ஒமேகா 3 என்பது, ஸ்ட்ரோக் மற்றும் இதய நோய்களை உண்டாக்கும் அபாயத்தைத் தரக்கூடிய ட்ரைக்ளிசெரைட்களின் அளவைக் குறைத்து இதயத்தைக் காக்கக்கூடிய தன்மை கொண்டது. உடலுக்குத் தேவையான மொத்த ஒமேகா 3 அளவையும் நம் உடலுக்குள்ளிருந்தே தயாரிப்பது சாத்தியமாகாத ஒன்று என்பதால் அவற்றை நாம் உட்கொள்ளும் உணவுகளிலிருந்தே பெற வேண்டியதுள்ளது. அவற்றுள் மீன் வகைகளில் அதிகளவு ஒமேகா 3 உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் எந்த வகை உணவுகளிலிருந்து இந்தச் சத்தைப் பெறலாம் என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
சியா விதைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்களுடன் ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் அடங்கியுள்ளது. வால்நட்டில் இதயத்திலுள்ள இரத்த நாளங்களை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்ள உதவும் ஒமேகா 3 அதிகமுள்ளது.
ஒரு கப் கிட்னி பீனில் 210 மில்லி கிராம் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. எனவே, கிட்னி பீனில் சமைக்கக்கூடிய விதவிதமான ரெசிபிகளை கற்றுக்கொண்டு அடிக்கடி செய்து நலம் பெறலாம்.
சோயா பீன் எண்ணெயில் சமைக்கும்போது ஒரு வேளை உணவிலேயே உடலுக்கு ஒரு நாளைக்குத் தேவையான ஒமேகா 3 கிடைத்துவிடும்.
வால்நட்டில் உள்ள அளவுக்கு மொச்சை (Edamame) கொட்டையிலும் ஒமேகா 3, ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஃபிளாக்ஸ் விதைகளை தினசரி உண்பதால் ஒமேகா 3 கிடைக்கும். தேவைக்கதிகமான கொழுப்பு குறையும்.
ப்ரஸ்ஸல் ஸ்பிரௌட் (Brussel Sprout) அதிகளவு ஊட்டச் சத்துக்களோடு ஒமேகா 3 வழங்குவதிலும் முன்னிலையில் உள்ளது. நோரி (Nori) போன்ற சில வகை கடற்பாசிகளில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் அயோடின் சத்தானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், தைராய்ட் பிரச்னைகளைத் தீர்க்கவும் உதவுகின்றன.
அசைவம் சாப்பிடாதவர்கள் மேற்கூறிய உணவுகளை அடிக்கடி உட்கொண்டு நன்மை பெறலாம்.