க்ளூட்டாதையோன் (glutathione) என்பது நமது உடலில் உள்ள செல்களில் இயற்கையாகவே இருக்கும் ஒரு சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்சிடென்ட். இது கிளைசின், சிஸ்டைன் மற்றும் க்ளுடாமிக் அமிலம் போன்ற மூன்று அமினோ அமிலங்களால் ஆனது. உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. சருமம் பளபளப்பாக இருப்பதற்குத் தேவையான நிறத்தை அளிக்கிறது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.
உடலில் க்ளூட்டாதையோன் உற்பத்தி குறையும்போது என்ன விளைவுகளை ஏற்படுத்தும்?
வயதாகும்போதோ அல்லது சுற்றுப்புற சூழ்நிலைகளாலோ உடலில் இது சுரப்பது குறைகிறது. உடலை மிகவும் பலவீனம் ஆக்குகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பிறகு அவர்களுக்கு மூட்டு வலியை உண்டாக்குகிறது. மேலும், இது ஆஸ்துமா, கேட்ராக்ட், க்ளூகோமா என்னும் கண் நீர் அழுத்த நோய், நுரையீரல், கல்லீரல் சம்பந்தமான நோய்கள், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உடலில் கொழுப்பு அதிகமாகவது, ஆண், பெண் மலட்டுத்தன்மை, மன நலம் பாதித்தல் போன்றவை வரக்கூடும்.
இது உடலில் குறைவாக இருப்பவர்களுக்கு அடிக்கடி மயக்கம் வரும். குறைந்த அளவு தூங்குவார்கள். எளிதில் உடலில் அடிபட்டு விடும் மற்றும் நோய்த்தொற்று ஏற்படும். ஆனால், இந்த குறைபாட்டிற்கு க்ளூட்டாதையோன் இன்ஜெக் ஷன் எடுத்துக் கொண்டாலோ மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலோ, அவர்களுக்கு வாந்தி, அலர்ஜி, சிறுநீரகக் கோளாறுகள், உடலில் இரத்தம் உறைவது, பார்க்கின்சன் நோய் போன்ற பிரச்னைகளைக் கொண்டு வரும். எனவே, இந்தக் குறைபாட்டை பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் மூலம் சரிசெய்யலாம்.
க்ளூட்டாதையோன் உள்ள உணவுப் பொருள்கள் மற்றும் பழங்கள்: இது பிரட் மற்றும் பால் பொருட்களில் மிகவும் குறைவாகவே இருக்கிறது. சமைத்த உணவுகளை உண்ணும்போது க்ளூட்டாதையோன் சத்தை நமது உடல் அவ்வளவாக எடுத்துக்கொள்வது இல்லை. அதனால், பச்சையாக அல்லது பாதி வேக வைத்த உணவுப் பொருட்கள் சிறந்தது. அஸ்பேரகஸ் என்னும் தண்ணீர்விட்டான் கிழங்கு, அவகோடா பழம், பசலைக் கீரை, கேரட், தர்பூசணி, பிரக்கோலி, காலிபிளவர், முட்டைக்கோஸ், வெங்காயம், பூண்டு, உருளைக்கிழங்கு, மிளகு இவற்றில் அதிக அளவு வைட்டமின்களும் மினரல்களும் க்ளூட்டாதையோன்களும் நிறைந்திருக்கின்றன.
நம் உடலுக்கு மிகவும் தேவையான வைட்டமின்களில் முக்கியமானது வைட்டமின் சி. சரியான அளவில் வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொண்டால் நம் உடலில் க்ளூட்டாதையோன் சுரப்பு அதிகரிக்கும். கிவி, ஸ்ட்ராபெரி, பப்பாளி போன்ற பழங்களும் முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், பிரக்கோலி போன்ற காய்கறிகளிலும் வைட்டமின் சி சத்து நிறைய இருக்கிறது.
செலினியம் என்ற ஆன்ட்டி ஆக்சிடென்ட் க்ளூட்டாதையோன் நன்றாக செயலாற்ற உதவுகிறது. செலினியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் பீன்ஸ், சூரியகாந்தி விதைகள், பிரவுன் அரிசி, காளான்கள், ஓட்ஸ், பசலைக்கீரை, மீன் போன்றவை. மேலும், நமது வாழ்க்கை முறையும் க்ளூட்டாதையோன் நன்றாக சுரக்க உதவி செய்கிறது. தினமும் நன்றாகத் தூங்க வேண்டும். 30 நிமிடம் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி அவசியம். மது அருந்துவது, புகைப்பிடித்தல் போன்ற தீய பழக்கங்களில் இருந்து விடுபடுதல் நல்லது.