நாம் உண்ணும் உணவில் சேர்க்கப்படும் புளியில், 'எந்த சத்தும் கிடையாது. சுவைக்காகத்தான் சேர்க்கப்படுது' என்று சிலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். அப்படியல்ல அது. புளியிலும் அநேக ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.
புளியில் வைட்டமின் B, C, பொட்டாசியம், மக்னீசியம், இரும்புச் சத்து போன்ற அதிகளவு வைட்டமின்களும் மினரல்களும், ஆன்டி ஆக்சிடன்ட்களும் அடங்கியுள்ளன. இவையெல்லாம் உடலின் பொதுவான ஆரோக்கியத்திற்கும் நன்மைக்கும் பயன்படுபவை. இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்தானது மொத்த ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகளை சிறக்கச் செய்கிறது. அதனால் செரிமானம் தடையின்றி நடைபெறும்.
மேலும், சுலபமாக மலம் வெளியேறும். பித்த நீர் சுரப்பை ஊக்குவித்து, ஜீரண சக்தியை அதிகரிக்கிறது புளி. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.
இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் கொழுப்பைக் குறைத்து இதய நோய்கள் வரும் அபாயத்தைத் தடுக்கின்றன. ப்ளேக்குகளால் ஏற்படும் பெருந்தமனி (Atherosclerosis) தடிப்பையும் குறைத்து இரத்த ஓட்டத்தைச் சீராக்குகின்றன. இதனால் இரத்த அழுத்தம் நார்மல் ஆகிறது.
புளியில் அடங்கியுள்ள பாலிஃபினால் மற்றும் பிளவனாய்டுகள் வீக்கத்திற்கு எதிராக செயல்புரிந்து உடலை இலகுவாக்க உதவுகின்றன. அதன் மூலம் கீல்வாதம் மற்றும் மூட்டு வலிகள் குறையும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
இதிலுள்ள அதிகளவு வைட்டமின் C யானது இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்து உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை பலமடையச் செய்கிறது. அதன் மூலம் தொற்றுநோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடி உடல் ஆரோக்கியம் காக்க முடிகிறது.
புளி இரத்த சர்க்கரை அளவையும் சமநிலையில் வைக்க உதவுவதால் இது ஒரு டயாபெடிக் ஃபிரண்ட்லி உணவாகவும் கருதப்படுகிறது.
புளியை சமையலில் அளவோடு சேர்த்து சுவையான புளிக்குழம்பு, காரக்குழம்பு செய்து உண்ணலாம். நீர்த்தன்மையில் புளிக்கரைசலை வடிகட்டி எடுத்து அதில் சுத்தமான வெல்லமும் சிறிது சுக்குப்பொடியும் கலந்து ஆரோக்கியமான பானகம் செய்தும் அருந்தலாம்.