போன்ற ஆளுமை மாற்றங்களை அனுபவிக்கலாம்.

மனநிலை மாற்றங்கள்: திடீர் திடீரென கோபப்படுவது, சோகத்தை அனுபவிப்பது, விரக்தி நிலைக்குச் செல்லுவது போன்ற மனநிலையில் விவரிக்க முடியாத மாற்றங்களை அனுபவிப்பார்கள்.

ஆர்வம் இன்மை: எப்போதும் சோகமான மனநிலை, நம்பிக்கை இன்மை, இத்தனை நாட்களாக ஈடுபாட்டுடன் அனுபவித்து  செய்து வந்த செயல்களில் ஆர்வம் இன்மை போன்ற உணர்வுகள் இருக்கும்.

மாயத் தோற்றம்: இல்லாத விஷயங்களை இருப்பது போல பார்ப்பதும், கேட்பதும், உடனிருக்கும் குடும்பத்தினர் நண்பர்கள் நெருங்கிய உறவினர்களை கூட சந்தேகப்படுதல் போன்றவை.

மேம்பட்ட அறிகுறிகள்: கடுமையான நினைவாற்றல் இழப்பு, பிறர் பேசுவதை புரிந்துகொள்ள முடியாமல், தானும் பிறருடன் சரியாக பேசமுடியாத நிலை, அன்றாட பணிகளை செய்ய முடியாமல் சிரமப்படுதல், உணவு உண்பது, உடை உடுத்துதல், தனிப்பட்ட சுகாதாரம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த முடியாமை போன்றவை நிகழும். பிறரை எப்போதும் சார்ந்து இருப்பது போன்ற சூழல் உருவாகும். எனவே, ஆரம்ப காலத்தில் நோயறிதல் மிகவும் முக்கியம். மருத்துவர் அணுகி சிகிச்சை மேற்கொள்வது அவசியம்.

மூலவர்கள் இருவர்; உத்ஸவர்கள் ஐவர்: எந்தக் கோயிலில் தெரியுமா?

வெண்டைக்காயை சுவையாக சமைக்க சில டிப்ஸ்!

ஸ்வெட்டர்களின் சுவாரஸ்யமான வரலாறு பற்றி தெரியுமா?

மாயன்களின் வரலாறு என்ன தெரியுமா?

உலகின் மிகச் சிறிய மரம் எது? வித்தியாசமான இந்த ஐந்து மரங்கள் பற்றி படித்தால் தெரியும்!

SCROLL FOR NEXT