இந்தியாவை பூர்வீகமாகக் கொண்டது முருங்கைக்காய். இதன் தாவரவியல் பெயர் ‘மோரிங்கா ஒலிஃபெரா’ தமிழ் பெயரான முருங்கை என்பதிலிருந்து வந்தது. இன்று உலகெங்கும் பிரபலமாகி உள்ள முருங்கைக்காயில் மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 வகையான அமிலங்கள் முருங்கைக்காயில் உள்ளன. மனித உடலால் தயாரிக்க இயலாத 8 வகை அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். ஆனால், அந்த 8ம் முருங்கைக்காயில் கிடைக்கும்.
முருங்கைக்காய் ஒரு சூப்பர் புட். இதிலுள்ள பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தை விடவும் அதிகம். இதிலுள்ள புரோட்டின், முட்டைக்கு இணையானது. இதிலுள்ள கால்சியம், பசும்பாலை விட 14 மடங்கு அதிகமாம். இதிலுள்ள வைட்டமின் சி, ஆரஞ்சுப் பழத்தைவிட 12 மடங்கு அதிகமாம். மற்ற அனைத்து கீரைகள் மற்றும் காய்களை விட 20 மடங்கு இரும்புச் சத்துக்கள் இதில் உள்ளன. தயிரை விட புரதச்சத்து கொண்டது. வைட்டமின் பி3 வேர்கடலையை விட இரு மடங்கு அதிகமாக இருக்கிறது. வைட்டமின் பி2 வாழையை விட அதிகம். இதிலுள்ள மெக்னீசியம் முட்டையை விட 30 மடங்கு அதிகமாக இருக்கும். எந்த மாதிரியான வைரஸ்களையும் எதிர்க்கும்.
இதிலுள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. மூலநோய் உள்ளவர்கள், சளி பிரச்னை பாதிப்பு உள்ளவர்கள், இரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்னை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்களுக்கு முருங்கைக்காய் அருமருந்தாகும்.
பிஞ்சுக்காய், முற்றிய காய், நடுத்தர காய் என்று 3 வகையான முருங்கைக்காய் உள்ளன.. இந்த மூன்றுமே ஒவ்வொரு மருத்துவ பயன்பாட்டை தன்னுள் வைத்திருக்கின்றன. இருந்தாலும், நடுத்தரமான முருங்கைகாயில் கொஞ்சம் அதிகமான சத்துக்கள் இருக்கிறதாம். அதேசமயம், முற்றிய முருங்கைக்காயை அதிகமாக சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும். சளியும் அதிகரிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
கோடை காலங்களில் முருங்கைக்காயை சாப்பிடச் சொல்கிறார்கள். என்ன காரணம் தெரியுமா? முருங்கைக்காயில் இயற்கையாகவே நீர்ச்சத்து நிரம்பியிருக்கிறது. எனவே, இது கோடை வெப்பத்தின்போது உடலை நீரேற்றமாக வைத்திருக்க பெரிதும் துணைபுரிகிறது. அதுமட்டுமல்ல, முருங்கைக்காய் போன்ற அதிக நீர்ச்சத்து கொண்ட உணவுகளை சாப்பிடுவதால், உடலில் ஏற்படும் திரவ இழப்பை சரிகட்டலாம். உடலும் நாளெல்லாம் குளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும்.
இயற்கையிலேயே குளிர்ச்சித்தன்மை இந்த முருங்கைக்காய்க்கு உள்ளதால்தான், வெப்பமான காலநிலையில் உடலின் உட்புற வெப்பநிலையை தணிப்பதற்கு இதை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த முருங்கைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்ள வேண்டும். இதனால் வெயில் காலத்தில் ஏற்படும் அதிக வியர்வை, சோர்வு, உடல் உஷ்ணம் போன்ற உஷ்ண கோளாறுகள் நீங்கிவிடும். கோடை காலத்தில் வரும் அம்மை நோயிலிருந்து பாதுகாக்கும் காரணம் இதிலுள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள்தான்.
இரத்த சர்க்கரை அளவை சீராக்கி அதை கட்டுக்குள் வைப்பதுதான் முருங்கைக்காயின் பிரதான பயனாகும். அதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் பித்தப்பையின் வேலையை மேம்படுத்துவதால் நீரிழிவு நோயாளிக்குக்கும் நன்மைகளை தருகிறது. தொண்டை கரகரப்பு, சளி, தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்வதில் முருங்கை சிறந்தது.. கீல்வாதம் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படும் நபர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. முக்கியமாக, இந்தியாவில் நிலவும் அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் நுரையீரலுக்கு, சிறந்த தீர்வு முருங்கைக்காய்தான் என்கிறார்கள்.
வாரத்தில் 2 முறையாவது முருங்கைக்காய் சாப்பிட்டால், இரத்தமும், சிறுநீரும் சுத்தமாகும்.. முருங்கைக்காயை சமைக்கும்போது, இதன் விதைகளை குழந்தைகளுக்கு சாப்பிட தரலாம். காரணம், இந்த விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும். அதேபோல, மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு இதில் உள்ள நார்ச்சத்துக்கள் குடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இதில் உள்ள நியாசின், ரிபோஃப்ளாவின் போன்ற பி வைட்டமின்கள் மற்றும் வைட்டமின் பி12 ஆகியவை வாயுத்தொல்லைகளை அகற்றுகின்றன.
முருங்கைக்காயில் உள்ள ஆன்டிபயோடிக்கு உட்பொருட்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. அது உடலில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் இரத்தத்தின் அளவை அதிகரிக்கிறது. அதிக ஆக்ஸிஜன் இரத்தத்தில் இருக்கும்போது, அது இரத்தத்தின் தரத்தை உயர்த்துகிறது. கண் பார்வை கோளாறுகள் குறிப்பாக, தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்றவை சரிசெய்யக்கூடியது இந்த முருங்கைக்காய். கல்லீரல், மண்ணீரல் பிரச்னை உள்ளவர்களுக்கும் இந்த காய் தீர்வு தருகிறது.
இதில் உள்ள சிங்க் சத்து ஆண்களுக்கு மலட்டுத்தன்மை குறைபாட்டை தீர்கின்றன. ஆண்களுக்கு உயிரணுக்களை கூட்டுவதுடன், பெண்களுக்கு கருமுட்டை வலுப்பெற இந்த காய் பேருதவி புரிகிறது. ஆக மொத்தம், குறைந்த விலையில், அதிக சத்துக்கள் நிறைந்த அற்புதம்தான் இந்த முருங்கைக்காய்.