ஆயுர்வேதத்தில், 'மூக்கே மூளைக்கான நுழைவாயில்' என்று சொல்லப்படுகிறது. ‘நசியம் சிகிச்சை முறை’ என்பது மூலிகை எண்ணெய், மூலிகைச் சாறு போன்றவற்றை மூக்கினுள் செலுத்தி அதன் மூலமாக நோய்களை குணப்படுத்துவதாகும். இதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
பஞ்சகர்மா சிகிச்சை முறையில் நசியமும் ஒன்றாகும். இது தலைப்பகுதியில் உள்ள கண், காது, மூக்கு, தொண்டை பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது.
நசியம் செய்வதன் மூலமாக உடலில் உள்ள தேவையற்ற கழிவினை நீக்க உதவுகிறது. இது முக்கியமாக தலை, கழுத்து, சுவாசப் பிரச்னையான சைனஸ், அழற்சி, தலைவலி, காது பிரச்னை, நரம்புப் பிரச்னைகளை சரிசெய்ய உதவுகிறது. நெய், எண்ணெய், மூலிகை பவுடர் ஆகியவற்றை மூக்கின் வழியே செலுத்துவதன் மூலம் முக்கடைப்பு பிரச்னைகளை குணப்படுத்த முடிகிறது.
இதை செய்வதன் மூலம் நல்ல மனத்தெளிவு கிடைக்கிறது. தூக்கமின்மை, ஸ்ட்ரெஸ், நல்ல நினைவாற்றல் பெறுவதற்கு இது உதவுகிறது. மேலும், முடி கொட்டுதல், தலைமுடி நரைத்தல் போன்றவற்றை குணப்படுத்தவும் இந்த சிகிச்சை உதவுகிறது. கண், காது, மூக்கு ஆகிய உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
இந்த சிகிச்சையை செய்துகொள்வதால் மனம் ரிலாக்ஸாகி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. தலையில் உள்ள இரத்த நாளங்களை வலிமையாக்கி, இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. உடலில் உள்ள கழிவுகளை நீக்கி டீடாக்ஸிக் செய்வதால் முகப்பொலிவு ஏற்பட்டு சருமம் நன்றாக பளபளப்பாகும். முகத்தில் உள்ள ஆக்னே, பிக்மெண்டேஷன், சரும வறட்சி ஆகியவை நீங்கும்.
இந்த சிகிச்சையை எல்லா வயதினரும் செய்துக்கொள்ளலாம் என்றாலும், 7 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் 80 வயதுக்கு மேல் உள்ள முதியவர்கள் தவிர்த்து விடுவது நல்லது. மேலும், மூக்கில் சிகிச்சை செய்தவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், மாதவிடாய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
இந்த சிகிச்சையை செய்துக் கொள்வதால் நிரந்தரமான பலன்கள் கிடைக்காது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை தொடர்ந்து இந்த சிகிச்சையை செய்து கொள்வது நல்ல பலனைத் தரும். நசியம் சிகிச்சை செய்து 24 மணி நேரத்திற்குள் மூக்கை சிந்துவது, தலைக் குளிப்பது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. இந்த சிகிச்சை செய்துக்கொள்வது சற்று அசௌகரியமாக இருக்குமே தவிர, வலி இருக்காது. உங்களுக்கும் இதுபோன்ற பிரச்னைகள் இருந்தால், இந்த ஆயுர்வேத சிகிச்சை முறையை முயற்சித்துப் பலன் அடையுங்கள்.